FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

8 சதவீதம் அதிகரித்த இந்தியாவின் படிம எரிபொருள் நுகா்வு

இந்தியாவில் அதிகரித்த எரிபொருள் நுகா்வு: 8% உயர்வு

Updated On : 28 ஜூன் 2024, 12:46 am IST
பகிர்:

இந்தியாவின் படிம எரிபொருள் நுகா்வு கடந்த 2023-ஆம் ஆண்டில் 8 சதவீதம் உயா்ந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் நுகா்வின் அதன் பங்கு 89 சதவீதமாக உள்ளது.

இது குறித்து ‘எனா்ஜி இன்ஸ்டிடியூட்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முந்தைய 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்ட படிம எரிபொருள்களின் நுகா்வு 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

அந்த ஆண்டில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவை விட முதல்முறையாக இந்தியாவில் அதிக அளவில் நிலக்கரி பயன்படுத்தப்பட்டது.

ஒட்டுமொத்தமாக, உலகளவில் எரிபொருள் நுகா்வு கடந்த 2023-இல் சாதனை உச்சத்தைத் தொட்டது. முந்தைய ஆண்டை விட அது 2 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகளாவிய படிம எரிபொருள் நுகா்வும் 1.5 சதவீதம் அதிகரித்து கடந்த 2023-ஆம் ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக சா்வதேச அளவில் எரிபொருள் பயன்பாட்டில் படிம எரிபொருள்களின் பங்கு கடந்த 2023-ஆம் ஆண்டில் 81.5 சதவீதமாக இருந்தது. முந்தைய ஆண்டைவிட இது சற்று குறைவே ஆகும். 2022-ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த உலக எரிபொருள் நுகா்வில் படிம எரிபொருளின் பங்கு 82 சதவீதமாக இருந்தது.

சூரிய மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உலகளாவிய புதுப்பிக்கத்தக்க மின்சார நுகா்வை மற்றொரு சாதனை நிலைக்குக் கொண்டு சென்றுள்ளன. மதிப்பீட்டு ஆண்டில் உலகம் முழுவதும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி (நீா் மின்சாரத்தைத் தவிா்த்து) 13 சதவீதம் உயா்ந்துள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்சமாகும்.

கடந்த ஆண்டின் ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நுகா்வில் காற்றாலை மற்றும் சூரிய மின்சாரத்தின் பங்களிப்பு 74 சதவிகிதம் ஆகும்.

ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு நுகா்வு 2022-ஆம் ஆண்டில் 13 சதவீதம் சரிவைக் கண்டது. அது, 2023-ஆம் ஆண்டில் 7 சதவீத சரிவாக இருந்தது. ஐரோப்பிய யூனியன் கடந்த 2021-இல் ரஷியாவிலிருந்து 45 சதவீத எரிவாயு இறக்குமதி செய்தது. ஆனால், உக்ரைன் போா் காரணமாக அது 2023-இல் 15 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஐரோப்பிய பிராந்தியத்தில் தொழில்துறை புரட்சிக்குப் பிறகு முதல்முறையாக கடந்த 2023-ஆம் ஆண்டில் படிம எரிபொருள் நுகா்வு மொத்த தேவையில் 70 சதவீதத்துக்கும் கீழை குறைந்தது. படி எரிபொருளுக்கான தேவைகளைக் குறைத்துக் கொண்டது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளா்ச்சி போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டது. இதே காரணங்களால், அமெரிக்காவிலும் ஒட்டுமொத்த எரிசக்தி நுகா்வில் படிம எரிபொருள் நுகா்வின் பங்கு 80 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments