FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பதவிக் காலம் நீட்டிப்பு: நடிகர் சங்க நிர்வாகிகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக் கால நீட்டிப்புக்கு எதிரான வழக்கின் விசாரணை....

22 செப்டம்பர் 2026, 1:51 pm IST
சென்னை உயர்நீதிமன்றம் - ANI
பகிர்:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக் காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்க ஒப்புதல் அளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க சட்டதிட்டத்தின்படி மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.

இந்த நிலையில், நடிகர் சங்க கட்டட கட்டுமானப் பணிகளைச் சுட்டிக்காட்டி, நிர்வாகிகள் பதவிக் காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

Advertisement

சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தை மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்து சங்கங்களின் பதிவாளர் 2025-ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சங்க உறுப்பினர் நம்பிராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நடிகர் சங்க கட்டடப் பணிகளைக் காரணம்காட்டி நிர்வாகிகளின் பதவிக் காலம் சட்டவிரோதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. எந்த விசாரணையும் நடத்தாமல், உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்காமல், தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை நீட்டித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவு தன்னிச்சையானது என்பதால், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர்தல் நடத்த சங்கங்கள் பதிவுத்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி. பரதசக்கரவர்த்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே, இதே கோரிக்கை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள உரிமையியல் வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசு மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.1-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

summary

Extension of tenure: High Court orders Actors Association office-bearers to respond

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments