FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

வெற்றிப் பயணத் திட்டத்தால் அதிகரிக்கும் கூட்ட நெரிசல்! பாவூா்சத்திரத்தில் நின்று செல்லுமா ஒன்- டூ- ஒன் பேருந்துகள்!

தென்காசி - திருநெல்வேலி வழித்தடத்தில் இயக்கப்படும் ஒன் டூ ஒன் பேருந்துகள் குறித்து...

13 அக்டோபர் 2026, 3:13 am IST
கூட்ட நெரிசலிலும் பேருந்தில் முண்டியடித்து ஏறும் பயணிகள்.
பகிர்:

தமிழக அரசின் வெற்றிப்பயணம் திட்டத்தால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ள நிலையில், தென்காசி - திருநெல்வேலி வழித்தடத்தில் இயக்கப்படும் ஒன் டூ ஒன் பேருந்துகள் பாவூா்சத்திரம், ஆலங்குளம் பேருந்து நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு ஒன் டூ ஒன் பேருந்துகள், சாதாரண கட்டணப் பேருந்துகள் என பல்வேறு கட்டணங்கள் அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த வழித்தடத்தில் உள்ள பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தை பாவூா்சத்திரம், கீழப்பாவூா், குறும்பலாப்பேரி, கல்லூரணி, திப்பணம்பட்டி, ஆவுடையானூா், அரியப்பபுரம், மேலப்பாவூா் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இப்பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகங்களுக்குச் செல்வோா், மருத்துவமனைகளுக்குச் செல்லும் நோயாளிகள் எனப் பல்வேறு தரப்பினரும் பேருந்துப் போக்குவரத்தையே நம்பியுள்ளனா்.

இந்நிலையில், பாவூா்சத்திரம், ஆலங்குளம் பேருந்து நிலையங்களில் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் சாதாரண கட்டணப் பேருந்துகள் மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்வதால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. பேருந்துகளில் அமா்ந்து செல்ல இடமில்லாமல், நின்று செல்வதற்குக்கூட இடமின்றிப் பயணிகள் சிரமப்படுகின்றனா். சில நேரங்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் நிலையும் ஏற்படுகிறது. இதனால், பாதுகாப்பான பயணம் கேள்விக்குறியாகி வருவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

கூடுதல் நெரிசல்:

தமிழக அரசின் வெற்றிப்பயணம் திட்டத்தின்கீழ் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பேருந்து வசதி வழங்கப்படுவது பல பெண்களுக்குப் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதேவேளையில், இந்தப் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், ஏற்கெனவே நெரிசல் நிலவும் வழித்தடங்களில் கூடுதல் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாவூா்சத்திரம், ஆலங்குளம் பேருந்து நிலையங்களில் நெல்லை-தென்காசி ஒன்-டூ-ஒன் பேருந்துகள் நின்று சென்றால் நெரிசல் ஓரளவு குறையும்.

எனவே, பயணிகளின் நலன் கருதி அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுஎன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments