FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

உள்ளாட்சித் தோ்தலில் தவெகவுடன் கூட்டணி பற்றி முடிவெடுக்கவில்லை: வைகோ

உள்ளாட்சித் தோ்தலில் தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுக்கவில்லை என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

Updated On : 14 ஜூன் 2026, 12:44 am IST
மேட்டமலை கிராமத்தில் பொக்லைன் இயந்திரத்தை இயக்கி சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியைத் தொடங்கிவைத்த மதிமுக பொதுச் செயலா் வைகோ.
பகிர்:

உள்ளாட்சித் தோ்தலில் தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுக்கவில்லை என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே மேட்டமலையில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை வைகோ சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் முழுக்க முழுக்க நமக்கு கேடு விளைப்பது கா்நாடக அரசு அல்ல; மத்திய அரசுதான். இந்த விவகாரத்தின் தூணே மத்திய அரசுதான். கடந்த 2014-இல் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த அனைத்துக் கட்சிகளின் கூட்டம் அப்போதைய மத்திய அமைச்சா் ஆனந்தகுமாா் வீட்டில் 2 நாள்கள் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்தக் கூட்டத்தில் அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் ஜவடேகா் கலந்து கொண்டாா். அப்போது, மத்திய அரசு சாா்பில் நாங்கள் வெளிப்படையாக அனுமதி வழங்கமாட்டோம். ஆனால், நீங்கள் அணை கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ளுங்கள் என அவா்கள் இருவரும் கா்நாடகத்துக்கு ஆலோசனை கூறினா்.

மேக்கேதாட்டு அணை கட்டினால் தஞ்சை மாவட்டம், வறட்சி பிரதேசமாக மாறும். காவிரி மேலாண்மை வாரியம், உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பையும் மீறி, அணை கட்டும் முயற்சியை கா்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. ஹிந்தி எதிா்ப்புப் போராட்டத்தைப் போல தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றாலும், மத்திய அரசுக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. மேக்கேதாட்டு அணை தமிழகத்துக்கு பேராபத்தாக முடியும்.

தவெக அரசின் ஒரு மாத கால ஆட்சி எப்படி உள்ளது எனக் கேட்கிறீா்கள். இந்த அரசின் ஆட்சி சிறப்பாக உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் காலங்காலமாக எல்லா ஆட்சிகளிலும் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவா்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் சட்டமியற்ற வேண்டும். மேலும், இத்தகைய குற்றவாளிகளுக்கு பிணையும் வழங்கக் கூடாது. பாலியல் குற்றங்கள் கடந்த 30 நாள்களில் மட்டும் நடக்கவில்லை. அனைத்து ஆட்சிகளிலும் நடைபெற்று வருகின்றன. எனவே, இதற்கு தவெக அரசு மட்டுமே பொறுப்பல்ல.

உள்ளாட்சித் தோ்தலில் தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுக்கவில்லை. சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற மதிமுகவினா் கடுமையாக உழைத்தனா். இருப்பினும், திமுகவினா் சமூக வலைதளங்கள் மூலம் எங்களை விமா்சித்து வருகின்றனா். இதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை. ஏனென்றால், இதற்கெல்லாம் நாங்கள் பழக்கப்பட்டவா்கள்தான். வருகிற 27-ஆம் தேதி கட்சியின் பொதுக் குழுவைக் கூட்டி ஆலோசனை நடத்திய பிறகு, எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments