முகப்பு
தினமணி கதிர்

மதங்களைக் கடந்த மனிதம்!

மதங்களைக் கடந்து மனிதநேயம் வளர்ப்பதில் தமிழர்கள் முன்மாதிரியாக விளங்குகின்றனர்.

Updated On : 15 மார்ச், 2026 at 10:12 AM
பகிர்:

மதங்களைக் கடந்து மனிதநேயம் வளர்ப்பதில் தமிழர்கள் முன்மாதிரியாக விளங்குகின்றனர். ஒவ்வொருவரின் மதத் திருவிழாவில் மற்றொருவர் பங்கேற்பதும், விழா ஏற்பாடுகளை முன்னின்று செய்வதும், உதவிகளைப் புரிவதும் என இணைபிரியாமல் இருப்பர். முக்கியமாக, ஒருவருக்கொருவர் உணவுகளையும் பரிமாறிக் கொள்வர்.

இந்த வகையில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகவும், சமயங்களைக் கடந்து சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ரமலான் காலத்தில் நோன்பிருக்கும் இஸ்லாமியர்களுக்கு சஹர் உணவு தயாரிக்கும் பணியில் ஹிந்துப் பெண்மணி பங்கெடுத்து உதவுகிறார்.

இதுகுறித்து திருச்சி காஜாமலை ஜே.கே. நகரைச் சேர்ந்தவரும், ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபு கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரியும் முப்பத்து மூன்று வயதான மொகிதீன் அப்துல் காதிரிடம் பேசியபோது:

'எனது வீட்டிலேயே மாணவ, மாணவியருக்கு இலவசமாகத் தனிப்பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறேன். கரோனா காலத்தில் உணவின்றி தவித்தோருக்கு வீட்டில் இருந்த பொருள்களைக் கொண்டு உணவைத் தயாரித்து, வீடற்று வீதியில் உள்ளோருக்கும், வெளியூர்களில் இருந்து திருச்சிக்கு வந்து தங்கியிருந்தோருக்கும் வழங்கினேன்.

ரமலான் மாதத்தில் திருச்சியில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள், பணி நிமித்தம் தங்கியிருந்தோருக்கு அதிகாலை 3 மணிக்கு சஹர் உணவு என்பது பெரும் கனவானது. விடுதியில் சொற்ப எண்ணிக்கையில் உள்ள இஸ்லாமிய மாணவ, மாணவிகளுக்கான தனி சமையல் கிடையாது. அவர்கள் பிரதான சாலைக்கு வருவதற்கே ஓரிரு கி.மீ. தொலைவு நடந்து வரவேண்டும். அப்படியே மாணவர்கள் வந்தாலும், அதிகாலையில் கடைகள் கிடையாது. மாணவிகளால் வரவே இயலாது. இதனையறிந்து நானும், எனது அம்மா பாத்திமா, மனைவி ஹாஜிரா பீவி ஆகியோரும் உணவுகளைத் தயாரித்து வழங்கத் தொடங்கினோம்.

தினமும் ஒரே உணவை வழங்காமல் ஒவ்வொரு நாளும் ஒரு வகையான உணவு என்ற வகையில், நெய் சோறு, குஸ்கா, வெஜ் பிரியாணி, பருப்புச் சாதம், தக்காளிச் சாதம், அவித்த முட்டை, கத்தரிக்காய்ப் பச்சடி என விதவிதமாகத் தயாரித்து வழங்கிறோம்.

இதற்கு செல்வி (எ) ராஜேஸ்வரி, தனது வீட்டின் தரைத்தளத்தை உணவு சமைப்பதற்காக இலவசமாக வழங்கியதுடன், இரவு கண் விழித்து சஹர் உணவு தயாரிக்க உதவுதல், பின்னர் காலையில் பாத்திரங்களைக் கழுவுதல் என அவரும் தனது பங்களிப்பை வழங்கினார். தொடக்கத்தில் 50 பேர் எனத் தொடங்கினோம். ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் பணி தொடங்குகிறது. இப்போது 230 பேருக்கு சஹர் உணவு வழங்குகிறோம்.

சரியானவர்களைத் தேர்வு செய்வதற்கும், நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீனின் மகன் ஹபிபுர் ரஹ்மான் உதவியாக உள்ளார்.

நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 16 படி அரிசி முதல் அதிகபட்சமாக 20 படி அரிசி வரையில் தேவைக்கேற்ப சமைக்கப்படுகிறது. சைவ வகை உணவாக இருந்தால், நாளொன்றுக்கு ரூ.12 ஆயிரம் செலவாகிறது. அசைவ உணவு வழங்க யாரேனும் கூடுதல் தொகை வழங்கும் தருணத்தில் அதையும் தயார் செய்து தருகிறோம்.

உணவுகளைத் தயாரிப்பதற்கான இடத்தை அளிப்பதோடு, உணவைத் தயாரித்து பொட்டலம் கட்டும் வரை தினமும் கூடவே நின்று உதவுகிறார் ராஜேஸ்வரி. இதனையறிந்து அருகில் வசிக்கும் பலரும், நண்பர்களும் தங்களால் இயன்ற உதவிகளை வழங்குகின்றனர்.

திருச்சி மாநகரப் பகுதி மட்டுமல்லாது, சேதுராப்பட்டி, வண்ணாங்கோவில், குண்டூர் என சுமார் 50 கி.மீ. சுற்றளவுக்கு நாள்தோறும் சென்று விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு சஹர் உணவை வழங்குகிறேன். எனக்குப் பெரிதும் உத்வேகத்தை அளிப்பதால் ரமலான் மாதம் என்றாலே பம்பரமாகச் சுழலத் தொடங்கிவிடுவேன்' என்கிறார் மொகிதீன் அப்துல் காதிரி.

செல்வி (எ) ராஜேஸ்வரி எனது வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் பாத்திமாவின் மகன் மொகிதீன் அப்துல் காதிரி, சஹர் உணவு சமைக்க இடம் இல்லாமல் தவிப்பதை அறிந்தேன். வீட்டின் தரைத்தளத்தை உணவுகள் தயாரிக்க வழங்கினேன். அதோடு நானும் காய்கனிகளை நறுக்குதல், உணவுகளைத் தயாரிக்க உதவுதல் எனச் சிறிய பணிகளை செய்யத் தொடங்கினேன்.

முந்தைய தினம் இரவு 7 மணிக்கே தயாராகி விடுகிறேன். உணவு சமைத்து முடிக்கும் வரையில் உறக்கம் பற்றிய சிந்தனையே இல்லை. தயாரித்த உணவைப் பொட்டலமாகக் கொண்டு செல்வதில் மொகிதீன் அப்துல் காதிர் கவனமுடன் செயல்படுவார். மனிதம்தான் மதங்களைக் கடந்து எங்களை இணைத்து வைத்துள்ளது' என்கிறார் ராஜேஸ்வரி.

-

முழு கட்டுரையைப் படிக்க →