FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

காதல் வாழ்க்கையின் தரிசனம்!

எளிமைதான் எல்லா நொடிகளையும் மலர்த்தும். மிக எளிமையாக, சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அணுகும் மனப் பக்குவம் கொண்டவர்கள், எத்தனை மகத்தானவர்கள்.

Updated On : 22 ஜூன் 2025, 8:31 pm IST
பகிர்:

எளிமைதான் எல்லா நொடிகளையும் மலர்த்தும். மிக எளிமையாக, சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அணுகும் மனப் பக்குவம் கொண்டவர்கள், எத்தனை மகத்தானவர்கள். வெள்ளந்தியான, சந்தோஷமான மன அமைப்பு கொண்டவர்களைப் பார்க்கும்போது, அவர்களைப் போல் நம்மாலும் வாழ முடியாதா என்று தோன்றும். சில விநாடிகளேனும் அந்த வருத்தம் நம்மை தின்று விடும்.

எல்லாமும் இயந்திரமாகிவிட்ட போதிலும், அன்புக்கான தருணங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. செல்பேசிகள், இணையம் என வந்து விட்ட போதிலும், சொல்லப்படாத சொற்களும், பகிரப்படாத தனிமையும் இன்னும் ஏராளமாக இருந்துகொண்டேதான் இருக்கின்றன.

ஆனால் அன்பு மட்டுமே பிரதானமாக இருந்த காலங்கள் எங்கே..? அப்படி ஒரு நினைப்பை உள்ளுக்குள் கொண்டு வந்து பார்க்கிற படம்தான் இது. பேச்சில் ஈர்க்கிறார் அஜயன் பாலா. 'மைலாஞ்சி' படத்தின் இயக்குநர். திரைக்கதை உருவாக்கம், வசனம், எழுத்துப் பணி, நடிப்பு என சுழல்கிறவர். இந்த முறை இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.

Advertisement

Advertisement

'மைலாஞ்சி'... தலைப்புக்கு பொருந்தி வருகிற அர்த்தம் என்ன....

இந்தக் கதைக்காக உருவாக்கப்பட்ட ஒரு ஊரின் பெயர். கதையின் முழுக்க முழுக்க ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரங்கள் காடுகளைப் போல அடர்த்தி மிக்கவை, அவர்களிடம் பல ரகசியங்கள் உள்ளன. முழுக்க முழுக்க மூடுபனி, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது என நினைக்கிறேன். கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் விதமாக இயற்கை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

வருடத்தின் பெரும்பாலான நாள்களில் மழை பெய்து கொண்டிருக்கும் அடர்ந்த வனம் சூழ்ந்த கிராமம் ஒன்றில் ஒரு காதல் ஜோடி எதிர்கொள்ளும் மன போராட்டத்தை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இப்படம் விவரிக்கிறது. பல சம்பவங்கள் அடங்கிய ஒரு காதல் வாழ்க்கை தரிசனம் இது. காதல் அதி முக்கியமானது. ஒரு காதல். ஆனால், சந்தர்ப்பமும் சூழலும் இவர்களை இடம் மாற்றி வைக்கிறது.

எல்லோருக்கும் வாழ்க்கையில் இரண்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் வரும். ஆனால், காதலில் எப்படியும் ஜெயித்தே ஆக வேண்டும் என்கிற வழிதான். இப்படியும் போகலாம், அப்படியும் போகலாம் என்பது இதில் இல்லை. இதில் வருகிற கதை நாயகன் தேர்ந்தெடுக்கிற வழிதான் முக்கியமானது. வாழ்வில் எல்லாமும் போன பின்பு, அன்புக்கு மட்டுமே நிஜமாக இருப்போம் என்று போகிற இடங்களும் வருகிறது. இன்னமும் இங்கே மென்மையும், பிற மனிதர் சார்ந்த அக்கறையும் அருகிப் போய்விடவில்லை என்பதும் புரியும்.

காதலை அர்த்தப்படுத்துகிற தலைமுறை பிள்ளைகள் மாறியிருக்கிற காலம் இது....

எல்லாவற்றுக்கும் இங்கே முன் மாதிரிகள் இருப்பதால், உங்களுக்கு அப்படித் தோன்றும். ஆனாலும், இன்னும் உண்மையான அன்புக்கு கிடையாய் கிடப்பவர்கள் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். காதல் என்கிற அற்பமான, அற்புதமான சந்தோஷம் இருப்பதால்தான் சமூகம் வாழ்கிறது.

இந்த கதை, உறவுகள் கூட பழையதுதான்.ஆனால், அதை எனக்கான உணர்வாக, மனிதனாக காட்சிப்படுத்தியதுதான் புதிது. என் கடவுள், என் மதம், என் ஜாதி, என் பயம், என் பணம்... இப்படி எத்தனை எத்தனை விஷயங்கள் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. இந்த எல்லாவற்றையும் கடந்தவர்கள் மரணத்தை அடைய துடிக்கிறார்கள்.

ஒரு சிலர்தான் சில நல்ல நிமிடங்களைத் தவிர வேறு எதையும் விட்டு போக கூடாது என நினைக்கிறார்கள். இந்த மாய மந்திரம் இந்த சினிமாவுக்கும் பொருந்தும். மனித உறவுகளின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. காதலை சொல்லலாம். சொல்லாமல் கூட இருக்கலாம். காதல், பேசுகிற விஷயமில்லை. தயவு செய்து அதை உணருங்கள் தோழர்களே...

நடிகர்கள்...

இதுதான் கதை என்று முடிவான வேகத்தில் எல்லா நடிகர்களையும் முடிவு செய்து விட்டேன். கதையின் உண்மைத்தன்மைக்கு பக்கத்தில் இருப்பவர்களை மட்டும்தான் இந்தப் படத்திற்காக விரும்பினேன். அப்படி வந்தவர்தான் ஸ்ரீராம் கார்த்தி. சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர். அதே போல் கிரிஷா குரூப் ஹீரோயின். கோலி சோடா

2-இல் நடித்தவர். யோகி பாபு, முனீஷ்காந்த், சிங்கம்புலி மற்றும் தங்கதுரை ஆகியோர் முதன்மையான இடங்களில் நடிக்கிறார்கள். இவர்கள் இணைந்து நிற்கிற புள்ளிதான் கதையும் கூட. இப்போது இருக்கிற ரசிகர்கள் மிகவும் சினிமா தெரிந்தவர்கள். அவர்களை தியேட்டரில் உட்கார வைக்க நிறைய திறமை தேவைப்படுகிறது. அழகான கதை. அவ்வளவுதான். ஒளிப்பதிவுக்கு செழியன். படத்தொகுப்புக்கு ஸ்ரீகர் பிரசாத் என அனுபவம் வாய்ந்தவர்கள் கூடவே வந்தது இன்னும் பலம்.

இளையராஜா இசை...

நமக்கு எல்லாமே இளையராஜாதான். பறவைகள் தடயங்களே இல்லாமல் போய் விடுகின்றன. அவற்றின் எச்சங்கள் மரங்களாவதைப் போலத்தான் இசையும், பாடல்களும். இசையின் எல்லா நுணுக்கங்களையும் இளையராஜா தொட்டு விட்டார். இனி என்ன இருக்கிறது... இசையின் இன்னொரு பரிமாணம்தான் இந்தப் படம்.

இந்தத் தலைமுறைக்கு அவர் கொண்டு போய் சேர்க்க நினைக்கிற இசை. அவ்வளவு இலகுவாகக் கைக்கு வந்திருக்கிறது. இந்தப் படத்தின் பலமே ராஜாவின் இசைதான். ராஜாவின் இசை உள்ளே வந்த பின்னர்தான், படத்துக்கு இன்னொரு கலர் வந்து சேர்ந்தது. இப்போது இசையின் வடிவம் மாறியிருக்கலாம். உயிரோட்டம் மாறியிருக்கலாம். எத்தனை காலம் ஆனாலும் ராஜாவின் இசை மாறாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments