ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூளை ரத்தக் குழாய்களில் சுருக்கம் வந்தால்...?
எனக்கு வயது 69. மூளையில் சிறிய ரத்தக் குழாய்களில் சுருக்கம் ஏற்பட்டிருப்பதாக அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
எனக்கு வயது 69. மூளையில் சிறிய ரத்தக் குழாய்களில் சுருக்கம் ஏற்பட்டிருப்பதாக அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இது எதனால்? இதனால் வரக்கூடிய பாதிப்புகள் என்ன? எப்படிக் குணப்படுத்திக் கொள்ளலாம்? கிரேடு 2 என்ற நிலையில் தற்சமயம் உள்ளது.
- சீனு, தஞ்சாவூர்.
மூளையின் இருபுறமும், மூளையின் திரவப் பகுதியைச் சுற்றியுள்ள வெள்ளைப் பகுதியில் சிறிய ரத்தக் குழாய்களில் சுருக்கத்துடன் கூடிய மாற்றங்கள் ஏற்படுவதற்குக் காரணமாக-வயது அதிகரித்தல், நீண்டகால உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை உபாதை, அதிக கொழுப்பு, புகைப் பிடித்தல், உடல் பருமன், உடற்பயிற்சிக் குறைவு, சில இதய ரத்தக் குழாய்கள் போன்ற காரணிகளுடன் தொடர்புடையதாக ஏற்படலாம்.
Advertisement
Advertisement
பக்கவாதம், மூளைக்குள் ரத்தக் கசிவு, மூளையில் கட்டியோ, அழுத்தம் ஏற்படுத்தும் காயங்களோ ஏற்படாதிருப்பது நலம். இருப்பினும், மூளையின் சிறிய ரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்தைக் கவனிக்க வேண்டிய ஓர் எச்சரிக்கை அறிகுறியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
உங்களுடைய வயது, இயற்கையான நடவடிக்கைகள், ஏற்பட்டுள்ள உடல் பாதிப்புகள், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை உபாதை, கொழுப்பின் அளவு, உடல் எடை, தூக்கம், மலச்சிக்கல், மன அழுத்தம், நினைவாற்றல், நடை, தற்சமயம் எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்து, சிகிச்சை அமைக்க வேண்டும்.
மூளை செயல்பாடு மற்றும் நினைவாற்றலை ஆதரிப்பதற்காக - பிரம்மீ, மன்டூகபர்ணி, சங்கபுஷ்பீ போன்ற தாவரங்களினால் தயாரிக்கப்படும் மூலிகை மருந்துகள் உள்ளன. அவை தனிநபருக்கேற்ப பரிசீலிக்கப்படலாம்.
நெல்லிக்காய்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகள், உடல் நிலை மற்றும் பிற மருந்துகளைக் கொண்டு பயன்படுத்தலாம். க்ஷீரபலா, பிரம்மீ, ஹிமசாகரம், கார்ப்பாஸாஸ்த்யாதி போன்ற தைல மருந்துகளை 'சிரோவஸ்தி' எனும் தலையில் தேக்கி வைக்கும் வைத்திய முறையால் நீங்கள் பயனடையலாம்.
மூளையின் அனைத்துப் பகுதிகளுடன் கூடிய செயல்பாடுகளை தன் கட்டமைப்பில் வைத்திருக்கும் ப்ராணவாயு, திறம்படச் செயல்பட்டு சுருங்கி நிற்கும் சிறிய ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்யும் 'நஸ்யம்' எனும் மூக்கினுள் மருந்து விடும் சிகிச்சை முறை, 'முகப் ப்ரக்ஷாளனம்' எனும் வாயினுள் மூலிகைத் தைலத்தை விட்டுக் கொப்பளிக்கும் சிகிச்சை, 'கர்ணபூரணம்' எனும் காதினுள் மூலிகைத் தைலத்தை வெதுவெதுப்பாக நிறுத்திவைக்கும் வைத்திய முறை, 'அப்யங்கம்' எனும் முகத்தில் செய்யப்படும் தைலத் தேய்ப்பு போன்றவற்றால், நீங்கள் பயனடையலாம்.
ரத்தக் குழாய்களின் உட்பகுதி சவ்வுகளில் நெய்ப்பை ஏற்படுத்தி, அவற்றின் ரப்பர் போன்ற சுருங்கி விரியும் தன்மையை இதுபோன்ற சிகிச்சை முறைகளால் பெறலாம். மேலும் 'சிரோதாரா' எனும் நெற்றியிலிருந்து பின்தலை வழியாக வழிந்தோடும் மூலிகைத் தைல தாரை சிகிச்சையினாலும், மூளையின் உட்புறக் குழாய்களை வலுப்படுத்தலாம்.
'ஸ்நேகபானம்' எனும் மூலிகைத் தைலம் அல்லது நெய் மருந்துகளை தங்களுடைய உடல் நிலை, வயது மற்றும் பசித்தீக்குத் தகுந்தாற்போல தேர்ந்தெடுத்து, சிறிய அளவில் பருகச் செய்து, பின்னர் சிறிது சிறிதாக அளவைக் கூட்டி, அதன் முழுப்பலனையும் உடல் பெற்றுவிட்டதை அறியும் வரை தொடர்ந்து பின் வியர்வை சிகிச்சை செய்வதன் மூலம், மூளையைச் சார்ந்த சிறிய ரத்தக் குழாய்களின் பல உபாதைகளையும் குணப்படுத்த இயலும். இதை தற்சமயம் பல ஆயுர்வேத ஆஸ்பத்திரிகளிலும் செய்து வருகின்றனர். அதற்கென்று ப்ரத்யேக நியமங்கள் இருப்பதால், ஆஸ்பத்திரியில் செய்து கொள்வதே நல்லது.
'விசாரணா ஸ்நேகப்ரயோகம்' எனும் தைலம்-நெய்ப்புள்ள உணவுப் பொருள்களான நெய், தைலம், வசை எனும் மாமிசக்கொழுப்பு - மஜ்ஜை ஆகியவற்றை சிறிய அளவில் உணவில் சேர்த்துச் சாப்பிடுவதால், அவற்றின் செரிமானத்தால் மூளை மற்றும் உடலிலுள்ள சிறிய ரத்தக் குழாய்களுக்கு நெய்ப்பு எடுத்துச் செல்லப்பட்டு, அவற்றின் சுருங்கி விரியும் தன்மையானது நன்கு பாதுகாக்கப்படும்.
இதனாலேயே நம் முன்னோர் சூடான சாதத்தில் நெய்விட்டுப் பிசைந்து முதல் உருண்டையைச் சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அதிலும் சாதாரண நெய்யைவிட, மூலிகை நெய்மருந்துகளாகிய கல்யாணகம், சாரஸ்வதம், ப்ரம்மீ, இந்துகாந்தம், தாடிமாதி, விதார்யாதி க்ருதம் போன்ற மருந்துகளை, சூடான சாதத்துடன் சாப்பிட்டு, மூளை நரம்புகளையும் ரத்தக் குழாய்களையும் பாதுகாத்துக் கொண்டனர்.
(தொடரும்)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.