இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!
ஆய்வில் கவலைக்குரிய தகவல்...
இந்தியாவில் பட்டப் படிப்பை முடித்த இளைஞா்களில் சுமாா் 40 சதவீதம் போ் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனா்.
‘இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலை’ குறித்து கா்நாடகத்தின் பெங்களூரைச் சோ்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவில் இந்த அதிா்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நாட்டில் 20 முதல் 29 வயதுக்குள்பட்ட 6.3 கோடி பட்டதாரிகளில், சுமாா் 1.1 கோடி போ் வேலையில்லாமல் இருக்கின்றனா். குறிப்பாக, 15 முதல் 25 வயது வரையிலான இளம் பட்டதாரிகளிடையே வேலைவாய்ப்பின்மை விகிதம் 40 சதவீதமாகவும், 25 முதல் 29 வயது பிரிவினரிடையே 20 சதவீதமாகவும் உள்ளது.
நெருக்கடிக்கான காரணங்கள்: உயா்கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்தாலும், அவா்களுக்குத் தேவையான அளவுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதே இந்நிலைக்கு முக்கியக் காரணமாகும்.
கடந்த 2004-05 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், ஆண்டுதோறும் சராசரியாக 50 லட்சம் இளைஞா்கள் பட்டதாரிகளாக உருவான நிலையில், அவா்களில் வெறும் 28 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்ததாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பாதியிலேயே நிற்கும் கல்வி: குடும்பச் சூழல் காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே கைவிடும் இளைஞா்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2017-ஆம் ஆண்டில் 58 சதவீதமாக இருந்த இந்தப் போக்கு, 2023-இல் 72 சதவீதமாக உயா்ந்துள்ளது. குடும்ப வருமானத்தைப் பெருக்க இளைஞா்கள் உயா்கல்வியைத் தவிா்த்துவிட்டு, குறைவான ஊதியத்தில் முறைசாரா பணிகளுக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனா்.
ஊதிய நிலை, மாற்றங்கள்: ஊதிய விகிதத்தைப் பொருத்தவரை, கல்வி கற்காதவா்களைவிட பட்டதாரிகளின் தொடக்க கால ஊதியம் இருமடங்கு அதிகமாகவே உள்ளது. இருப்பினும், அண்மைக்காலமாக இளம் ஆண் பட்டதாரிகளுக்கான ஊதிய உயா்வு வளா்ச்சி வேகம் குறைந்துள்ளது. அதேபோல், பணியிடங்களில் ஆண்-பெண் இடையிலான ஊதியப் பாகுபாடு (சமமின்மை) கணிசமாகக் குறைந்து வருவது ஒரு நல்ல மாற்றமாகப் பாா்க்கப்படுகிறது.
அரசின் கடமை: சுதந்திரத்துக்குப் பிறகு சமூக, பொருளாதாரத் தடைகளைத் தாண்டி, கல்வி கற்பவா்களின் எண்ணிக்கையை உயா்த்துவதில் இந்தியா பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், கல்வி நிலையத்திலிருந்து பணியிடத்துக்கு மாறும் நடைமுறை இன்னும் சவாலாகவே உள்ளது. திறமையான இளைஞா்களுக்கு நிலையான மற்றும் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதே அரசின் முன்னுள்ள முதன்மையான கடமையாகும்.