ராஜகோபால சுவாமி கோயில். 
காதலர் தினம்

ஊரும் கோயிலும் உருவாக்கிய திருமலாம்பா தேவி காதல்!

இந்திய திருநாட்டில் எத்தனையோ பேரரசுகள் தோன்றி வளர்ந்து செயற்கரிய செயல் பல செய்து பின்னர் மறைவுற்றன. அதில் ஒன்றுதான் விஜய நகரப் பேரரசு.

கோ. ஜெயலெட்சுமி

இந்திய திருநாட்டில் எத்தனையோ பேரரசுகள் தோன்றி வளர்ந்து செயற்கரிய செயல் பல செய்து பின்னர் மறைவுற்றன. அதில் ஒன்றுதான் விஜய நகரப் பேரரசு. விஜய நகரப் பேரரசுகளில் மிகவும் புகழ் வாய்ந்தவர் கிருஷ்ண தேவராயர். அவருடைய சகோதரர் அச்சுத தேவராயர். இவருடைய மனைவிகளில் மிகவும் அன்புக்குரியவரும், நெஞ்சில் கலந்தவருமாகிய திருமலாம்பா தேவி தன்னுடைய தங்கை மூர்த்திமாம்பா தேவியை பெண் கொடுத்த வகையில் தஞ்சைக்கு தன் நாயகனுடன் வருகிறார்.

ஆம், தஞ்சை செவ்வப்ப நாயக்கரின் மனைவியே மூர்த்திமாம்பா. விஜய நகரத்திலிருந்து அச்சுத தேவராயருடன் தஞ்சை வந்தார். விஜய நகரத்தில் இருந்தபோது அச்சுத தேவராயர் வரதாம்பிகா என்பவரை திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வை தேவி திருமலாம்பா எழுதிய வரதாம்பிகா பரிணய சம்பூ என்ற நூலின் மூலம் அறியலாம். இந்நூல் வடமொழியில் எழுந்த சம்பூ காவியங்களில் மிகச்சிறந்த ஒன்றாகும்.

அச்சுத தேவராயரின் பட்டத்து அரசியான வரதாம்பிகை பற்றி எழுதிய நூலின் கடைசிப் பகுதியில் தன்னைப் பற்றியும், தன் அறிவு, ஆற்றல், திறமை பற்றியும் தெளிவாகக் கூறியுள்ளார். இதில் எந்த ஒன்றையும் பார்த்தாலோ, படித்தாலோ, கேட்டாலோ அது காவியமாகவோ, நாடகமாகவோ, கவிதையாகவோ எதுவாக இருந்தாலும் அது அப்படியே மனதில் பதித்துக் கொள்ளும் ஆற்றல் தனக்குள்ளது என்று கூறுகிறார். தான் பல துறைகளில் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும், பல மொழிகள் தனக்கு தெரிவதாகவும் அதன் வாயிலாக தான் வெளிப்படுவதாகவும் கூறுகின்றார்.

இவை அனைத்தையும்விட தாம் அச்சுத தேவராயரின் மனதுக்கு இனியவளாகவும், காதலியாகவும் இருப்பதோடு அவரின் மனைவி என்பதையும் இந்நூலில் தெளிவுபட உரைக்கின்றார். மேலும் திருமலாம்பா தேவியின் கரங்கள் கமலம் போல சிவந்து இருப்பதற்குக் காரணம் புலவர்களுக்கு பரிசில்களை அள்ளி அள்ளித் தருவதாலும் பல மொழிகளில் எப்போதும் எழுதிக்கொண்டே இருப்பதாலும் இவ்வாறு சிவந்துள்ளது என்று கூறுகிறார்.

வாஜ்பேய யாகம், புண்டரீக யாகம், சர்வதோமுக யாகம் ஆகியவற்றைச் செய்த பெரியோர்களின் ஆசியை எப்போதும் பெற்றவர் என்றும், அதற்கெல்லாம் மேலாக அவருடைய பஞ்சமம் பாடும் குரலானது எப்போதும் குயிலைவிட இனிமையானதாகவும், வாணியின் வீணை ஒலிக்கு நிகரானதாகவும் இருந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன.இவரைப்பற்றி தஞ்சை அரசவைப் பெண் கவியான இராமபத்ராம்பா, அச்சுத தேவராயரின் மனம் கவர்ந்த தேவி திருமலாம்பா என்றும் இவள் அழகும், சிறப்பும் பொருந்தியவள் என்றும், நற்குணம் மிக்கவள் என்றும் கூறுகிறார்.

கி.பி. 1532 ஆம் ஆண்டு அச்சுத தேவராயர் தம் இரு மனைவியரோடும் மகவோடும் தஞ்சைக்கு வருகிறார். அப்போது வரும் வழியில் திருவரங்கத்தில் பல நாட்கள் தங்கியிருந்து அறச்செயல்கள் பல செய்தார். அப்போது திருமலாம்பா தாம் இயற்றிய பக்த சஞ்சீவி எனும் நிகழ்ச்சியை திருஅரங்கன் முன்பு வைணவர்கள் நடத்திக் கொள்வதற்காக நிலம் அளித்ததை கல்வெட்டு கூறுகிறது. அதே போன்று விஜய நகரத்து ஹம்பியில் உள்ள விட்டலா கோயில் கல்வெட்டு அச்சுத தேவராயர் கொடுத்த கொடை பற்றி கூறுகின்றது. இக்கல்வெட்டு அழகிய பாடல் வடிவில் வெட்டப்பட்டுள்ளது. இப்பாடலை இயற்றியவர் திருமலாம்பா என்ற குறிப்பும் காணப்படுகிறது. இப்பாடலின் வழி திருமலாம்பாவின் கவி புனையும் ஆற்றலையும், புலமையையும் அறிய முடிகிறது. திருவரங்கத்தில் அச்சுதராயர் மன்னர் துலாபார மகாதானம் அளித்த செய்தியினையும் திருமலாம்பா கவிதையாக வடித்துக் கொடுத்துள்ளார்.

தஞ்சையில் இவரது பெயரில் ஒரு பேட்டையும், அதனுள் ஒரு கோயிலையும் எழுப்பிய பெருமை இவருக்குண்டு. கி.பி. 1538 ஆம் ஆண்டு தஞ்சையை செவ்வப்ப நாயக்கர் ஆட்சி செய்த போது அக்கோயிலுக்கு மகா பிரதிஷ்டையும் செய்யப்பெற்றது. அக்கோயில் இராஜகோபால சாமி கோயிலாகும். கோயிலின் கர்ப்ப கிரகத்தில் காணும் செய்தியானது திருமலாம்பா தேவி தர்மமாக திருமலையம்மன் பேட்டை மதனகோபால பெருமாள் திருபிரதிஷ்டை செய்கையில் அச்சுத தேவராயர் அதிட்டானமாக கட்டளையிட்ட திருவுள்ளம் பட்டினப்படி என்ற ஆணை குறிக்கப்பட்டுள்ளது. அதன்படி இக்கோயில் தஞ்சை வடக்கு வீதியிலிருந்து எல்லையம்மன் கோயில் தெரு செல்லும் வழியில் மிகப்பெரிய இராஜகோபுரத்துடன் கருங்கற்கள் கொண்டு கட்டப்பெற்றுள்ளது. அழகிய கோயிலாக கட்டப்பெற்றுள்ள அப்பகுதி திருமலாம்பா பெயரில் திருமலையம்மன் பேட்டை என்றும், இவரது தருமமாக இக்கோயில் கட்டப்பெற்றுள்ளது என்றும் இரண்டு கல்வெட்டுக்கள் கூறுகின்றன. மேலும் இங்கு காணப்படும் கிரந்த கல்வெட்டு ஒன்று அச்சுத தேவராயரின் புகழைப் பாடுகிறது. பாடல் அமைப்பை ஒப்புநோக்கும் போது இப்பாடல் திருமலாம்பா எழுதியதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

தஞ்சை - திருச்சி சாலையில் தற்போது சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் ஊர்ப்பகுதி திருமலை சமுத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் முந்தைய பெயர் திருமலையம்மன் சமுத்திரமாகும். அன்றைய காலகட்டத்தில் நீர்நிலைகளை ஏற்படுத்தும்போது மன்னரின் பெயரிலோ அல்லது மாதேவியரின் பெயரிலோ அமைப்பது வழக்காகும். அந்த வகையில் இவ்வூருக்கு இப்பெயர் ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம். தன் தேவியின் மீது மன்னர் கொண்டிருந்த அளவற்ற அன்பும், காதலும், அத்தேவியின் மீது கொண்ட ஈடுபாடும் அத்தேவியின் பெயரில் நீர்நிலையையும், ஒரு ஊரையும் ஏற்படுத்தியது. மன்னன் கொண்ட காதலால் தோற்றுவிக்கப்பட்ட மகத்தான கொடையே மேலே கண்ட கோயிலும், இவ்வூரும் என்றால் மிகையல்ல. இன்றும் கூட அந்த மன்னர், அந்த தேவி அதாவது அச்சுத தேவராயரையும், திருமலாம்பாவையும் வடக்கு வீதி எல்லையம்மன் கோயில் தெரு சந்திப்பில் உள்ள இராஜகோபால சாமி கோயிலில் காணலாம்.

[கட்டுரையாளர் - பட்டதாரி ஆசிரியை, தஞ்சாவூர்]

 

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூர் சதி: தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் சதித் திட்டம்! தில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களா? 8 பேரை கைது செய்த தில்லி போலீஸ்!!

SCROLL FOR NEXT