முகப்பு
தினமணி கதிர்

இன்றைக்கும் மாணவன்...

சேலம் சிறையே மருத்துவப் பணியுடன் அரசுத் துறையில் எப்படிப் பணிபுரிய வேண்டும் என்ற பக்குவத்தை எனக்குப் போதித்தது.

Updated On : 24 மே 2026, 4:10 am IST
பகிர்:

'சேலம் சிறையே மருத்துவப் பணியுடன் அரசுத் துறையில் எப்படிப் பணிபுரிய வேண்டும் என்ற பக்குவத்தை எனக்குப் போதித்தது. சிறையில் மருத்துவ வசதிகள் குறிப்பிட்ட அளவுக்குத்தான் இருக்கும்.

மேல் சிகிச்சை தேவைப்பட்டால், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்போம். நான் பணிபுரிந்த சமயத்தில்தான், சேலம் மத்திய சிறையில் பெரிய வன்முறை நடைபெற்றது. சிகிச்சை முறைகளைத் தாண்டி, சிறை நிர்வாகம் உள்பட பல விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அங்குக் கிடைத்தது' என்கிறார் முனைவர் சங்கர் சண்முகம்.

இவருக்கு சர்வதேச செவிலியர் தினத்தை ஒட்டி, 'தேசிய ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது' அண்மையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இருபத்தாறு ஆண்டுகளுக்கும் மேலாக செவிலியர் கல்வி, செவிலியர் தொழில்முறை மேம்பாட்டுப் பணியில் தனது பங்களிப்பு குறித்து சங்கர் சண்முகம் கூறுவதாவது.

'எனக்கு பூர்விகம் திருவண்ணாமலை. டேனிஷ் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பு. செவிலியர் பட்டயப் படிப்பு சேலம் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் படித்தேன். படித்து முடித்ததும் சேலம் மத்திய சிறையில் செவிலியராக பணி அமர்த்தப்பட்டேன். எனது அம்மாவும் செவிலியர். ஆனால், டிப்ளமோ படிக்கிறபோது அம்மா காலமானார். அப்பா லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்தார். அமைந்த மனைவியும் செவிலியர்தான். ஆக, எங்களது குடும்பப் பின்னணி மருத்துவத் துறை சம்பந்தமாகவே அமைந்துவிட்டது.

சேலம் சிறையில் பணிபுரிந்தபோது, மருந்தாளுனர் ஓய்வு பெறும் வயதில் இருந்தார். எல்லாப் பொறுப்பையும் என்னிடம் ஒப்படைத்து மேற்பார்வை செய்வார். மருத்துவ அறிக்கையை எப்படி எழுத வேண்டும், நீதிமன்றத்துக்குத் தேவையான தகவல்களை எப்படி திரட்டிக் கொடுக்க வேண்டும் என எல்லாவற்றையும் அங்கேதான் கற்றேன்.

இந்த அனுபவம் பிற்காலத்தில் செவிலியர் நிர்வாகத்துக்குப் பெரிதும் உதவியது. செவிலியர் பட்டப்படிப்பு படிக்க மனு செய்திருந்தேன். சம்பளத்துடன் படிக்க அனுமதி கிடைத்தது. நான் ஏற்கெனவே பட்டயப் படிப்பு முடித்திருந்ததால், பட்டப் படிப்பு இரண்டு ஆண்டுகள் படித்தால் போதும். சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள செவிலியர் கல்லூரியில் சேர்ந்தேன். அந்தக் கல்லூரிக்குப் பின்னாளில் முதல்வராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

முக்கியஸ்தர்களுக்கான மருத்துவக் குழுபட்டப் படிப்பு முடித்தவுடன் செவிலியராக இதய சிகிச்சைப் பிரிவில் பணியில் சேர்ந்தேன். அங்கு மருத்துவ ஜாம்பவான்களான மருத்துவர்கள் ராஜன் சந்தோஷம், விஸ்வகுமார், சுகுமார் நடத்திய 'ஓபன் ஹார்ட்' அறுவை சிகிச்சைகளில் செவிலியராகப் பணிபுரிய எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

ஆண் செவிலியராக இருப்பதனால் சென்னைக்கு வரும் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், முதல்வர், வெளிநாட்டு பிரதமர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கான மருத்துவக் குழுவில் என்னைச் சேர்த்துவிடுவார்கள்.

சில ஆண்டு இடைவெளியில், செவிலியர் முதுகலை பட்டத்துக்கு விண்ணப்பித்தேன். முதுகலை பட்டம் பெற்ற சில மாதங்களில் செவிலிய போதகர் பதவி உயர்வு பெற்று மதுரைக்குச் சென்றேன். சில ஆண்டுகளில் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றலாகி வந்து, முனைவர் பட்டம் பெற பதிவு செய்தேன். 'எச்.ஐ.வி.' யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றேன்.

மத்திய அரசு செங்கல்பட்டில் இருக்கும் செவிலியர் பள்ளியைக் கல்லூரியாகத் தரம் உயர்த்துவதற்கு முடிவு செய்திருந்தாலும், தொடர் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அந்தப் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. 2010-இல் அந்தப் பள்ளி 50 பி.எஸ்.சி. நர்சிங் இருக்கைகளுடன் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது.

தொடர்ந்து தமிழ்நாட்டில் செயல்படும் செவிலியர் கல்லூரிகளுக்கு, செவிலியர் பள்ளிகளுக்குத் தேவையான நிதி ஆதாரங்களை திரட்டுவதற்காக தொடர்பு அதிகாரியாக என்னை நியமித்தார்கள். பல செவிலியர் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு புதிய படிப்புகளும் சேர்க்கப்பட்டன. தேனியில் செவிலியர் கல்லூரி தொடங்கப்பட்டது.

பேராசிரியராக நியமனம்

இந்தக் காலகட்டத்தில் ஓமந்தூரார் மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி நிலையமானது மருத்துவமனையாக தரம் உயர்ந்தது. செவிலிய படிப்புகளும் துணை செவிலிய படிப்புகளும் தொடங்கப்பட்டன. இதற்கு முக்கியக் காரணம் அன்றைக்கு சுகாதாரத்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார்.

அவர் என்னை 'அகாடமிக் ஆபீசராக' ஓமந்தூரார் மருத்துவமனையில் பணியமர்த்தினார். அப்போது 19 துணை மருத்துவ படிப்புகளைச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினோம். ஓமந்தூரார் மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆராய்ச்சிப் படிப்புக்காக, 'தமிழ்நாடு கவர்மெண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ் நர்சிங் சயின்சஸ்' தனிப் பிரிவு தொடங்கப்பட்டது.

சில ஆண்டுகளில், இளம் பேராசிரியராக செவிலியர் கல்லூரிக்கு நியமனம் செய்யப்பட்டேன். கீழ்ப்பாக்கம், மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் இணை இயக்குநர் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டது.

புதிய படிப்புகள்

இந்தக் காலகட்டத்தில் செவிலியர் கல்லூரிகளில் முதுகலை, பட்டம், பட்டயம் படிப்புகளில் இடங்கள் அதிகரிக்கப்பட்டன. புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. 2022-இல் முனைவர் பட்டத்தின் அடுத்தகட்டமாக 'டாக்டர் ஆஃப் சயின்ஸ்' படித்து முடித்தேன். ஒடிசா சம்பல்பூர் பல்கலைக் கழகத்தில் 'டாக்டர் ஆஃப் சயின்ஸ்' பட்டம் வழங்கினார்கள். 2023 -இல் சென்னை செவிலியர் கல்லூரியின் முதல்வராக பதவி நியமனம் வந்தடைந்தது.

குடியரசுத் தலைவர் விருதில், எனக்கு செவிலியர் கல்வியாளர் பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு நர்சஸ் அண்ட் மிட்வைவ்ஸ் கவுன்சிலின் சார்பதிவாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

செவிலியர் துறையில் கல்லூரி முதல்வராக இருந்தாலும், இன்றைக்கும் மாணவனாகத் தொடர்கிறேன். இந்தத் தருணத்தில் எனக்கு குருக்களாக அமைந்த மருத்துவத் துறை ஆசிரியர்கள் தன்ராஜ், இளங்கோவன் ஆகியோரை நன்றி அறிதலுடன் நினைத்துப் பார்க்கிறேன். நான் ஏதாவது வளர்ச்சி அடைந்துள்ளேன் என்றால் இவர்கள்தான் அதற்கு காரணிகள்...' என்கிறார் சங்கர் சண்முகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.