அறிவைத் தூண்டும் சிறப்புப் பள்ளி
வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து என்ற குறள் மூலம் "வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை; மற்றவையெல்லாம் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை கொண்டது' என உணர்த்தியிருப்பார் திருவள்ளுவர்.
வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து என்ற குறள் மூலம் 'வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை; மற்றவையெல்லாம் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை கொண்டது' என உணர்த்தியிருப்பார் திருவள்ளுவர்.
இந்த வகையில், வறியார்க்கு உதவுவதையே தன் வாழ்வியலாக்கிக் கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் சக்ஷம் அமைப்பின் தேசிய துணைத் தலைவரும், சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினருமான காமாட்சி சுவாமிநாதன்.
இவரால் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தோப்பூரில் ஆஸ்டின்பட்டி சாலையில் கட்டமைக்கப்பட்டு, நிர்வகிக்கப்படும் சக்ஷம் தீமஹி பள்ளி. ஆண்டுக்கு சில லட்சம் ரூபாய்களை கட்டணமாக வசூலிக்கும் பள்ளிகளில்கூட இல்லாத பல்வேறு வசதிகளைக் கொண்டதாக விளங்குகிறது, சிறப்புக் குழந்தைகளுக்காகச் செயல்படும் இந்தச் சிறப்புப் பள்ளி.
Advertisement
Advertisement
ஒரு ஏக்கர் பரப்பிலான இடத்தில் தலா 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் 3 தளங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது இந்தப் பள்ளி.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் விரல்கள், கை மணிக்கட்டு, கை, கால்கள், கால் விரல்கள், முதுகெலும்பு போன்றவற்றின் இயக்கத்துக்குத் தேவையான பல்வேறு வகையான உபகரணங்களை உள்ளடக்கிய 2 பிசியோதெரபி அறைகள் பிரமாண்டமான அளவில் இங்கு உள்ளன. இதில், கை விரல்களுக்கு அனைத்து வகை நுட்பமான இயக்கங்களையும் அளிக்கக்கூடிய ஹேண்ட் பங்க்ஷன் யூனிட் மேசை, அநேகமாக தென் மாவட்டங்களில் வேறு எங்கும் இல்லாதது.
இதேபோல, சோல்டர் வீல், சைக்கிளிங் இயந்திரங்கள், கால் உறுதிப்பட நிற்க முடியாத குழந்தைகள் பாதுகாப்பாக நின்று நடக்கும் வகையிலான கட்டமைப்புகளைக் கொண்ட ட்ரெட்மில், முதுகுத்தண்டு அசைவுக்கான குதிரை ஓட்ட இயந்திரம் எனப் பல்வேறு வகையான இயந்திரங்கள் இங்குள்ள பிசியோதெரபி அறைகளில் உள்ளன.
நாள் ஒன்றுக்கு ரூ. 400 முதல் ரூ. 500 வரை கட்டணம் செலுத்திப் பெற வேண்டிய பிசியோதெரபி சிகிச்சைகள் அனைத்தும் இங்குள்ள குழந்தைகளுக்கு நாள்தோறும் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன. இவை தவிர, சென்சாரிங் அறை, பேச்சுப் பயிற்சி, அடிப்படை புரிதலுடன் கூடிய கல்வி கற்பிக்கும் பிரிவுகள் தனித் தனியே செயல்பாட்டில் உள்ளன.
மேலும், விளக்குகளுக்கு வண்ணம் பூசுதல், விளக்குகளை மணிகளால் அலங்கரித்தல், பேப்பர் உருளைகளைச் செய்து அதன் மூலம் கைவினைப் பொருள்களைத் தயாரித்தல், பிளாக் பிரிண்டிங் முறையில் சேலைகளில் பூக்களை அச்சிடுதல், நூல்களைக் கொண்டு அலங்காரத் தோரணங்கள் தயாரித்தல், கைக்குத்தல் அரிசி தயாரித்தல் போன்ற சிறிய அளவிலான தொழில் பயிற்சிக் கட்டமைப்புகள் எனச் சிறப்புக் குழந்தைகளின் நிகழ்காலம், எதிர்காலம் என இரு காலத்துக்கும் தேவையான அனைத்துச் செயல்பாடுகளையும் கொண்டதாக விளங்குகிறது இந்தச் சிறப்புப் பள்ளி.
இந்தப் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து சக்ஷம் தீமஹி பள்ளி நிர்வாகி காமாட்சி சுவாமிநாதன் தெரிவித்ததாவது
21 வகை மாற்றுத் திறனாளிகளுக்குமான செயல்பாடுகளைக் கொண்டது சக்ஷம் அமைப்பு. சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர், தன்னார்வலர்கள், சிறப்புக் குழந்தைகளின் குடும்பத்தினர், மாற்றுத் திறன் கொண்டவர்கள், கருணை உள்ளம் படைத்தோர் எனப் பலரது அர்ப்பணிப்புடன் இந்த அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் கீழ் 7 பிரிவுகளில் சிறப்புப் பள்ளிகள் செயல்படுகின்றன.
இதில், 'தீமஹி' என்ற பிரிவின் கீழ் மதுரை சக்ஷம் தீமஹி பள்ளி செயல்படுகிறது. 'தீமஹி' என்றால் 'நாங்கள் தியானிக்கிறோம் அறிவைத் தூண்டுவாயாக' என்று பொருள். இங்கு, மூளைச் செயல்திறன் குறைபாடு, மூளை முடக்குவாதம், ஆட்டிசம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். சிலர் ஆட்டிசம் பாதிப்புடன், பார்வை மந்தம் உள்ளவர்களாகவும் இருந்தால் அவர்களையும் தவிர்ப்பதில்லை.
3 பேருந்துகள் சிறப்புக் குழந்தைகளுக்காகக் கட்டணமின்றி இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்து தடத்தின் அண்மைப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் சுமார் 75 பேர் தற்போது இங்கு உள்ளனர். இங்கு வரும் குழந்தைகளை நல்ல நிலையில் குணமடையச் செய்துவிடலாம் என நாங்கள் கூறுவதே கிடையாது. மாறாக, இங்கிருக்கும் குழந்தைகளுக்கு உணவு, பாதுகாப்பு, மரியாதை ஆகியவற்றுக்கு மட்டுமே உறுதி அளிக்கிறோம்.
பள்ளி முதல்வராகவுள்ள சந்தானசெல்வி மகேந்திரன் பிசியோதெரபி அறிந்தவர். தன்னார்வலராகவே அவர் இந்தப் பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாகப் பணியாற்றுகிறார். பிசியோ
தெரபி நிபுணர், ஆக்குபேஷனல் தெரபி நிபுணர், ஸ்பீச் தெரபி பயிற்றுநர், 3 தொழில் பயிற்றுநர்கள் இங்கு பணியில் உள்ளனர். இவை தவிர, சிறப்புக் குழந்தைகளுக்கு அன்றாட வாழ்வியல் நடைமுறைகளான பல் துலக்குவது எப்படி? உணவருந்துவது எப்படி? என்பனவற்றைப் பயிற்றுவிக்க தனியே வாழ்வியல் பயிற்றுநர்களும் இங்கு பணியில் உள்ளனர்.
தற்போது, தியேட்டர் பெர்பார்மன்ஸ் ரோபோட்டிக் பயிற்றுநர் ஒருவர் தன்னார்வலராகப் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளார். இதன் மூலம், சிறப்புக் குழந்தைகளுக்கு நாடகம், நடிப்பு குறித்தும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ரோபோட்டிக் அசிஸ்டன்ட் தெரபிக்காக டாக்டர் ஜெய்சங்கருடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கு இதுவரை 3 அமர்வுகள் முடிந்துள்ளன.
மதுரை எய்ம்ஸ் சார்பில் ஆண்டுக்கு ஒரு முறை இங்கு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. பல மருத்துவர்கள் தன்னார்வலர்களாக வந்து இங்குள்ள குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்கின்றனர். ஏறத்தாழ 2 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
கோல்டன் ஹவர்: ஒரு குழந்தை சிறப்புக் குழந்தையா? என்பதை 2 வயதுக்குள்ளேயே கண்டறிந்துவிடலாம். முதல்கட்டமாக பிறந்த குழந்தை அழ வேண்டும். குழந்தைக்கு 3 மாதத்தில் கழுத்து நிற்க வேண்டும். அந்தக் குழந்தை கழுத்தை திருப்பும்போது அதன் கண்கள் திரும்புகிறதா? என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
இல்லையெனில், ஏதோ பிரச்னை என்பதை அறியலாம். ஒரு வயது முதல் 4 வயதுக்குள்பட்ட சிறப்புக் குழந்தைகளுக்கு உரிய பயிற்சி அளித்தால், அந்தக் குழந்தையின் பழக்க, வழக்கங்களை, அன்றாடச் செயல்பாடுகளை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வரலாம். 4 வயதுக்கு மேற்பட்ட சிறப்புக் குழந்தைகளின் நியூரல் மெமரியை கட்டுக்குள் கொண்டு வர இயலாது. மஸ்ஸில் மெமரியை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே அவர்களுக்குப் பயிற்சி அளிக்க முடியும்.
எதிர்காலத் திட்டம்: ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவர்களை இங்கு வைத்துப் பராமரிப்பது சவாலாக உள்ளது. இங்கு 2 சிறப்புக் குழந்தைகள் பெயிண்டிங் பயிற்சியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் ஒருவர் தனது தந்தையின் நிறுவனத்திலேயே பணிக்குச் சேர்ந்துவிட்டார். மற்றொருவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிக்குச் சென்றார். அங்கு, அவரின் நிலையை அறியாமல் கடுமையான பணிச் சுமை அளிக்கப்பட்டது. இதனால், அச்சமடைந்த அவர் மீண்டும் பள்ளிக்கே வந்து விடுகிறேன் என்கிறார். இதன் மூலம், இனி வருகிற காலங்களில் இங்குப் பயிலும் சிறப்புக் குழந்தைகள் யாரேனும் பிற நிறுவனங்களில் பணி வாய்ப்புப் பெற்றால், அங்குள்ள சக பணியாளர்களையும், நிர்வாகத்தையும் சந்தித்து, அந்தச் சிறப்புக் குழந்தையின் இயல்பு குறித்து நாங்கள் சென்று விளக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளோம்.
தொழில் பயிற்சியில் தேர்ச்சி பெறும் சிறப்புக் குழந்தைகளைக் கொண்டு இங்கேயே சில கைவினைப் பொருள்களை தயாரித்து, அதற்கான சிறந்த சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி, உற்பத்திச் செலவுபோக மீதமுள்ள தொகையை அந்தக் குழந்தைகளுக்கு ஊதியமாகப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது எங்களின் எதிர்காலத் திட்டமாக உள்ளது.
விளையாட்டு மைதானம்: இங்குள்ள சிறப்புக் குழந்தைகள் தங்கள் மனம் போல விளையாட வேண்டும்; ஓட வேண்டும்; உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதற்காகவே விளையாட்டு மைதானம் அமைக்கப்படுகிறது. இங்கு தனியே ஒரு விளையாட்டு அறையும் அமைத்துள்ளோம். இதில், சிறப்புக் குழந்தைகளுடன் பிறந்த சகோதர, சகோதரிகள் விளையாட அனுமதிக்கப்படுகின்றனர்.
விடுதியில் விருப்பமில்லை: சிறப்புக் குழந்தைகளுக்கு விடுதி அமைப்பதில் விருப்பமில்லை. காரணம், சிறப்புக் குழந்தை உடன் இல்லாத வாழ்க்கை பெற்றோருக்குப் பழகிவிட்டால், அவர்களை முழுமையாக மறந்துவிடுவர். இதுபோன்ற நிலை எந்தக் குழந்தைக்கும் ஏற்படக்கூடாது. சிறப்புக் குழந்தைகளுக்கும் அன்பு, பாசம், கோபம், பிரிவு, சோகம் என அனைத்து உணர்வுகளும் உண்டு.
ஆனால், அவர்கள் அதை வெளிப்படுத்தும் விதத்தைத்தான் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. சிறப்புக் குழந்தை தன்னுடைய வீட்டின் அங்கமாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் பெற்றோரின் அரவணைப்பு அந்தக் குழந்தைகளுக்குக் கிடைக்கும். இதனால்தான் விடுதி தொடங்க ஆர்வம் காட்டவில்லை.
ஒப்பீடு வேண்டாம்: அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகளின் செயல்திறனுடன் சிறப்புக் குழந்தைகளின் செயல்திறனை ஒப்பிட்டுப் பேசுவதை வீட்டின் பெரியவர்கள் முதல் அனைவரும் தவிர்க்க வேண்டும். அனைத்துக் குழந்தைகளும் சாம்பியனாக முடியாது. எனவே, இதுபோன்ற குற்ற உணர்ச்சியை சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் மனதில் விதைப்பதை தயவு
செய்து குடும்பப் பெரியவர்கள் உள்பட அனைவரும் தவிர்க்க வேண்டும்.
வாழ்வாதாரப் பாதுகாப்பு: ஒரு குடும்பத்தில் ஒரு சிறப்புக் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையைப் பராமரிக்கவே குழந்தையின் தாய் முழுநேரத்தையும் செலவிட வேண்டியிருக்கும். ஏழ்மையான குடும்பமாக இருந்தால், அந்தத் தாய் எந்த வேலைக்கும் செல்ல இயலாது.
இதனால், அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, சிறப்புக் குழந்தைகளை இங்கு பராமரிப்பதன் மூலம், அந்தக் குழந்தையின் குடும்ப வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கிறோம் என்ற மனநிறைவு உள்ளது'' என்கிறார் ஒரு சிறப்புக் குழந்தையின் தாய் என்ற சீரிய பொறுப்பையும் வகிக்கும் காமாட்சி சுவாமிநாதன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.