FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

இரண்டு என்பது ஒன்றை விடப் பெரியது!

 குழந்தைகளின் குதூகலத்தை இயல்புகளை, இயற்கை சார்ந்த வளர்ச்சியைப் பொசுக்கும் கல்வி முறையை மாற்றி அந்தப் பிஞ்சுகளின் மன நிலையறிந்து, அவர்களை மையமாக வைத்து நடத்திய ஆராய்ச்சியின் பெரும் பலன்

Updated On : 20 செப்டம்பர் 2012, 6:21 pm IST
பகிர்:

 குழந்தைகளின் குதூகலத்தை இயல்புகளை, இயற்கை சார்ந்த வளர்ச்சியைப் பொசுக்கும் கல்வி முறையை மாற்றி அந்தப் பிஞ்சுகளின் மன நிலையறிந்து, அவர்களை மையமாக வைத்து நடத்திய ஆராய்ச்சியின் பெரும் பலன்தான் மான்டிசரி பள்ளி முறை.

 நூறு வருட வரலாறுடைய இந்த அணுகுமுறையின் முக்கிய கோட்பாடுகளை வடிவமைத்துக் கொடுத்தவர்- இதற்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இத்தாலி நாட்டு மருத்துவர்- மரியா மாண்டிசரி. இந்த முறையில் ஆர்வம் கொண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இதற்கான பயிற்சிப் பள்ளியில் தேர்வு பெற்றிருப்பவர் சத்யபாமா. வில்லிவாக்கத்தில் பள்ளி ஒன்றை ஒரு நீண்ட கால கண்ணோட்டத்துடன் நடத்திவரும் இவர் கற்றதை முழுமையாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

 இவரது அனுபவங்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:

Advertisement

Advertisement

 ""1984 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் இசைத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றேன். அப்பொழுதே முனைவர் சீதா பாடகராவதைக் காட்டிலும் என்னிடம் பொதுமக்களிடம் அச்சமின்றி பேசும் திறன் இருப்பதைச் சுட்டிக் காட்டினார். பிறருக்குச் சொல்லிக் கொடுத்தல் என்னுடைய பலம் என்று சொன்னார். அது நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதோடு கச்சேரி ஆசையைவிட்டுவிட்டு ஆசிரியராகப் பல பள்ளிகளில் பணியாற்றினேன். இந்தப் பள்ளியனுபவம் எனக்கு மெல்ல மெல்ல சில உண்மைகளைப் புலப்படுத்தியது. மான்டிசரி அணுகுமுறைப் பள்ளிகள், தென் சென்னையில் நிறைந்திருந்தாலும் வட சென்னையில் ஒரே ஓர் இடத்தில்தான் உள்ளது. ஜமாலியாவில் (பெரம்பூர் பகுதி) மட்டுமே. நான் இருந்த பகுதியில் இதை நிறுவினேன்.

 மான்டிசரி அம்மையார் குழந்தைகளுக்காக ஒரு தயாரிக்கப்பட்ட சூழலை உருவாக்கச் சொல்கிறார். குழந்தையின் சமூக நிலைபற்றியும் அதன் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் பற்றியும் குரல் எழுப்புகிறார். அவர் இந்தியா வந்திருந்து காந்தி, ருக்மணி அருண்டேல் போன்றவர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்.

 குழந்தையானது பிறந்து இரண்டாவது வயது வரை அன்னையின் அரவணைப்பிலிருக்கிறது. இரண்டரை முதல் நாலரை வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தற்காலத்தில் கவனிப்பு போதாமல் இருக்கிறது. கூட்டுக் குடும்பம் இல்லாமல் போய்விட்டது. எல்லாம் குறுகிய வட்ட குடும்பம்தான். அத்தை, மாமி, சித்தப்பா எல்லாம் வெறும் வாய் வழிச் சொற்கள்தான். பெற்றோர் வேலைக்குச் சென்று விடுகின்றனர். இரண்டரை முதல் நாலரை வயது குழந்தையின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அத்தியாயம் என்கிறது மான்டிசரி முறை. ஆனால் அந்த வயதில் நிறைய குழந்தைகள் அன்புக்கு ஏங்குபவர்களாக இருக்கின்றனர்.மான்டிசரி பள்ளிகளில் நான்கு அர்த்தமுள்ள கொள்கைகளைப் பின்பற்றுகிறோம். அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பயிற்சிகள் கொடுத்தல், புலன் சார்ந்த செயல்பாடுகளை வளர்த்தல், மொழித்திறனை வளர்த்தல், கணக்கை அளவை மற்றும் நிலுவை சார்ந்த ஒன்றாக பாவிக்கச் செய்தல். பொதுவாக இவையெல்லாம் குழந்தையின் தேச வழக்கங்களுக்கு ஒத்து இருக்க வேண்டும். இங்குள்ள குழந்தைக்கு பாயை விரித்தல், சுருட்டல் ஆகியவற்றைக் கற்றுக் கொடுப்போம். இதுவே அமெரிக்காவில் உள்ள குழந்தைக்குப் பொருந்தாது. அங்கு பாய், கார்பெட்டாக உருவெடுக்கும். ஐம்புலன்களும் செயலாற்றி, கை மற்றும் கண், காது மற்றும் உடல் ஒருங்கிணைந்து செயல்படுதல் ஆகியவை குழந்தையின் போக்கிலேயே சென்று அறிவுறுத்தப்படும்.

 மொழியை முதலில் பேச வேண்டும், பிறகு படிக்க வேண்டும், பிறகுதான் எழுத்து. ஆக எழுத முற்படுவதே நாலரை வயதில்தான் ஏற்படும். கணக்கைப் பொறுத்தவரை இரண்டு என்றால் அது ஒன்றை விடக் கூடுதலான ஒன்று என்பதையும் இரண்டு ஒன்றுகள்தான் ஒரு இரண்டாகிறது என்பதையும் இங்குள்ள குழந்தைகளுக்கு மிகுந்த யோசனைக்குப்பின் தயார் செய்த கருவிகள் மூலம் புலப்படச் செய்வோம். மூளையின் இடது வலது பாகங்கள் இரண்டுமே ஒரே சீராக வளர இவை எல்லாம் சில எளிமையான முறைகள்.

 இங்கே மழலை மாறாத ஒன்றே முக்கால் வயதுக் குழந்தை முதல் தெளிவாகப் பேசும் குழந்தைகள் வரை பல பிள்ளைகள் இருப்பதைப் பார்க்கலாம். பள்ளியில் சேர்ப்பதற்கு அப்பா, அம்மா இருவரும் குழந்தையுடன் வர வேண்டும் என்பேன். அவர்களிடம் சுமார் ஒரு மணி நேரம் கலந்து பேசி அவர்கள் தங்கள் குழந்தைக்கு நடத்தப் போகும் கல்வியைக் கேட்டு ஒரு அதீத நம்பிக்கை வந்த பிறகே விண்ணப்பத்தைக் கொடுப்பேன். இதனால் எனக்குப் பின்னால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கும்.

 இங்குள்ள பிள்ளைகள் ஏதோ கிண்டர் கார்டன் நர்ஸரி பிள்ளைகள் அல்ல. இவர்கள் தன்னம்பிக்கை, சுயமரியாதை, பகிர்ந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல், சக குழந்தையிடம் கேட்டறிதல் ஆகிய குணங்களை அனுபவத்தால் பெறுகிறார்கள்.

 நம்மிடம் உரையாடிய சத்யபாமா இறுதியாக நம்மிடம் கேட்டது இதைத்தான்: 24/28 வயதில் ஒருவருக்குக் கலந்துரையாடல் யுக்திகளையும், நேர்முகம் எதிர் கொள்ளும் பாடங்களையும் தவறில்லாத ஆங்கில உச்சரிப்பையும் முகாம் வைத்துக் கற்றுத் தர முடியுமா? ஆரம்பக் கல்வியில் இதையெல்லாம் தவறவிடுதல் முறையா? மான்டிசரி இதற்கான பதில்களையும் தீர்வுகளையும் தயாராக வைத்திருக்கிறது. இதை உணர்ந்து பயன் பெற வேண்டியது ஒரு சமூக அவசியமாகும்.

 படம் : யு.கே.ரவி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments