முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பள்ளியில் விவசாயப் புரட்சி!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே அரசுப் பள்ளியில் வாழைத் தோட்டம் அமைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் விவசாயப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

Updated On : 9 ஆகஸ்ட் 2020, 6:00 am IST
பகிர்:


கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே அரசுப் பள்ளியில் வாழைத் தோட்டம் அமைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் விவசாயப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

உலக அளவில் தற்சார்பு உள்ள தொழிலாக இருந்து வருவது விவசாயம் மட்டும்தான். யார் என்ன தொழில் செய்தாலும், அவர்களின் உணவுத் தேவைக்காக விவசாயம் செய்பவர்களை அணுகித்தான் ஆகவேண்டும்.

விவசாயம் குறித்து விழிப்புணர்வு இல்லாமலும், அது குறித்த ஆர்வம் இல்லாமலும் மாற்றுத் தொழிலுக்குச் செல்கின்றனர். எனவே விவசாயத்தின் முக்கியத்துவத்தை பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் ஏற்படுத்தும் முயற்சியாக பொள்ளாச்சியை அடுத்த நாயக்கன்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தண்டபாணி, ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் இணைந்து இயற்கை விவசாயம் மூலம் வாழைத் தோட்டத்தை உருவாக்கி விவசாயத்தில் புரட்சி செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது நாயக்கன்பாளையம் கிராமம். இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியருடன் சேர்த்து 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 180 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளி 1.25 ஏக்கர் பரப்பு கொண்டது. இதில் பள்ளி வகுப்பறை கட்டடங்கள் போக மீதம் சுமார் 50 சென்ட் இடம் காலியாக உள்ளது.

இந்த இடத்தில் தேசிய பசுமைப் படையின் நிதியுதவியுடன் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து விவசாயம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக 50 சென்ட் இடத்தை உழுது, அதில் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்தனர். அதில் 150-க்கும் அதிகமான வாழைக் கன்றுகளை நடவு செய்தனர்.

பள்ளி வளாகத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறு, தொட்டி ஆகியவற்றைப் பயன்படுத்தி சொட்டு நீர்ப் பாசனம் மூலம் வாழைக்கு நீரை ஊற்றினர். இயற்கை உரம் வைத்து வாழையைப் பராமரித்து வந்தனர். 9 மாதங்களைக் கடந்த நிலையில் தற்போது வாழைகளில் பெரிய அளவில் வாழைத் தார்களைப் பார்க்க முடிகிறது. சில நாள்களில் வாழைகள் அறுவடைக்குத் தயாராகிவிடும்.

பள்ளிக்குச் சென்றால் பள்ளி என்ற நினைவுகள் மாறி ஒரு பெரிய விவசாயத் தோட்டத்துக்குள் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. நிலத்தை உழவு செய்ததில் இருந்து வாழைத்தார் விடும் வரை மாணவர்களை விவசாயத்தில் ஈடுபடுத்தியுள்ளதால் மாணவர்களுக்கு விவசாயம் குறித்த ஆர்வமும், விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்று பெருமைப்படுகின்றனர் பள்ளி நிர்வாகத்தினர்.

இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் தண்டபாணி கூறுகையில், ""பொள்ளாச்சி விவசாயம் சார்ந்த பகுதி ஆகும். தற்போதுள்ள இளைய தலைமுறையினரில் பலர் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டாமல் உள்ளனர். அதனால், பள்ளிப் பருவத்தில் விவசாயம் குறித்து ஆர்வம், விழிப்புணர்வு, நீர் மேலாண்மை ஆகியவை குறித்து செயல்முறையாக நாங்கள் எங்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளோம். எங்களது பள்ளியில் வாழைத் தோட்டம் அமைத்து தற்போது அறுவடைக்குத் தயாராகும் நிலையில் உள்ளது. இந்த வாழைத் தார்களை விற்பனை செய்து அதில் கிடைக்கும் லாபத்தில் மேலும் விவசாயத்தைப் பெருக்குவோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.