சிறுவயது சிந்தனையில் மலர்ந்த இரு நூல்கள்!
கல்வி, இலக்கியம், பேச்சு, எழுத்து எனப் பன்முக ஆளுமையுடன் விளங்கி வருகிறார், மாணவர் செ.தமிழ்ச்செல்வன்.
கல்வி, இலக்கியம், பேச்சு, எழுத்து எனப் பன்முக ஆளுமையுடன் விளங்கி வருகிறார், மாணவர் செ.தமிழ்ச்செல்வன். காரைக்குடி வித்யாகிரி பதின்ம மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவரும் இவர், 'கதைக்குள் விதை', 'வட்டமிடு கண்டுபிடி' ஆகிய இரு நூல்களை எழுதி, இளம்வயதிலேயே சாதனை படைத்துள்ளார். அவரிடம் பேசியபோது:
'சரியோ, தவறோ எழுதுவதே பெருமுயற்சி என சிறுவயதிலேயே எனக்கு ஆர்வத்தைத் தூண்டி, பார்ப்பதை, படிப்பதைக் கதையாக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர்கள் எனது பெற்றோர் மெ.செயம்கொண்டான் - பழ.அங்கம்மை.
மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, திருக்குறள் முழுவதையும் மனனம் செய்து, ஒப்புவித்து, தமிழ்நாடு அரசின் குறள் பரிசுத் திட்டத்தில் தேர்வாகி, ரூ.15ஆயிரம் பரிசு பெற்றேன்.
Advertisement
Advertisement
விருதுநகரில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில், அப்போதைய அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் விருது பெற்றேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருவாசக வரிகளை மனனம் செய்து ஒப்புவித்து 'திருவாசகத் தேன்' எனும் பட்டம் பெற்றேன்.
பொன்னமராவதி முத்தமிழ்ப் பாசறை இலக்கிய அமைப்பு வழங்கிய தமிழ்ச் சுடர் விருதைப் பெற்றேன். காரைக்குடியில் நடைபெற்ற பாரதி விழா, புத்தகத் திருவிழா, வள்ளுவர் பேரவை போன்றவற்றிலும் பரிசுகளைப் பெற்றுள்ளேன்.
காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற கண்ணதாசன் நூற்றாண்டு விழாவில், 'கண்ணதாசன் நன்மணி' என்ற விருதையும் பெற்றேன்.
'கதைக்குள் விதை' என்ற நூலில் மனசாட்சி, கனவு, ஆணவம், கூடா நட்பு போன்ற முக்கியமான கருத்துகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை எளிமையாகவும், அர்த்தம் உள்ளவையாகவும் வடிவமைத்துள்ளேன். ஒவ்வொரு கதைக்கும் பொருத்தமான கருவை அமைத்து, அதனுடன் தொடர்புடைய திருக்குறளை இணைத்து இருக்கிறேன்' என்கிறார் தமிழ்ச்செல்வன்.
வித்யாகிரி மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் கூறியது:
'நூல்களைப் படிக்கவே சிரமப்படும் சிறுவர்கள் மத்தியில் வெகு சுலபமாய் நூலைப் படைத்துள்ள தமிழ்ச்செல்வன் உண்மையில் தமிழுக்குக் கிடைத்த செல்வம்தான். பத்தோடு பதினொன்று என்றில்லாமல், 11-ஆம் வயதிலேயே 16 சிறுகதைகளை எழுதியுள்ளார். எடுத்துக் கொண்ட கருப்பொருளும், நமது புருவத்தை உயர்த்தி, அவரது உருவத்தை மறைக்க வைக்கிறது.
சிறுகதையின் இலக்கணமான எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என மூன்றுமே அவர் எழுத்தில் சிறப்பாய் கைவரப் பெற்றுள்ளது. தலைப்பு வைக்கும் யுக்தியும், வெகுவாய் ரசிக்க வைத்தது.
சாதாரண குழந்தைகள் சண்டை மூலமாக, உலக நாடுகளின் போரைச் சுட்டிக்காட்டி, பொறுப்பற்ற தலைவர்களின் தலையில் இவர் வைத்த குட்டு நம்மை சபாஷ் போட வைக்கிறது. சிறுகதையின் முதுகெலும்பே நடைதான். அதை இன்னும் கற்றுக் கொண்டால், சிறுகதை உலாவில் ஓர் ஓட்டம் வருவார். அதற்கான வெள்ளோட்டமே இந்தச் சிறுகதைத் தொகுப்பு. இன்னும் சிறுகதையின் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு தமது வாசிப்பை விசாலமாக்கினால், இவரின் பெயர் நிச்சயம் சிறுகதை இலக்கியத்தின் விலாசமாகும்' என்கிறார்.
பொ.ஜெயச்சந்திரன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.