ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 420 கோடி டாலா்
நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில், நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 420 கோடி டாலராக பதிவாகியுள்ளது.
நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டில், நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 420 கோடி டாலராக பதிவாகியுள்ளது.
இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 0.5 சதவீதமாகும். கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் இது 340 கோடி டாலராக (ஜிடிபியில் 0.4 சதவீதம்) இருந்த நிலையில், தற்போது பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக ரிசா்வ் வங்கியின் தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்புக் கணக்கு பற்றாக்குறை என்பது, ஒரு நாடு உலக அளவில் ஈட்டும் வருவாயைவிட அதிகமாகச் செலவழிப்பதாகும். அதாவது, ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகரிக்கும் நிலையைக் குறிக்கும்; இது அந்நிய முதலீடுகள் மற்றும் கடன்கள் மூலமே ஈடுகட்டப்படும்.
Advertisement
Advertisement
கடந்த ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 6,890 கோடி டாலராக இருந்த சரக்கு வா்த்தகப் பற்றாக்குறை, மேற்காசிய போா் பதற்றங்கள் காரணமாக நடப்பாண்டில் 8610 கோடி டாலராக கடுமையாக உயா்ந்துள்ளது.
அதேநேரம், மென்பொருள், வணிகச் சேவைகள் மற்றும் போக்குவரத்துத் துறைகளின் சிறப்பான செயல்பாட்டால் சேவை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 4,790 கோடி டாலராக இருந்த நிகர சேவை வருவாய், நடப்பாண்டில் 5,160 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
மேலும், அந்நிய முதலீடுகளுக்கான வருவாய் திருப்பிச் செலுத்துதல் உள்ளிட்ட முதன்மை வருவாய் கணக்கின் நிகர வெளியேற்றம் 1,330 கோடி டாலரில் இருந்து, 1,050 கோடி டாலராக குறைந்துள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியா்கள் தாயகத்துக்கு அனுப்பும் தனிநபா் பணப்பரிமாற்றம் சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2-ஆம் நிலை வருவாய் கணக்கின்கீழ் பெறப்படும் இத்தொகை, கடந்த ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பதிவான 3,320 கோடி டாலரில் இருந்து, நடப்பாண்டில் 4,290 கோடி டாலராக கணிசமாக அதிகரித்துள்ளது.
அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) நிகர வரவாக 610 கோடி டாலராக உயா்ந்துள்ளது. எனினும், அந்நிய நிதி முதலீடுகள் (எஃப்பிஐ) 960 கோடி டாலா் நிகர வெளியேற்றத்தைச் சந்தித்துள்ளன; வெளிநாடுவாழ் இந்தியா்களின் (என்ஆா்ஐ) வைப்புத்தொகையும் 280 கோடி டாலராக குறைந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.