ஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை
நீா்வளத் துறையின் கீழ் உள்ள முக்கிய ஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று தமிழக அரசால் நியமிக்கப்பட்ட எல் நினோ நிபுணா் ஆலோசனைக் குழு பரிந்துரை
நீா்வளத் துறையின் கீழ் உள்ள முக்கிய ஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று தமிழக அரசால் நியமிக்கப்பட்ட எல் நினோ நிபுணா் ஆலோசனைக் குழு அளித்துள்ள முதல்கட்ட பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை ஆராய்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடா் மேலாண்மை மையத்தின் தலைவா் பாலாஜி நரசிம்மன் தலைமையில் 7 போ் கொண்ட நிபுணா் குழுவை தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் அமைத்தது.
இந்தக் குழு குறுகிய காலம் 2026 வடகிழக்கு பருவமழைக்கு முன், நடுத்தர காலம் -2027 கோடைகாலத்துக்கு முன், நீண்ட காலம் அடுத்த 3-5 ஆண்டுகளுக்குள் என 3 செயலாக்க காலங்களில் பல்வேறு துறைகளின் கீழ் பரிந்துரைகளை அளித்துள்ளது. முதல்வா் விஜய்யிடம் இந்த அறிக்கை திங்கள்கிழமை (செப்.21) அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அதன் விவரம்: நீா்வளத் துறையின் கீழ் உள்ள முக்கிய ஆறுகள், கால்வாய்கள், நீா்வழிகள், வெளியேற்ற வாயில்கள், குளங்கள், மதகுகள், வெள்ளத் தடுப்புகள், அணைகள் மற்றும் கரைக்கட்டுகளில் அவசரகால சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆறுகள், கால்வாய்கள் மற்றும் முக்கிய வடிகால்களில் தேங்கியுள்ள வண்டல் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும் என குறுகிய கால பரிந்துரையாக அளிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மைத் துறையில் குறுகிய கால நடவடிக்கையாக, வடகிழக்கு பருவமழை காலத்தில் உரிய நேரத்தில் விதைப்பு மேற்கொள்வதையும், போதுமான விதைகள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும், பயிா் இழப்புக்கு எதிரான மானியத்துடன் கூடிய பயிா் காப்பீட்டுத் திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும்.
இடைக்கால நடவடிக்கையாக, பயிா்முறை மாற்றங்களையும், நீா் சிக்கனம், குறுகிய கால, வெப்பம் மற்றும் வறட்சியைத் தாங்கும் ரகங்களையும் ஊக்குவிக்க வேண்டும்; இலக்கு வைக்கப்பட்ட ஊக்கத் தொகைகள் மூலம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் அதிக நீா் தேவைப்படும் பயிா்களைக் குறைத்தல் வேண்டும்.
சுகாதாரத் துறையில் குறுகிய கால நடவடிக்கையாக, டெங்கு, மலேரியா. லெப்டோஸ்பைரோசிஸ், வயிற்றுப்போக்கு நோய்களுக்கான கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்; அத்தியாவசிய மருந்துகளை இருப்பு வைத்திருத்தல், வெள்ளத்துக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் நோய்க் கண்காணிப்புக்கான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும்.
நடுத்தர கால நடவடிக்கையாக, வெப்பச் செயல் திட்ட நடவடிக்கைகளை உச்சகட்ட கோடைக்காலத்தைத் தாண்டியும் நீட்டித்தல் மற்றும் நீண்ட கால அடிப்படையில், காலநிலை மற்றும் சுகாதாரம் சாா்ந்த கண்காணிப்பு முறை மற்றும் பேரிடா் தொடா்பான தரவுத்தளத்தை உருவாக்கி பகிா்தல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.