முகப்பு
மகளிர்மணி

10 ஆண்டுகளில் 90 பரிசுகள்!

பெங்களுரூவைச் சேர்ந்த கோல்ப் வீராங்கனை அவனி பிரசாந்திற்கு இந்த ஆண்டு மார்ச் 30 முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை அமெரிக்காவில் நடைபெறவுள்ள பெருமைக்குரிய அகஸ்ட்டா தேசிய மகளிர் அமெச்சூர் கோல்ப் சாம்பியன்ஷிப்

Updated On : 22 மார்ச் 2022, 10:59 pm IST
பகிர்:


பெங்களுரூவைச் சேர்ந்த கோல்ப் வீராங்கனை அவனி பிரசாந்திற்கு இந்த ஆண்டு மார்ச் 30 முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை அமெரிக்காவில் நடைபெறவுள்ள பெருமைக்குரிய அகஸ்ட்டா தேசிய மகளிர் அமெச்சூர் கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும்படி அழைப்பு வந்திருக்கிறது. அதை அவரால் நம்பவே முடியவில்லை.

ஏனெனில், இவர் கோல்ப் விளையாட்டில் பயிற்சிப் பெற்று இது வரை சிறிய அளவில் நடந்த "ஹீரோ உமன்ஸ் ப்ரோ கோல்ப் டூர்' மற்றும் "அனைத்திந்திய மகளிர் அமெச்சூர்' போட்டி போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றிருக்கிறாரே தவிர பெரிய அளவில் ஒரே ஒரு போட்டியில்தான் பங்கேற்றுள்ளார்.

""இந்த அழைப்பு எனக்கு ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்தாலும் இந்த அரிய வாய்ப்பை இழக்க நான் தயாராக இல்லை. இதில் கலந்து கொள்வதன் மூலம் கோல்ப் விளையாட்டில் எனக்கு இன்னும் அதிக ஆர்வம் ஏற்படுவதோடு நல்ல ஸ்கோர் எடுப்பேன்' என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது என்று கூறும் அவனி, கோல்ப் விளையாட்டில் 2012 -ஆம் ஆண்டு பயிற்சிப் பெறத் தொடங்கி இதுவரை 90-க்கும் மேற்பட்ட பரிசுகளைப் பெற்றுள்ளார். என்ன இவ்வளவு சின்ன வயதில் இத்தனை பரிசுகளா என்று ஆச்சரியப்படுகிறீர்களா?

Advertisement

Advertisement

இவரது தந்தை பிரசாந்த், குர்கானில் பணியில் இருந்தபோது, கோல்ப் விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்தார்.

அவனி மூன்று வயது குழந்தையாக இருந்தபோதே அப்பாவுடன் கோல்ப் மைதானத்திற்குச் சென்று மணிகணக்கில் ஆட்டத்தை கண்டு ரசிப்பதுண்டு.

சிறுவயதிலேயே தானும் கோல்ப் விளையாட வேண்டும் என்று அவனி ஆசைப்பட்டாலும், விளையாட பயன்படுத்தும் ஸ்டிக்கை கையில் பிடித்து அடிக்கும் அளவுக்கு உயரம் போதவில்லை. ஸ்டிக்கை பிடித்து ஆடும் அளவுக்கு வளர்ந்தவுடன், துவக்கத்தில் நாதன் சுந்தரம் என்பவர் அவனிக்கு பயிற்சியளிக்கத் தொடங்கினர்.

ஏழெட்டு மாதங்களுக்குள் இவரது தந்தை பணி நிமித்தமாக குடும்பத்துடன் நைஜீரியா புறப்பட வேண்டியதாயிற்று.

அங்கு செல்வதற்கு முன்பே அவனியை அவரது தந்தை பிரசாந்த் கோல்ப் கிளப்பில் ஜூனியர்களுக்கான பிரிவில் உறுப்பினராக்கி விட்டதால், நைஜிரியா சென்றவுடன் தொடர்ந்து கோல்ப் பயிற்சி பெற எவ்வித தடங்கலும் ஏற்படவில்லை.

அடுத்து சில ஆண்டுகள் நைஜீரியாவில் உள்ள "கிட்ஸ் கோல்ப் இன்டர்நேஷனல்' மூலமாக 2012- ஆம் ஆண்டு முதல் சிறிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெறத் தொடங்கினர்.

தொடர்ந்து ஸ்காட்லாந்தில் உள்ள இவரது வயதுக்கேற்றவர்களுக்கான "யு.எஸ். கிட்ஸ் யுரோப்பியன் சாம்பியன்ஷிப்' போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்.

2014 - ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் பெங்களூருவில் கிரீன்வுட் ஹை இன்டர்நேஷனல் பள்ளியில் படித்துக் கொண்டே முழு அளவில் கோல்ப் பயிற்சி பெற்று போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார்.

""என்னுடைய கடினமான பயிற்சியும் ஆர்வமும் தான் அகஸ்ட்டா தேசிய மகளிர் அமெச்சூர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது.

என் திறமையை வெளிப்படுத்த மேலும் வாய்ப்புகள் கிடைக்குமென நம்புகிறேன்'' என்று கூறும் அவனி, அமெரிக்கா செல்ல தன் தந்தையுடன் ஆயத்தமாகிவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.