ஞானபீட விருது: 60 ஆண்டுகள், 66 படைப்பாளிகள்
தொழிலதிபர் சாஹு சாந்தி பிரசாத் ஜெயின் குடும்பத்தினர், 1961-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி அவரது ஐம்பதாவது பிறந்த நாளில், குடும்பத்தின் நினைவாக சர்வதேச அளவில் மதிப்பும் பெருமையும் தரும் ஒரு திட்டத்தை உருவாக்க நினைத்தனர்.
தொழிலதிபர் சாஹு சாந்தி பிரசாத் ஜெயின் குடும்பத்தினர், 1961-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி அவரது ஐம்பதாவது பிறந்த நாளில், குடும்பத்தின் நினைவாக சர்வதேச அளவில் மதிப்பும் பெருமையும் தரும் ஒரு திட்டத்தை உருவாக்க நினைத்தனர். அந்தச் சிந்தனையின் விளைவாக, இந்தியாவில் பல மொழிகளில் உள்ள இலக்கியங்களை ஹிந்தி மொழிக்குக் கொண்டு வர வேண்டும் என முடிவானது.
இதுதொடர்பாக இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்களை அழைத்துப் பலமுறை பேசிய பிறகு, சிறந்த படைப்பாளிக்கு ஞானபீட விருது அளிக்க முடிவானது. 1965-ஆம் ஆண்டில் மலையாள எழுத்தாளர் ஜி.எஸ்.குருப் ஞானபீட விருது பெற்றார். கடந்த 60 ஆண்டுகளில் 66 பேர் ஞானபீட விருது பெற்றனர். 2025-ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருதை கவிஞர் வைரமுத்து பெற்றார்.
அகிலன், ஜெயகாந்தனுக்குப் பிறகு ஞானபீட விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் கவிஞர் வைரமுத்துவுக்கு விருதின் சின்னமான வாக்தேவி வெண்கலச் சிலையும் பரிசுத்தொகை ரூ.11 லட்சமும் பாராட்டுரைத் தொகுப்பும் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த வாக்தேவி (சரஸ்வதி) சிலை 1035-ஆம் ஆண்டில் மன்
னர் போஜராஜனால் மத்திய பிரதேசத்தில் கட்டப்பட்ட சரஸ்வதி கோயிலில் அமைந்த சிலையின் வடிவம். அதுவே ஞானபீட விருதின் சின்னம்.
ஞானபீட விருது வழங்கும்போது, அதற்குத் தகுதியான நபர்களை நிர்ணயிக்கும் விதிமுறைகள் வகுக்கப்பட்டு தேர்வுக் குழு நியமிக்கப்பட்டு, விருதுக்கு உரியவரின் சாதனைகளை பட்டியலிட்டு அந்தப் படைப்பாளியின் இலக்கியத் தரம் குறித்து மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளையும் இடம்பெறச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
வைரமுத்து இந்தப் பரிசுக்குத் தகுதியுடையவர் என்பதற்கான கட்டுரைகள் இந்தப் பாராட்டுரை புத்தகத்தில் உள்ளன. 73 வசந்தங்கள், 73 கோடைகள் என தமிழ்ப் பேராசிரியர் வி.சிவா எழுதிய கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம் வைரமுத்துவின் புலமையைப் பேசுகிறது. 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நாகலட்சுமி சண்முகம் அந்த நாவலை தான் மொழிபெயர்த்தபோது பெற்ற இலக்கிய அனுபவங்களை விவரிக்கும் ஆங்கில கட்டுரை, வைரமுத்துவின் வாழ்வை விளக்கும் ஆங்கில கட்டுரை, படங்கள் எல்லாமும் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பாராட்டுரைப் புத்தகத்தில் கவிஞர் வைரமுத்துவைப் பாராட்டி தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய கட்டுரை, தமிழிலேயே பிரசுரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.