FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

எவரெஸ்ட் சிகரம் ஏறுவதில் 'ஹாட்ரிக்' சாதனை

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆகஸ்ட் 15-இல் நடைபெற்ற சுதந்திர தினத்தன்று நடைபெற்ற விழாவில், கோவைக்கு அருகே உள்ள கிணத்துக்கடவைச் சேர்ந்த முப்பது...

22 ஆகஸ்ட் 2026, 9:36 pm IST
பகிர்:

​பி‌ஸ்மி பரி​ணா​ம‌ன்

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆகஸ்ட் 15-இல் நடைபெற்ற சுதந்திர தினத்தன்று நடைபெற்ற விழாவில், கோவைக்கு அருகே உள்ள கிணத்துக்கடவைச் சேர்ந்த முப்பது வயதான விமானப் பொறியாளர் நெளஸீன் பானு சாந்துக்கு தமிழ்நாடு அரசின் 2026-க்கான கல்பனா சாவ்லா விருதை முதல்வர் சி.ஜோசப் விஜய் வழங்கினார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக எவரெஸ்ட் மாரத்தானை மேற்கொண்டு சாதனை படைத்த அவர் தனது பயணம் குறித்துக் கூறியது:

'ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் வசித்தபோது, எனது ஆறாவது வயதில் அப்பா ஒரு மலைக்கோயிலுக்கு அழைத்துச் சென்று மலையில் ஏற ஊக்குவித்தார். படிப்படியாக வரம்புகளைத் தாண்டுதல், சவால்களை எதிர்கொள்ளுதல், விளையாட்டின் மூலம் மற்றவர்களுக்கு உத்வேகம் அளித்தல் போன்ற குறிக்கோள்களை உள்ளடக்கிய எனது வாழ்நாள் தேடலாக உருவெடுத்தது.

Advertisement

Advertisement

உலகின் மிகக் கடினமான, அதிக உயர மாரத்தான்களில் ஒன்றான எவரெஸ்ட் மாரத்தான், நேபாளத்தின் எவரெஸ்ட் பகுதியில் குறைந்த ஆக்சிஜன் அளவு, உறைபனி வெப்பநிலை, கரடுமுரடான மலைப்பகுதி உள்ளிட்ட கடுமையான சூழ்நிலைகளில் நடைபெறுகிறது. ஒவ்வொரு அடியும் உடல் வலிமையை மட்டுமல்ல, மன வலிமையையும் விடாமுயற்சியையும் சோதிக்கிறது.

2024, 2025, 2026-ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை 42 கி.மீ. தூரம் கொண்ட 'டென்சிங்-ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தான்' போட்டியை நிறைவு செய்த 'முதல் பெண் வீராங்கனை' என்ற சாதனை படைத்தேன்.

2026-ஆம் ஆண்டு மே 29-இல் 42.195 கி.மீ. முழு மாரத்தான் தூரத்தை நான் வெற்றிகரமாக நிறைவுசெய்தேன். இதன் மூலம், முழு மாரத்தான் பிரிவை முடித்த 254 சர்வதேசப் பங்கேற்பாளர்களில், இந்தச் சாதனையை நிகழ்த்திய 'ஒரே இந்திய தடகள வீராங்கனை' என்ற பெருமையைப் பெற்றேன். எவரெஸ்ட் மாரத்தான் 'ஹாட்ரிக்' சாதனையை நிறைவுசெய்ததுடன், எனது விளையாட்டுப் பயணத்தில் ஒரு வரையறுக்கும் மைல்கல்லாகவும் விளங்குகிறது. இதற்காகவும், எனது தைரியம், துணிச்சலான முயற்சிக்காகவும் 'கல்பனா சாவ்லா விருது' வழங்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக மிகக் கடினமான சவால்களை எதிர்கொண்டுள்ளேன். விமானப்படையில் இணைந்து தேசப் பணிபுரிவதுதான் எனது லட்சியமாக இருந்தது. இதற்காக உடல் வலிமையையும் சகிப்புத்தன்மையையும் வளர்த்துக்கொள்ளவே மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றேன். 2021-இல் வேலைக்காக சென்னைக்கு வந்தவுடன் ட்ரிலாக் சந்திரன் என்பவரிடம் மலையேற்றத்தின் அடிப்படைப் பயிற்சிகளைப் பெற்றேன். பின்னர், மனநல மேம்பாட்டுக்காகவும் உடல் வலிமையை வளர்த்துக்கொள்ளவும் 'ட்ரெயில் ரன்னிங்' (இயற்கை நிலப்பரப்பில் ஓடும் விளையாட்டு) எனும் விளையாட்டைத் தேர்ந்தெடுத்தேன்.

'டென்சிங்-ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தான்' போட்டியை, அதுவும் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நிறைவு செய்வதற்கு, குறைந்த ஆக்சிஜன் அளவு, உறைபனி, கடும் குளிர், கரடுமுரடான நிலப்பரப்பு ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நான் மேற்கொண்ட பயிற்சி மிகவும் தீவிரமானதாக இருந்தது. 2023-ஆம் ஆண்டில் லடாக்கில் 42.195 கி.மீ. மாரத்தான், 22 கி.மீ. இன்லைன் ஸ்கேட்டிங் (சக்கர காலணி சறுக்கு விளையாட்டு) ஆகியவற்றை நிறைவு செய்து, இரண்டு 'நோபல் உலகச் சாதனைகளை'யும் படைத்தேன்.

சமூக கட்டுப்பாடுகளை, சமூக எதிர்பார்ப்புகளை உடைத்தெறிவதே மிகப் பெரிய சவால்களில் ஒன்றாகும். திருமணத்தைத் தாண்டி பெண்கள் கனவு காண முடியாத சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். இருந்தாலும், எனது முயற்சிக்கு என் பெற்றோரும் சகோதரரும் ஆதரவளித்தனர்.

முதல் முறை போட்டியில் பங்கேற்க முடிவு செய்தபோது, எனது திருமணத்துக்காகச் சேமித்திருந்த நகைகளைத் தந்தை அடகு வைத்து பணத்தை அளித்தார். எனது தந்தை ஓய்வுபெற்ற மருந்தாளுநர், தாய் வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறார். சகோதரர் சிறு தொழில் உரிமையாளர்.

நாட்டில். 'ட்ரெயில் ரன்னிங்' (இயற்கை வழி ஓட்டம்) குறித்த விழிப்புணர்வு மக்களிடையே பரவுவதையே விரும்புகிறேன். அதற்கு முக்கியத்துவம் கிடைக்க உதவ வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷாவிடம் நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன். 2030-க்குப் பின்னர் ஒலிம்பிக் போட்டிகளில் 'ட்ரெயில் ரன்னிங்' இடம்பெறும் என்று நம்புகிறேன்' என்கிறார் நெளஸீன் பானு சாந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments