FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இளைஞர்மணி

இணையவழியில் இலவசக் கல்வி!

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஸ்வயம் கல்வித் திட்டத்தில் சேர்ந்து இணையத்தின் ஊடாகப் பல்வேறு படிப்புகளை இலவசமாகப் படிக்கலாம்.

Updated On : 26 ஜூன் 2018, 6:21 pm IST
பகிர்:

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஸ்வயம் கல்வித் திட்டத்தில் சேர்ந்து இணையத்தின் ஊடாகப் பல்வேறு படிப்புகளை இலவசமாகப் படிக்கலாம். உரிய சான்றிதழ் மற்றும் பட்டங்களைப் பெற்று, சிறந்த வேலைவாய்ப்புகளையும் பெற்றிட முடியும். 

இணைய வழிக் கல்வி: கணினி, இணையம் என்று புதிய தொடர்பு சாதனங்கள் வந்துவிட்டதால், இணையம் வழியில் மிகச் சிறந்த கல்வியளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இணையத்தின் உதவியுடன் காணொலிக் காட்சிகளின் வழியாக உலகின் மிகச் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் எடுக்கப்பட்டன. இதன் மூலம் உலகம் முழுவதும் மாணவர்களுக்குச் சிறந்த பேராசிரியர்களின் வழியாக நல்ல தரமான கல்வி கிடைத்தது. 

தற்போது கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்வியை இணைய வழியில் வழங்க முடிவு செய்தன. அதற்காகச் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு தேவையான பாடங்களைப் பேராசிரியர்கள் வகுப்புகளில் மாணவர்களுக்கு நேரடியாகச் சொல்லித் தருவது போன்ற வீடியோக்களை உருவாக்கி, அதனை இணையத்தில் இடம் பெறச் செய்து, அதன் வழியாக அப்பாடத்தைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றன. 

Advertisement

Advertisement

திறந்த நிகழ்நிலைப் பயிற்சி வகுப்பு: அதிகமான மாணவர்களுக்கு இணையம் வழியில் வகுப்புகளை எடுப்பதற்கான ஏற்பாட்டில் அடாசிடி (udacity.com), கோர்செரா (coursera.org), எட்எக்ஸ் (edx.org) என்பது போன்ற பல்வேறு இணைய வழிக் கல்வி அமைப்புகள் தோற்றம் பெற்றன. இவை பாட உள்ளடக்கங்கள், திட்டங்களை மட்டும் அல்லாமல் மாணவர் சேர்ந்து கற்கவும், மதிப்பீடுகளையும் சான்றிதழ்களையும் வழங்கும் வசதிகளைக் கொண்டவையாக அமைந்தன. இந்தத் திறந்த நிகழ்நிலைக் கல்விமுறையினைப் பாரிய திறந்த நிகழ்நிலைப் பயிற்சி வகுப்பு (Massive Open Online Course) MOOC  என்று அழைக்கின்றனர். 

ஸ்வயம்: வளர்ந்த நாடுகளில் வழங்கப்பட்டு வரும் பாரிய திறந்த நிகழ்நிலைப் பயிற்சி வகுப்புகளைப் போன்று இந்தியாவிலும் வழங்கத் திட்டமிட்ட இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அதற்கென ஸ்வயம் (SWAYAM) எனும் பெயரிலான இணைய வழியிலான கல்வித்திட்டத்தைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் சான்றிதழ் , பட்டயம் , இளநிலைப் பட்டப்படிப்பு , முதுநிலைப் பட்டப்படிப்பு போன்ற படிப்புகளை இணைய வழியில் இலவசமாக வழங்கி வருகிறது. இணையம் வழியிலான இப்படிப்புகளுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும் உரிய அங்கீகாரத்தையும் வழங்கி இருக்கிறது. 

படிப்புகள்: ஸ்வயம் திட்டத்தில் இதுவரை பள்ளிப்படிப்புகளாக 81 படிப்புகளும், சான்றிதழ் படிப்புகளாக 60 படிப்புகளும், இளநிலைப் பட்டப்படிப்புகளாக 925 படிப்புகளும், முதுநிலைப் பட்டப்படிப்புகளாக 331 படிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. இவை தவிர, இடைநிலை ஆசிரியர்களுக்கான பட்டயப்படிப்பு ஒன்றும் தனியே இடம் பெற்றிருக்கிறது.

மேற்காணும் படிப்புகள் அனைத்தும் கல்வி, அறிவியல், மானுடவியல், மேலாண்மை, நூலகம் (Library), கலை மற்றும் பொழுதுபோக்கு, கலைகள், பொறியியல், பொது, மொழி என்பது போன்ற வகைப்பாடுகளில் தனியாகப் பிரித்துத் தரப்பட்டிருக்கின்றன.
 
இங்கு இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு படிப்பிற்கும் படிப்பை அளிப்பவர், அவர் பணியாற்றும் கல்வி நிறுவனம் போன்ற தகவல்களுடன், அப்படிப்பு தொடங்கும் நாள், நிறைவு நாள், பயிற்சிகள், பரிசோதனைகள், ஒப்படைப்புப் பணிகள் (Assignments), பயிற்சி நேரம் போன்ற சில தகவல்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 

இதில் தேவையான படிப்பினைத் தேர்வு செய்து சொடுக்கினால், அப்படிப்பு வழங்கப்படும் மொழி, அப்படிப்பில் இடம் பெற்றிருக்கும் பாடங்கள், வாரந்தோறும் படிக்க வேண்டிய பாடங்கள், படிப்பிற்கான பாடங்களை அளிக்கும் வல்லுநர்கள் போன்ற தகவல்களையும், இதுவரை இப்படிப்புகளில் இணைந்து படித்த மாணவர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

சேர்க்கை: இங்கு இடம் பெற்றிருக்கும் படிப்புகளில் விரும்பும் படிப்பினைத் தேர்வு செய்து, அப்பாடப்பிரிவு தொடங்கும் காலத்திற்கு முன்பாகப் படிப்பதற்காகப் பதிவு செய்து கொள்ளலாம், அதன் பிறகு, நாம் பதிவு செய்த விவரங்களை உள்ளீடு செய்து படிப்பினைத் தொடங்கலாம். அப்படிப்பிற்காக அளிக்கப்படும் நிகழ்படம் (Video) வழியிலான பேராசிரியர்களது பயிற்சி வகுப்பின் வழியாகக் கற்றுக் கொண்டு, இணைய வழியில் நடத்தப்பெறும் தேர்வில் தேர்ச்சியடைந்து படிப்பினை நிறைவு செய்து கொள்வதுடன் உரிய சான்றிதழ் / பட்டங்களைப் பெற முடியும். 

ஸ்வயம் திட்டத்தின் வழியாக வழங்கப்படும் படிப்புகள் குறித்த விவரங்களையும், அது செயல்படுத்தப்படும் வழிமுறையும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் https://swayam.gov.in/  எனும் இணைய முகவரிக்குச் செல்லலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments