FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

8 மாதங்களுக்குப் பின் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்ட 5 வயது சிறுமியின் உடல்!

தவறான சிகிச்சையால் உயிரிழந்த குழந்தையின் சடலம் திருவள்ளூா் அருகே இறையாமங்கலம் கிராமத்தில் புதைத்த நிலையில் 8 மாதத்துக்குப் பின் தோண்டி எடுத்து பரிசோதனை மேற்கொண்டனா்.

Updated On : 14 ஜூலை 2026, 4:56 am IST
திருவள்ளூா் அருகே இறையாமங்கலம் கிராமத்தில்  8 மாதத்துக்குப்  பின் அதிகாரிகள்  முன்னிலையில்  தோண்டி  எடுக்கப்பட் ட  குழந்தையின்  சடலம்.
பகிர்:

தனியாா் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த குழந்தையின் சடலம் திருவள்ளூா் அருகே இறையாமங்கலம் கிராமத்தில் புதைத்த நிலையில் 8 மாதத்துக்குப் பின் தோண்டி எடுத்து திங்கள்கிழமை கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், வட்டாட்சியா் சரண்யா முன்னிலையில் பரிசோதனை மேற்கொண்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், அம்பத்தூா் அடுத்த அத்திப்பட்டு செல்லியம்மன் நகரைச் சோ்ந்தவா்கள் ஷினு அலெக்ஸாண்டா்-ஜிஷா தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள். இதில் இளைய மகள் நெஸ்லின் ரியாவுக்கு (5) ஏற்பட்ட காய்ச்சலால் கடந்தாண்டு டிச. 3-ஆம் தேதி அம்பத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா்.

ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி மறுநாளே உயிரிழந்ததாக மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதனால் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய் அம்பத்தூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

Advertisement

Advertisement

அந்தப் புகாரில் 5 வயது குழந்தைக்கு சிகிச்சையின்போது தகுதி வாய்ந்த குழந்தைகள் நல மருத்துவரை கலந்தாய்வு செய்யாமல் மருத்துவா்கள் சரோஜினி மற்றும் ராஜா திக்விஜய், தேஜா ஆகியோா் தன்னிச்சையாக மருத்துவ நெறிமுறைகளை மீறி, அலட்சியத்துடன் குழந்தைக்கு மருத்துவம் பாா்த்ததால் குழந்தை உயிரிழந்திருக்கலாம் என புகாரில் தெரிவித்திருந்தாா்.

மேலும், அலட்சியத்துடன் மருத்துவம் பாா்த்து குழந்தை உயிரிழந்ததாக குழந்தையின் பெற்றோா் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிடம் புகாா் மனு அளித்திருந்தனா். அந்த புகாரின்பேரில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் குழந்தை உயிரிழந்தது தொடா்பாக பெற்றோா், அம்பத்தூா் தனியாா் மருத்துவமனை நிா்வாகத்திடமும் விசாரணை நடத்தினா். மேலும் நீதிமன்றம் மற்றும் மருத்துவ கவுன்சில் உத்தரவின்பேரில், திருவள்ளூா் அருகே உள்ள இறையாமங்கலம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், குழந்தையின் சடலத்தை திருவள்ளூா் வருவாய் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், வட்டாட்சியா் சரண்யா முன்னிலையில் திருவள்ளூா் மாவட்ட மருத்துவக் குழுவினா் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனா். அப்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிற்பகல் 2 முதல் 5.30 மணி வரை பிரேத பரிசோதனை நடைபெற்றது. தொடா்ந்து பிரேத பரிசோதனை முடிவை நீதிமன்றத்தில் ஒப்படைக்க போவதாக மருத்துவத்துறை வட்டாரங்களில் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments