FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

எதிர்நீச்சல்!

போலந்து நாட்டைச் சேர்ந்த இருபத்து நான்கு வயதான டென்னிஸ் வீராங்கனை மாயா ச்வாலின்ஸ்கா, ஒரு மாதம் முன்பு வரை உலகத் தரவரிசையில் 114-ஆம் இடத்தில் இருந்தார்.

Updated On : 14 ஜூன் 2026, 4:05 am IST
பகிர்:

போலந்து நாட்டைச் சேர்ந்த இருபத்து நான்கு வயதான டென்னிஸ் வீராங்கனை மாயா ச்வாலின்ஸ்கா, ஒரு மாதம் முன்பு வரை உலகத் தரவரிசையில் 114-ஆம் இடத்தில் இருந்தார். அதனால் மாயாவின் போக்குவரத்து, தங்கும் செலவுகளை ஏற்க யாரும் முன்வரவில்லை.

இருப்பினும், மாயா ஃபிரெஞ்சு டென்னிஸ் போட்டிகளில் பங்கெடுக்க மூன்று வாரம் முன்பு பாரிஸ் வந்தடைந்தார். பிரதான சுற்றுக்குள் நுழைய மாயா மூன்று தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற வேண்டியிருந்தது. பரிசுப் பணமும் போட்டியின் முடிவில் மட்டுமே வழங்கப்படும் என்பதால், மாயாவின் நிலைமையை அறிந்த போலந்து நாட்டு குளிர்பான நிறுவனத்தினர் விடுதிக் கட்டணத்தைச் செலுத்தினர்.

மாபெரும் திருப்பமாக - அதிர்ஷ்டத்தாலும் திறமையாலும் மாயா இறுதிப் போட்டிவரை முன்னேறியதோடு, அவர் தனது விளையாட்டு சரித்திரத்தில் பெற்ற மொத்தப் பரிசுத் தொகையைவிட அதிகமாக இரண்டாம் பரிசுத் தொகையாக $1.6 மில்லியன் (ரூ.15 கோடி) பெற்றுள்ளார்.

Advertisement

Advertisement

அவர் கூறியது:

'இது 18 ஆண்டுகால கடின உழைப்பு, பொறுமை, விடாமுயற்சியின் பலன். இந்த நிலையை அடைய நான் பல சவால்களைக் கடந்தேன். வாழ்க்கை சில நேரங்களில் மகா விசித்திரமானது. நாம் நம் கடமையைத் தொடர்ந்து செய்து வர வேண்டும். ஒரு நாள் எல்லாம் கைகூடும் என்று நம்ப வேண்டும். எல்லாம் கை கூடியதில் எனக்கு மகிழ்ச்சி' என்கிறார் சிறு வயதிலேயே டென்னிஸ் விளையாடத் தொடங்கிய மாயா.

அறை வாடகை கூட கொடுக்க முடியாமல் திண்டாடிய மாயா, இந்த வெற்றியால் டென்னிஸ் தர வரிசையில் 114-ஆம் இடத்தில் இருந்து 21-ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இருப்பினும், விம்பிள்டன் தொடருக்கான நேரடிப் போட்டியில் மாயா பங்கேற்பது உறுதியாகவில்லை. ஏனெனில், பங்கேற்பாளர்களுக்கான தகுதித் தேர்வு நேரத்தில் மாயா தரவரிசையில் முதல் 100 இடங்களுக்கு வெளியே இருந்தார். ஜூன் 29-இல் தொடங்கும் விம்பிள்டன் தொடருக்கான 'வைல்டு கார்டு' வாய்ப்பு அவருக்கு வழங்கப்படாவிட்டால், மாயா மீண்டும் தகுதிச் சுற்றுகளில் விளையாட வேண்டியிருக்கும்.

இதற்கு மாயா கூறுகையில், 'இதை ஒரு சவாலாகவே கருதுகிறேன். எனது முழுத் திறனையும் வெளிப்படுத்துவேன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நான் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறேன்' என்கிறார்.

இந்தப் போட்டிக்கு முன்புவரை, மாயா ஒரே ஒரு கிராண்ட்ஸ்லாம் பிரதான சுற்றுப் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். அதனால் கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, 2021-இல் அவரால் படுக்கையை விட்டு எழக்கூட முடியவில்லை. 2022-இல் அவருக்கு முழங்கால் அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டது. இவ்வாறாக, எதிர்காலத்துக்காக ஐரோப்பா முழுவதும் நடைபெற்ற சிறிய போட்டிகளில் பல ஆண்டுகளாக மாயா கடுமையாகப் போராடினார்.

2026 ஃபிரெஞ்சு ஓபன் வரலாற்றில் தகுதிச்சுற்று வீராங்கனையாக நுழைந்தவர், இறுதிப் போட்டி வரை முன்னேறிய முதல் வீராங்கனையாக மாறி, சரித்திரம் படைத்துவிட்டார். தகுதிச்சுற்று வீராங்கனை ஒருவர் கிராண்ட்

ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது 2021 யு.எஸ். ஓபனில் எம்மா ரடுகானு என்பவர் மட்டும்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments