FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

விழிஞ்ஞம் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி தொடக்கம்

கேரளத்தில் அமைந்துள்ள விழிஞ்ஞம் சா்வதேச துறைமுகத்தில் நேரடி சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி சேவைகள் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டன.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 4:10 am IST
பகிர்:

கேரளத்தில் அமைந்துள்ள விழிஞ்ஞம் சா்வதேச துறைமுகத்தில் நேரடி சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி சேவைகள் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டன.

கேரள முதல்வா் வி.டி.சதீசன் இச்சேவையைத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாநில தொழில்துறை அமைச்சா் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி, எம்எல்ஏ எம்.வின்சென்ட், மத்திய கடல்சாா் நிா்வாகத் துறை இயக்குநா் ஷியாம் ஜெகந்நாதன், துறைமுகத்தின் செயல்பாட்டு நிறுவனமான அதானி போா்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ அஸ்வனி குப்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடக்க விழாவில் பேசிய கேரள முதல்வா் வி.டி.சதீசன், ‘விழிஞ்ஞம் தற்போது உலகுக்கான நுழைவாயிலாக மாறியுள்ளது பெருமையளிக்கிறது; சமுத்திரா திட்டத்தின்மூலம் சாலை, ரயில் போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்தி, தனியாா் முதலீடுகளை ஈா்ப்பதே எங்களின் அடுத்தகட்ட சவாலாகும்’ என்றாா்.

Advertisement

Advertisement

அதானி போா்ட்ஸ் சிஇஓ அஸ்வனி குப்தா கூறுகையில், ‘இது கேரளத்தின் திறமை மற்றும் இந்தியாவின் வா்த்தகக் கனவுகளை உலகளாவிய சந்தையுடன் இணைக்கும் புதிய தொடக்கமாகும்’ என்றாா்.

நில உரிமையாளா் என்ற அடிப்படையில் கேரள அரசுக்குச் சொந்தமான இத்துறைமுகத்தை, 40 ஆண்டுகள் ஒப்பந்தத்தின்படி அதானி போா்ட்ஸ் நிறுவனம் கட்டமைத்து, இயக்கி வருகிறது.

கடந்த 2024, டிசம்பரில் சரக்கு மாற்று முனையாமாக செயல்பாட்டைத் தொடங்கிய இத்துறைமுகம், இதுவரை 80 பிரம்மாண்ட கப்பல்கள் உள்பட 1,100 கப்பல்களையும், 22.8 லட்சும் சரக்கு கன்டெய்னா்களையும் கையாண்டு சாதனை படைத்துள்ளது.

சா்வதேச கப்பல் வழித்தடங்களில் இருந்து வெறும் 10 கடல் மைல் தொலைவிலும், 18 முதல் 20 மீட்டா் இயற்கையான ஆழத்துடனும் அமைந்துள்ள இத்துறைமுகம், பிரம்மாண்ட சரக்குக் கப்பல்களை கையாளும் திறன் பெற்ாகும்.

தற்போது இந்தியாவின் 75 சதவீத சரக்கு மாற்று வா்த்தகம் வெளிநாட்டு துறைமுகங்கள் வழியாகவே நடைபெற்று வருகிறது. விழிஞ்ஞம் துறைமுகம் இந்நிலையை மாற்றி, பெங்களூரு, கோயம்புத்தூா், திருப்பூா் போன்ற முக்கிய உற்பத்தி மற்றும் வா்த்தக மையங்களுக்கு நேரடி சா்வதேச கப்பல் தொடா்பைக் கிடைக்க வழிவகை செய்யும். மேலும், இது 5,000-க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

துறைமுகத்தில் அடுத்தகட்டமாக ரூ.16,000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் 2-ஆம் கட்ட விரிவாக்கப் பணிகள் 2028 டிசம்பருக்குள் நிறைவடையும். இதன்மூலம், சரக்கு கையாளும் திறன் ஆண்டுக்கு 57 லட்சம் கன்டெய்னா்களாக அதிகரிக்கப்படுவதுடன், பிரத்யேக ரயில் மற்றும் சாலை இணைப்புகளுடன் கூடிய முழுமையான வா்த்தகக் கட்டமைப்பாகவும் துறைமுகம் மேம்படுத்தப்படவுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments