குழந்தைகளின் உரிமைகளைக் காப்போம்!
குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள் - உடல் நலனுக்கு - உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு. மன நலனுக்கு- ஒழுக்கத்துடன் கூடிய கல்வி, மன அழுத்தம் போக்கும் சூழல், பாதுகாப்பு ஆகியவை தேவை. இவற்றை இந்தச் சமுதாயம் தருகிறதா?
சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்து ஓர் ஆங்கில நாளிதழில் படிக்க நேர்ந்தது. சூரத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன் இரண்டு வயது மகளை அடித்துக் கொன்று விட்டாள். ஏன் கொன்றாள்? பசி தாங்க முடியாமல் அந்தச் சிறு குழந்தை மீண்டும் மீண்டும் உணவு வேண்டும் என்று கேட்டு அழுதிருக்கிறது. அந்தக் குழந்தையின் பசியைத் தீர்க்க முடியாத வறுமை நிலை; இயலாமையால் விளைந்த ஆத்திரத்தில் அந்தத் தாய் அப்படிச் செய்திருக்கிறாள்.
1969-இல் சாரதா நடித்து, 'துலாபாரம்' என்று ஒரு திரைப்படம் வெளியானது. அதில், வறுமையால் பசி தாங்காமல் வாடும் தன் மூன்று குழந்தைகளை சாரதா விஷம் கொடுத்துக் கொன்றுவிடுவார். இது 2026. இன்றும் கூட இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என்றால், நம் சமுதாயம் குழந்தைகளை எந்த நிலையில் வைத்திருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறது.
எண்ம இந்தியா என்கிறோம்; விண்வெளி, விளையாட்டு, பாதுகாப்பு என்று பல்வேறு துறைகளில் நம் நாடு முன்னேறி விட்டதாகப் பறைசாற்றிக் கொள்கிறோம். ஏதுமறியாச் சின்னஞ்சிறு குழந்தையின் அடிப்படை உரிமையான வயிற்றுக்கு உணவு அளித்து அதன் பசியைத் தீர்க்கத் தவறிவிட்டோம். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி மிகவும் மனம் நொந்து, 'இந்தச் சம்பவம் நிர்வாகம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த சமுதாயத்தின் தோல்வியைக் குறிக்கிறது' என்று கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்தச் சமுதாயத்தில் குழந்தைகளின் நிலை என்ன?, அவர்களது உரிமைகள் என்ன?, அவர்களது உடல் மற்றும் மனநலன் குறித்த புரிதலும், அவற்றைப் பேண வேண்டும் என்ற பொறுப்புணர்வும் நமக்கு உள்ளனவா? சற்றே ஆராய்ந்து பார்ப்போம்.
குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள் - உடல் நலனுக்கு - உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு. மன நலனுக்கு- ஒழுக்கத்துடன் கூடிய கல்வி, மன அழுத்தம் போக்கும் சூழல், பாதுகாப்பு ஆகியவை தேவை. இவற்றை இந்தச் சமுதாயம் தருகிறதா?
தமிழ்நாட்டைப் பொருத்தவரை பள்ளி செல்லும் குழந்தைகளுக்குச் சத்துணவுத் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி, பள்ளிச் சீருடைகள் வழங்கி, அத்துடன் இலவசமாகப் பல வசதிகளைச் செய்து தருவதால் கீழ்த்தட்டுக் குழந்தைகள் ஓரளவு நலமாக இருக்கிறார்கள் எனலாம். உணவுக்காக குழந்தைகள் கையேந்தும் கொடிய நிலை இப்போது இங்கு இல்லை. சூரத்தில் நடந்ததுபோல் இங்கு நடக்க வாய்ப்பில்லை. மேல்தட்டுக் குழந்தைகளுக்கு இவை யாவும் தாமாகவே கிடைத்துவிடுகின்றன.
மன நலன் என்று வரும்போது தான் மிகப் பெரிய பாகுபாடு உண்டாகிறது. கல்வியை எடுத்துக் கொள்வோம். எல்லோருக்கும் ஒரே மாதிரி கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் 'சமச்சீர்க் கல்வித் திட்டம்' கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்னர் இருந்த மாநில, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டு, 'சமச்சீர் பாடத் திட்டம்' என்ற ஒரே பாடத் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டது. மிக அதிகக் கல்விக் கட்டணம் பெற்ற தனியார்ப் பள்ளிகள் சுப்பிரமணியம் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட காரணத்தால் குறைவான கட்டணம் பெறும் கட்டாயத்துக்கு உள்ளாகின. அதிலிருந்து தப்பிக்க பெரும்பாலான பள்ளிகள் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. போன்ற மத்திய அரசின் பாடத்திட்டங்களுக்கு மாறின.
பெரும்பாலான பெற்றோர் சமச்சீர் பாடத் திட்டம் தரமற்றது என்றும் மத்திய பாடத் திட்டங்களே தரமானவை என்றும் தவறாகக் கருதிக் கொண்டு தங்கள் குழந்தைகளை மத்திய பாடத் திட்டங்கள் உள்ள பள்ளிகளில் மிக அதிகக் கட்டணம் செலுத்திச் சேர்க்கிறார்கள். அரசுப் பள்ளிகளிலும், வெகு சில தனியார்ப் பள்ளிகளிலும் மட்டும்தான் சமச்சீர் பாடத் திட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆக, அடிப்படைக் கல்வி ஒரே மாதிரியாக இல்லை; வேற்றுமைக்கு வழிகோலியுள்ளது.
அதுபோக எல்லாப் பாடத் திட்டங்களுமே அதிக பாடச் சுமையைத் தந்து குழந்தைகளின் சிந்தனை ஆற்றலைச் சிதைத்து, உற்சாகத்தை உருக்குலைத்து, மதிப்பெண் என்ற ஒரே இலக்கை நோக்கிப் பிடித்துத் தள்ளுகின்றன! பேச, சாப்பிட, தூங்க, விளையாட, உறவினர்களுடன் சேர்ந்திருக்க, பிடித்த கதைப்புத்தகம் படிக்க... இவை குழந்தைகளின் உரிமைகள். அவற்றை நாம் பறித்துவிட்டோம். இவை எதற்குமே நேரம் இல்லாமல் படிப்பு, தேர்வு, மதிப்பெண் என்ற நேர்க்கோட்டிலேயே பயணிக்கிறார்கள்!
அப்படித்தான் கல்வி கற்கிறார்கள்... அந்தக் கல்வி ஒழுக்கத்தைத் தருகிறதா என்றால், அதுவும் இல்லை.
தமிழக அரசு தற்போது பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தை மாற்றியமைக்க முற்பட்டிருக்கிறது. சில மாற்றங்களைக் கொண்டுவந்தால் நல்லது பள்ளிக் கல்வி என்பது ஐந்து அல்லது ஆறு வயதில்தான் ஆரம்பிக்க வேண்டும். கல்வியில் முன்னுதாரணமாகத் திகழும் நெதர்லாந்தில் ஆறு வயதில்தான் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க முடியும். நம் நாட்டிலோ இரண்டு வயதிலேயே, குழந்தைக்குக் கொஞ்சம் பேசத் தெரிந்தவுடனேயே வீட்டில் வைத்திருக்க முடியாமல் 'ப்ரீ கே.ஜி.யில்' சேர்க்கிறார்கள்.
பெற்றோர் இருவரும் வேலைக்குப் போனால்தான் குழந்தையை நல்லபடியாக வளர்க்க முடியும் என்று பொருளாதாரம் நிர்ப்பந்திக்கிறது. பெண்களுக்குப் பேறுகால விடுமுறை போல, குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை ஊதியத்துடன் கூடிய விடுப்பு தந்து, ஐந்து வயதாகிப் பள்ளியில் சேர்க்கும் வரை வீட்டிலிருந்து பணிபுரியும் வசதிகளைச் செய்து தரலாம். இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது என்று சிலர் கூறலாம். குழந்தைப் பருவம் மிக முக்கியமானது. அந்தப் பருவத்தில் குழந்தைகள் களிமண்ணைப்போல் நெகிழ்வாக இருப்பார்கள். அப்போது அவர்களை நாம் விரும்பும் வகையில் செம்மைப்படுத்தலாம். அப்படிச் செய்ய சிறந்த நபர் குழந்தையின் தாயே. அதற்கான சூழலை அமைத்துக் கொடுப்பது அரசு மற்றும் சமுதாயத்தின் கடமை.
அடிப்படை எழுத்துகளை உரக்க வாசித்தல், பேசுதல், பாடுதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுவதைக் குறைக்க வேண்டும்.
வகுப்பறைப் பாடங்களைக் குறைத்து, வகுப்புக்கு வெளியே நம்மைச் சுற்றியிருக்கும் பொருள்களுடன் குழந்தைகள் உணர்வுபூர்வமாக உரையாடிப் புரிந்துகொள்ள வகை செய்ய வேண்டும். எல்லா வகுப்பினருக்கும் தினம் ஒரு பாட வேளை உடற்பயிற்சி இருக்க வேண்டும். வாரம் ஒரு வகுப்பு விளையாட்டுக்கும் புத்தக வாசிப்புக்கும் இருக்க வேண்டும்.
வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை, கடைசி இரண்டு வகுப்புகள் எல்லா மாணவர்களும், ஆசிரியர்களும் விளையாடும் வகையில் ஒதுக்கப்பட வேண்டும். சனி, ஞாயிறு கட்டாய விடுமுறையாக்கப்பட வேண்டும். கல்வியாண்டை இரண்டு பருவங்களாகப் பிரித்து, இரண்டு பருவத் தேர்வுகள், இரண்டு இறுதித் தேர்வுகள் என்று கொண்டு வரலாம். பாடச்சுமையைக் குறைத்தால் மட்டுமே இவை சாத்தியப்படும்.
கோவையில் சில இடங்களில் பெண்களுக்கென பிரத்யேகமாக 'பிங்க் பூங்காக்கள்' அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் பயமின்றித் தங்கள் குழந்தைகளை அங்கே விளையாட விட்டுவிட்டுத் தாங்களும் பயிற்சி மேற்கொள்ளலாம். இதுபோல் எல்லா ஊர்களிலும் அதிக எண்ணிக்கையில் 'பிங்க் பூங்காக்களும்', 'பிங்க் மைதானங்களும்' அமைக்கப்பட்டால், பெண்கள் பூப்பந்து, வாலிபால், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளைப் பழக ஏதுவாக இருக்கும்.
ஒரு பதின்ம வயதுப் பெண் பூங்காவுக்கு நடைப்பயிற்சிக்கு சென்றால், நாலைந்து இளைஞர்கள் அங்கு சேர்ந்து அந்தப் பெண்ணை உற்றுப் பார்ப்பது, கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. இதனாலேயே பெண் குழந்தைகள் வீடு, பள்ளி அல்லது கல்லூரி என்று முடங்கிப் போக நேரிடுகிறது.
உடற்பயிற்சி, விளையாட்டு, பொழுதுபோக்கு ஆகியவை ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே உரித்தானவை அன்று; அவை பெண் குழந்தைகளுக்கும் அடிப்படை உரிமைகளாகும். பெண் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான ஆரோக்கியமான பொழுதுபோக்குச் சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டியது அரசின், சமுதாயத்தின் கடமையாகும்.
குடும்பத்தினர் நேரத்தை ஒன்றாகச் செலவிடுதல் ஒன்றே மன அழுத்தத்தைப் போக்க மிகச் சிறந்த வழி. இதற்கு அரசுதான் அதிரடியாக முடிவெடுக்க வேண்டும். ஒன்பதிலிருந்து ஐந்து மணி வரை மட்டுமே அலுவலக நேரம் என்று அறிவித்து, குடும்பத்தினர் ஒன்று கூடிக் கழிக்க வழிவகை செய்ய வேண்டும். இது ஏதோ விசித்திரமான யோசனையாக இருக்கிறதே என்று எண்ண வேண்டாம்; சிங்கப்பூரில், அரசு இப்போது இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அசுர வேகத்தில் பணத்தை மட்டும் துரத்தி ஓடிகொண்டிருந்த மக்கள், மன அழுத்த நோய்களால் பாதிக்கப்படுவதும் குழந்தைகள், குடும்பத்தினரின் அரவணைப்பில்லாமல் வழிதவறுவதும் அங்கு அதிகரித்துக் கொண்டே போனது.
பொருளாதார வளர்ச்சி மட்டுமே வளர்ச்சியன்று என்பதை சிங்கப்பூர் அரசு உணர்ந்து, மக்களையும் குழந்தைகளையும் மனப்பிறழ்வுகளிலிருந்து மீட்டெடுக்க இப்படி ஒரு நடைமுறையைக் கொண்டுவந்திருக்கிறது; இங்கும் அப்படிக் கொண்டுவரலாம்.
கல்வி, அலுவல், சமுதாயக் கட்டுப்பாடுகள் போன்றவற்றை முன்னிட்டு நாம் குழந்தைகளின் உரிமைகளைப் பறித்து அவர்களைக் கொத்தடிமைகளாக வைத்துள்ளோம். இந்த நிலையை மாற்ற அரசும் சமுதாயமும் சேர்ந்து பாடுபடவேண்டும்.
கட்டுரையாளர்:
சுற்றுச்சூழல் ஆர்வலர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.