யாரைக் குற்றம் சொல்ல...
தென்னிந்தியாவின் முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாகத் திகழ்கிறது, கன்னியாகுமரி மாவட்டம் புலியூர்க்குறிச்சியில் அமைந்துள்ள உதயகிரி கோட்டை.
தென்னிந்தியாவின் முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாகத் திகழ்கிறது, கன்னியாகுமரி மாவட்டம் புலியூர்க்குறிச்சியில் அமைந்துள்ள உதயகிரி கோட்டை.
400 ஆண்டுகளின் வரலாற்றுச் சாட்சியாக விளங்கும் இந்தக் கோட்டை கி.பி. 1600-ஆம் ஆண்டு வேணாட்டு மன்னர் வீர ரவி வர்மாவால் மண்கோட்டையாகக் கட்டப்பட்டது.
1741-ஆம் ஆண்டு நடைபெற்ற குளச்சல் போரில் டச்சுப் படை தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து, டச்சுப் படை தளபதி யூஸ்டேஷியஸ் டி லன்னாய், திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் படையில் இணைந்தார். அவரது மேற்பார்வையில், 1744-ஆம் ஆண்டு இந்த மண் கோட்டை கருங்கற்களால் வலுவான கோட்டையாக மாற்றப்பட்டது.
Advertisement
Advertisement
திருவிதாங்கூர் அரசின் முக்கிய ராணுவத் தலைமையகமாகவும், ஆயுதங்கள், பீரங்கிகள் தயாரிக்கும் மையமாகவும் இந்தக் கோட்டை செயல்பட்டது. டி லன்னாய் தனது இறுதிக்காலம் வரை இங்கிருந்தே பணியாற்றினார். அவரது கல்லறை இன்றும் கோட்டை வளாகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் வனத் துறையின் கட்டுப்பாட்டில் பல்லுயிர் பாதுகாப்புப் பூங்காவாக பராமரிக்கப்படும் இந்தக் கோட்டையில் நுழைவுக் கட்டணமாக ரூ.30 வசூலிக்கிறார்கள். ஆனால், சுமார் 90 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்தக் கோட்டை, முறையான பராமரிப்பின்றி தற்போது புதர்க்காடாக மாறியுள்ளது. பராமரிப்பு இல்லை, பார்ப்பதற்கும் ஒன்றுமில்லை என்பதால், பார்வையாளர்களும் வருவதில்லை.
உதயகிரி கோட்டையிலிருந்து 6 கி.மீ. தொலைவில், கேரள அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை முறையாகப் பராமரிக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர். அதே அளவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க உதயகிரி கோட்டை பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
1956-ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்பின்போது கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உதயகிரி கோட்டை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதன் பின்னர், 1990-களில் தமிழ்நாடு அரசின் வனத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது.
'உதயகிரி கோட்டைக்குள் உள்ள சிறுவர் பூங்காவை மட்டும் மறுசீரமைக்க சுமார் ரூ.32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது' என்கிறார் பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ ஆர். செல்லசாமி. ஆனால், வேறு நடவடிக்கை ஏதுமில்லை.
'பூங்காவில் தற்போது ரூ.3 கோடி மதிப்பில் புதிய பறவைக் கூண்டு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கூண்டு அக்டோபர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்குள் வரும். இங்குள்ள சிறுவர் பூங்கா, மீன் அருங்காட்சியகம் ஆகியவற்றை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
'இந்தப் பூங்காவில் தற்போது ஒரே ஒரு நுழைவுவாயில் மட்டுமே உள்ளது. ஆனால், பல்லுயிர் பூங்காவை மேம்படுத்த குறைந்தது இரண்டு பெரிய நுழைவுவாயில்கள் தேவை' என்கிறார்கள் வனத்துறை அதிகாரிகள்.
உதயகிரி கோட்டை மிகவும் பழமையானது என்பதால், இந்த கோட்டைச் சுவர்களை இடிக்க அரசின் அனுமதி தேவை. கோட்டைச் சுவர்களை இடித்துதான் இதைப் பராமரிக்க வேண்டும் என்பது போகாத ஊருக்கு வழி சொல்கிற கதைதான்.
பராமரிக்க வேண்டும் என்ற ஆர்வமும், பண்பாட்டுச்சின்னம் என்ற எண்ணமும் இருந்தால், இப்போது இருக்கும் நிலையிலேயே எல்லாமும் சாத்தியம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.