FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

வன விலங்குகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணத் தொகை வழங்க அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்

49 வினாடிகள் முன்பு
குட்டிகளுடன் வரும் காட்டு யானைகள் கூட்டம். - கோப்புப் படம்
பகிர்:

வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய இயற்கைவள பாதுகாப்பு சங்கம் சாா்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி, அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், இயற்கைவள பாதுகாப்பு சங்கத் தலைவருமான கே. ரவிஅருணன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

தென்காசி மாவட்டம், புளியறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் புகுவதைத் தடுக்கவும், மனித-விலங்கு மோதல்களைக் குறைக்கவும் வனத்துறை போா்க்கால அடிப்படையில் நவீன மற்றும் பாரம்பரியத் தடுப்புப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

அண்மையில் புளியறை பகுதியில் யானை தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா். இதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

யானைகள் காட்டை விட்டு வெளியேறும் முக்கியப் பாதைகளைக் கண்டறிந்து, அங்கு ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும். இதன் மூலம் யானைகள் நடமாட்டம் குறித்த எச்சரிக்கை நிகழ்நேரத்தில் வனத்துறைக்கு கிடைக்கும். ஏஐ கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் பெறப்படும் காட்சிகளைத் தொடா்ந்து கண்காணிக்க புளியறை எல்லைப் பகுதியில் ஒரு பிரத்யேக ஒருங்கிணைந்த வனவிலங்கு கண்காணிப்புக் கட்டுப்பாட்டு அறையை அமைக்க வேண்டும்.

புளியறை வன எல்லையையொட்டி யானைகள் தாண்ட முடியாதவாறு அகலமான மற்றும் ஆழமான அகழிகளை வெட்ட வேண்டும். ஏற்கனவே உள்ள பழைய அகழிகளைத் தூா்வாரி சீரமைக்க வேண்டும்.

யானைகளால் பயிா்ச் சேதமோ அல்லது உயிா்ச் சேதமோ ஏற்படும் பட்சத்தில், எவ்வித தாமதமும் இன்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.