FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்மணி

சங்கத் தமிழரின் அறிவியல் பார்வை

சங்கத் தமிழர்கள் இயற்கையைத் தெய்வமாகக் கொண்டு, இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த பெருமைக்குரியவர்கள்.

கோப்புப் படம்
பகிர்:

சங்கத் தமிழர்கள் இயற்கையைத் தெய்வமாகக் கொண்டு, இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த பெருமைக்குரியவர்கள். எவ்வித அறிவியல் தொழில்நுட்பக் கருவிகள் இல்லாத காலத்தில் வானியல், புவியியல், மருத்துவவியல், பொறியியல், உயிர்களின் பரிணாமம் முதலான எல்லாத் துறைகளிலும் ஆழ்ந்த அறிவு கொண்டவர்களாக விளங்கியதைச் சங்க இலக்கியங்கள் நமக்குத் தெளிவுறுத்துகின்றன.

ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் (மரபியல் 26, 27) வரையறுத்துக் கூறுகிறது. வானவியல் அறிவும், நிலவியல் அறிவும், முக்காலமும் உணரும் சோதிட அறிவும் கொண்ட ஆன்றடங்கிய

அறிஞர்கள் அக்காலத்தில் வாழ்ந்தனர். இதை,

Advertisement

Advertisement

சென்ற காலமும் வரூஉம் அமயமும்

இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு

நன்குணர்ந்து

வானமும் நிலனும் தாம்முழுது உணரும்

சான்ற கொள்கை சாயா யாக்கை

ஆன்றடங்கு அறிஞர்

(- மதுரைக்காஞ்சி வரி 477-481)

என்ற மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருத

னாரின் பாடல் வரிகள் உணர்த்தும்.

இன்றைய வானியல் அறிஞர்கள் ரேடார்' வழி கோள்களின் உதவியுடன் மேகங்களின் வெப்பம், காற்றின் அழுத்தம், ஈரப்பதம் ஆகியவற்றை அறிந்து மழையின் அளவையும் பெய்யும் காலத்தையும் துல்லியமாகக் கூறுகின்றனர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த வசதிகள் எல்லாம் இல்லாத காலத்தில் பழந்தமிழர் தங்கள் கூர்மையான கண்களைக் கொண்டே அளந்து, வானியல் அறிவு பெற்றவராய்த் திகழ்ந்தனர். விண்ணில், கோள்களின் இயக்கங்களைக் கொண்டு மழையின் வரவைத் துல்லியமாக அறிந்து கூறியது நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

வெள்ளி' எனும் கோளின் இருப்பிடத்தைக் கொண்டு மழையின் வரவை அறிந்துள்ளனர். வெள்ளி' எனும் கோள் சூரியனிடமிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள கோளாகும். சூரிய உதயத்துக்கு முன்னும் மறைவுக்குப் பின்னும் வெள்ளியின் ஒளி உச்ச நிலையில் இருக்கும் என்பர். வெள்ளி எனும் கோளின் இருப்பிடத்தைக் கொண்டு பழந்தமிழர் மழை வரவைத் துல்லியமாக உணர்த்தியதைப் பாலை கொளதமனார் எனும் புலவர்,

வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர

வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி

பயங்கெழு பொழுதொடு ஆநியம் நிற்ப

கலிழும் கருவியோடு கையுற வணங்கி

கொண்டல் தண்டளிர் கமஞ்சூழ் மாமழை

(-பதிற்றுப்பத்து 24: 23-28)

எனக் குறிப்பிடுவதிலிருந்து அறியலாம். வான்மண்டிலத்தில் ஞாயிறு தோன்றும் திசைக்கு வடக்கே வெள்ளி எனும் கோள் தன் சுற்றுப்பாதையில் (ஆநியம்) வடக்கு வீதியில் நின்றால் மழை பெய்யும் என்பதை இந்தப் பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

அதே வெள்ளி தெற்கு திசையில் தோன்றினால் மழை பெய்யாது எனவும் அளந்தறிந்து அறுதியிட்டுக்கூறினர். புறநானூற்றில் இயற்கையின் சீற்றங்களைக் கூற வந்த கபிலர் தென்றிசை மருங்கின் வெள்ளி ஓடினும்' (புறம் 117 வரி 2) எனத் தென்திசையில் வெள்ளி தோன்றினால் மழை வராமல் வற்கடம் (வறுமை) சூழும் என்று குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.

அடுத்து, மழை எவ்வாறு பெய்கிறது என்பதை சூரிய வெப்பத்தால் கடல் நீர் ஆவியாகி, மேகங்களாக, வளிமண்டலத்தை நோக்கி உயர்ந்து பின் குளிர்ந்து மழையாகப் பொழிகிறது' என விளக்கும் இன்றைய அறிவியலாளர்க்கு முன்பே பழந்தமிழர் உணர்த்திருந்தனர்.

இதற்கு அகநானூற்றில் கருவூர் கலிங்கத்தார்' எனும் புலவர் மழை எவ்வாறு பெய்கிறது என்பதை அற்புதமாகச் சித்தரிப்பதைச் சான்றாகக் கூறலாம். பனிபடர்ந்த குளிர்ந்த கடல் நீரை, மேகக் கூட்டம் மிகுந்த அளவு முகந்து வானில் மேற்கு நோக்கி எழுகின்றன; அவை கருவுற்ற யானைக் கூட்டம் ஆங்காங்கே மேய்வது போல் காட்சியளிக்கின்றன; அத்தகு கரிய பெரிய மேகக் கூட்டங்கள் ஒன்றாகத் திரண்டு மழை பொழிய காத்து நிற்பதை,

பனித்துறை பெருங்கடல் இறந்து நீர்பருகி

குவவுத்துறை அருந்து கொள்ளைய குடக்கேர்பு

வயவுப்பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி

இருங்கிளை கொண்மூ ஒருங்குடன் துவன்றி

-(அகநானூறு 183: 6 -9)

என்ற வரிகளில் உணர்த்துகிறார். மழை வரும் அறிவியல் கருத்துடன் வானில் திரியும் யானைக்கூட்டங்களாக மேகங்களைக் காட்டும் புலவரின் இலக்கிய நயத்தையும் இங்கே எண்ணிப் பார்க்கலாம்.

நிலத்திலும் மலைகளிலும் பெய்யும் மழைநீர் கால்வாயாக, ஆறாக ஓடியும் நிலத்தால் உறிஞ்சப்பட்டும் பல வழிகளில் ஓடி மீண்டும் கடலை நோக்கியே சென்றடைகிறது. இதைத்தான் அன்றே,

புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,

வான்முகுந்த நீர் மலைப் பொழியவும்

மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்

மாரி பெய்யும் பருவம் போல

(-பட்டினப்பாலை 126-129)

எனக் கூறுவார். இது யுகம் யுகமாக நடந்து வரும் இயற்பியல் சுழற்சியாகும். இதைத்தான் இன்றைய நீரியல் நிபுணர்கள் நீர் சுழற்சி என்கின்றனர். இந்நீர் சுழற்சியை அன்றே நம் முன்னோர் அறிந்திருந்தது, அவர்களின் அறிவியல் திறனை உணர்த்தும்.

அடுத்து, இன்று கூறப்படும் மேக வெடிப்பு' குறித்து நம் பண்டைத் தமிழர் அறிந்திருந்ததைக் காணலாம். மிகக் குறுகிய காலத்தில் மிகச்சிறிய பகுதியில் தீவிரமாக அதிகப்படியான மழையை மேகம் பிளந்து கொட்டுவதே மேகவெடிப்பாகும். புலவர் இதை,

மாக்கடல் முகந்து மாதிரத்து இருளி

மலர்தலை உலகம் புதைய வலனேர்பு

பழங்கண் கொண்ட கொழும்பல் கொண்மூ

போழ்ந்த போல பலவுடன் மின்னி

(-அகநானூறு 374:1-4)

என்ற வரிகளில் உணர்த்துவார். பெரிய கடலில் நீரை முகந்து, திசை எங்கும் இருளச்செய்து உலகமே மூழ்கும்படியாக மிக்க துன்பம் தரும் செறிந்த பலமேகங்கள் வெடித்தது போல் மின்னி மழை கொட்டியது என்பது இப்பாடல் வரிகளின் பொருளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments