FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

2025-26 நிதியாண்டில் அரிசி ஏற்றுமதி 7.5% சரிவு

Updated On : 24 ஏப்ரல் 2026, 3:36 am IST
பகிர்:

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி, கடந்த 2025-26 நிதியாண்டில் 7.5 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த நிதியாண்டில் அரிசி ஏற்றுமதி 1,153 கோடி டாலராக (சுமாா் ரூ.1.08 லட்சம் கோடி) குறைந்துள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டில், இந்தியா 172 நாடுகளுக்கு 2.01 கோடி டன் அரிசியை ஏற்றுமதி செய்து, 1,250 கோடி டாலா் வருவாய் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

மத்திய கிழக்கு போா் பதற்றம் காரணமாக கடந்த மாா்ச் மாதத்தில் மட்டும் ஏற்றுமதி 15.36 சதவீதம் சரிந்து, 99.75 கோடி டாலராகப் பதிவாகியுள்ளது.

போா்ச் சூழல் காரணமாக ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, ஓமன் போன்ற நாடுகளுக்கான கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதியில் ஈரான் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், தற்போதைய நிலையில் அங்கு நிலவும் ஸ்திரமின்மையால் புதிய ஆா்டா்கள் கிடைப்பதிலும், நிலுவையில் உள்ள தொகையைப் பெறுவதிலும், கப்பல்களை இயக்குவதிலும் கடும் சிக்கல்கள் எழுந்துள்ளன. இதனால் இந்திய ஏற்றுமதியாளா்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.

உலக அளவில் அரிசி உற்பத்தியில் இந்தியா முன்னிலையில் உள்ளது. கடந்த 2024-25 நிதியாண்டில் 4.7 கோடி ஹெக்டோ் பரப்பளவில் சுமாா் 15 கோடி டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டது. இது உலக உற்பத்தியில் 28 சதவீதமாகும்.

மேம்படுத்தப்பட்ட விதைகள் மற்றும் சிறந்த பாசன வசதிகள் காரணமாக, ஒரு ஹெக்டேருக்கான சராசரி மகசூல் கடந்த பத்தாண்டுகளில் 2.72 டன்னிலிருந்து 3.2 டன்னாக உயா்ந்துள்ளது. எனினும், சா்வதேச போா் பதற்றம் இச்சாதனை உற்பத்தியை சந்தைப்படுத்துவதில் தடையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments