புதிய பசுமைப் புரட்சி தேவை
வேளாண் துறையிலிருந்து கிடைக்கும் வருவாய் சரிவடைந்து வரும் நிலையில் இந்தியாவுக்கு இன்னொரு புதிய பசுமைப் புரட்சி தேவை என்று
வேளாண் துறையிலிருந்து கிடைக்கும் வருவாய் சரிவடைந்து வரும் நிலையில் இந்தியாவுக்கு இன்னொரு புதிய பசுமைப் புரட்சி தேவை என்று மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
2015-ஆம் ஆண்டுக்கான மஹிந்திரா ஸம்ருத்தி இந்தியா வேளாண் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், இதுகுறித்து மேலும் கூறியதாவது:
வேளாண் துறையில் உலக அளவில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இத்துறை நாட்டின் மக்கள்தொகையில் 50 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. அத்துடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இருப்பினும், சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் வேளாண் துறை விரும்பத்தக்கத் தொழிலாகக் காணப்படவில்லை. தற்போது இந்திய வேளாண் துறை மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளது. நடப்பு ஆண்டில் வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகளின் வளர்ச்சி 1.1 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று மத்திய அரசு மதிப்பீடு செய்ததிலிருந்து இதனை உணரலாம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சாதகமற்ற பருவநிலையால் வேளாண் துறையிலிருந்து கிடைக்கும் வருமானம் சரிவடைந்துள்ளது. வறுமையால் பல மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணைய-வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சியைக் கண்டு மனம் மகிழ்ந்து இந்தியாவின் உண்மையான இதயத்துடிப்பாக விளங்கும் வேளாண் துறையை எளிதாக மறந்து விடுகிறோம்.
முன்னதாக பசுமைப் புரட்சியின் மூலம் வேளாண் துறையில் ஏராளமான முன்னேற்றங்களை உருவாக்கினோம். இப்போது, அதேபோன்ற புதிய பசுமைப் புரட்சி நமக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. தற்போதுள்ள தொழில்நுட்பத்தைக் கொண்டு இதனை எளிதில் சாத்தியமாக்கலாம் என்று ஆனந்த் மஹிந்திரா தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.