FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிறை சொல்லும் கதைகள்

'சிறை' என்றாலே உயர்ந்த சுவர்கள், இரும்புக் கம்பிகள், காவல், கட்டுப்பாடு, தண்டனை ஆகியன நினைவுக்கு வரும்.

30 ஆகஸ்ட் 2026, 11:34 am IST
பகிர்:

'சிறை' என்றாலே உயர்ந்த சுவர்கள், இரும்புக் கம்பிகள், காவல், கட்டுப்பாடு, தண்டனை ஆகியன நினைவுக்கு வரும். ஆனால், கடலூரில் உள்ள ஒரு பழைமையான மத்தியச் சிறை மட்டும் இதற்கு முற்றிலும் மாறுபட்ட வரலாற்றைச் சொல்லுகிறது. ஒருகாலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களையும், அரசியல் தலைவர்களையும் அடைத்த இந்தச் சிறை, காலப்போக்கில் கலைக்கும், இலக்கியத்துக்கும், சிற்பத்துக்கும், மனிதநேயத்துக்கும் இடம் கொடுத்த கலைக்கூடமாக மாறியிருக்கிறது. இந்தச் சிறை கடலூர் வண்டிப்பாளையம் அருகே கேப்பர்மலையில் அமைந்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1865-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தச் சிறை, தமிழ்நாட்டின் பழைமையான, முக்கியமான சிறைகளில் ஒன்றாகும். தமிழக அரசியல், சமூக வரலாற்றோடும் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. ஆங்கிலேய அரசு அலுவலர் வில்லியம் கேப்பரின் பெயரால் இந்தப் பகுதி அழைக்கப்பட்டது. அவர் பெயரிலேயே கேப்பர்மலை ரயில் நிலையமும் அமைந்துள்ளது.

சிறை என்பது தண்டனைக்கான இடம் மட்டுமல்ல; மனிதர்களை மாற்றி, அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரக்கூடிய இடமாகவும் இருக்க முடியும் என்பதற்கு பல நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகளாக அமைந்துள்ளன.

Advertisement

Advertisement

பாரதியார் பெயரில் நூலகம்

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வாழ்க்கையில் இந்தச் சிறைக்கு மறக்க முடியாத இடம் உண்டு. சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆங்கிலேய அரசின் அனுமதியின்றி அவர்களது ஆட்சிப் பகுதிக்குள் நுழைந்ததற்காக பாரதியார் 1918-ஆம் ஆண்டு நவம்பர் 20-இல் கைது செய்யப்பட்டு, கடலூர் சிறையில் சுமார் 25 நாள்கள் கைதியாக இருந்தார். பின்னர் டிசம்பர் 14-இல் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், பாரதியார் இங்கு சிறைவாசம் அனுபவித்த விவரம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து, சிறை அலுவலர்கள், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன், அரிமா சங்கமும் பாரதிதாசன் இலக்கியப் பேரவையும் இணைந்து பாரதியார் சிறையில் இருந்த இரண்டு அறைகளையும் பாதுகாத்து, அவற்றை 'பாரதியார் நினைவு அருங்காட்சியகம் - நூலகம்' என மாற்றி அமைத்தனர். அந்த நூலகத்துக்கு பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில் பாரதியார் தொடர்பான 35 நூல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி ஒரு நினைவிடத்தை உருவாக்கியதோடு முடிந்துவிடவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்னர், ஆண்டுதோறும் பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு கைதிகளுக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அவர்களைப் பாரதியாரின் பாடல்களைப் பாடச் செய்து, பரிசுகள் வழங்கும் நிகழ்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.

பாரதியாரின் நினைவை நிலைநிறுத்தும் வகையில், சிறை வாசலில் அவரது சிலையும் நிறுவப்பட்டுள்ளது. அந்தச் சிலையுடன், பாரதியார் இங்கு சிறைவாசம் அனுபவித்த வரலாற்றுத் தகவல்களும் கல்வெட்டாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முக்கியப் பிரமுகர்கள்

அவசரநிலை காலத்தில் வடஇந்தியாவைச் சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இங்கு சிறைவைக்கப்பட்னர். பிரேமானந்தா சாமியார் உள்ளிட்ட பலரும் இச்சிறையில் கைதிகளாக இருந்துள்ளனர்.

ஆயுள் கைதியான சிற்பக் கலைஞர்

இந்தச் சிறை வரலாற்றில் மிகவும் வித்தியாசமான அத்தியாயம் ஓர் ஆயுள் தண்டனைக் கைதியான குரு கலைக்கண்ணன் இருந்தார். அவர் ஒரு திறமையான ஓவியரும், சிற்பக் கலைஞரும்கூட! கைதியின் கைகளில் இருந்த அந்தக் கலைத்திறன், சிறையின் முகத்தையே மாற்றியது.

தமிழ்நாடு அரசின் சிறப்பு அனுமதி பெற்று, குருகலைக்கண்ணனின் திறமையைப் பயன்படுத்தி சுமார் ஆறு அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. சிலையின் அடிப்பீடத்தில் நீதியரசர் இராம.சுப்பிரமணியன் பரிந்துரைத்த திருக்குறளும், சிலையை உருவாக்கிய கைதியின் பெயரும் பொறிக்கப்பட்டன.

அந்தக் குறளின் எண்- 505.

'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்.'

மனிதனின் பெருமையையும் சிறுமையையும் அவன் செய்யும் செயல்களே தீர்மானிக்கின்றன என்பதே இந்தக் குறளின் ஆழமான பொருள். ஒரு கைதியின் வாழ்க்கையில் இந்தக் குறள் இடம்பெற்றிருப்பது, அந்தச் சிற்பத்தின் வரலாற்றையே மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. இந்தச் சிறையானது சிற்பச்சாலையாக மாறியது. குரு கலைக்கண்ணனின் வாழ்க்கை இதைவிட சுவாரசியமான திருப்பத்தையும் பெற்றது. நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் விடுதலை பெற்ற அவர், சொந்தமாகத் தொழில் செய்து புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.

- கவிஞர் கடல் நாகராஜன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments