வெப்பத்தின் வெறியாட்டம்
காவியங்களையும் புராணங்களையும் விவரிக்கப் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் முந்நூறு ஆண்டுகள் பழமையான நாட்டார் கலைவடிவமான கட்டைக்கூத்து, அன்றாட பிரச்னையான 'காலநிலை மாற்றம் & கடும் வெப்பம்' குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த களம் இறங்கியுள்ளது.
காவியங்களையும் புராணங்களையும் விவரிக்கப் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் முந்நூறு ஆண்டுகள் பழமையான நாட்டார் கலைவடிவமான கட்டைக்கூத்து, அன்றாட பிரச்னையான 'காலநிலை மாற்றம் & கடும் வெப்பம்' குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த களம் இறங்கியுள்ளது.
அசார் சோஷியல் இம்பாக்ட் அட்வைசர்ஸ், காலநிலை கலாசாரக் கூட்டமைப்பு ஆகியன இணைந்து ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வேதவள்ளி வித்யாலயா பள்ளியில் ஜூலை 28-இல் நடத்திய நிகழ்ச்சியில், திலகவதி பழனி தலைமையிலான ஸ்ரீ திலகம் கட்டைக்கூத்துக் குழுவினர் 'வெப்பத்தின் வெறியாட்டம்' என்ற விழிப்புணர்வு நாடகத்தை அரங்கேற்றினர்.
முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் முரசு இசை, வண்ணமயமான ஒப்பனைகள், விரிவான அலங்காரங்கள், நீண்ட கதை சொல்லல் ஆகிய கட்டைக்கூத்தின் பாரம்பரியக் கூறுகளுடன் நாடகம் அரங்கேறியது.
Advertisement
Advertisement
நாட்டில் வெப்ப அபாயம் அதிகம் உள்ள பத்து மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். கோடைக்காலத்தில் அதிக வெப்பம் பதிவாகும் பகுதிகளான ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள ஏழு பள்ளிகளில் நடைபெற உள்ள விழிப்புணர்வுச் சுற்றுப்பயணத்தின் தொடக்கமாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் குழந்தைகள்தான். 2026 கோடைக்காலத்தில், வெப்பம் தொடர்பான பாதிப்புகளால் 10-இல் 7 குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவோ அல்லது வழக்கமான செயல்பாடுகளில் ஈடுபடவோ முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், கடும் வெப்பத்தால் 76 சதவீத குழந்தைகள் கவனம் சிதறியது. இதனால் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. ஐ.தாஹிரா
குழந்தைகளின் உடல்நலம், கல்வி, மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகிறது. வெப்பத்தின் தாக்கத்தைச் சமாளிக்க, அவசரகால நடவடிக்கைகள், அதன் அபாயங்களைப் புரிந்து தகவமைத்துக் கொள்ளும் வகையில் அடுத்த தலைமுறையைத் தயார்படுத்துவதும் அவசியம். நமது கலாசாரக் கலைவடிவங்களின் வாயிலாகவே பள்ளிகளில் காலநிலைக் குறித்த கல்வியைத் தொடங்க முடியும் என்பதை இதுபோன்ற முன்னெடுப்புகள் உணர்த்துகின்றன.
கட்டைக்கூத்து கலைஞர் திலகவதி பழனி
ஒரு கலை வடிவம் புதிய தகவல்களை அளிப்பது, அறிவூட்டுவது, மகிழ்விப்பது, பார்வையாளர்களைச் சிந்திக்க வைப்பது ஆகியவற்றுக்காகவே உள்ளது. தங்கள் சொந்தக் கலைமரபின் வழியே ஒரு விஷயத்தைக் காணும்போது, குழந்தைகள் அதைப் புரிந்துகொண்டு, தீர்வைக் கோரக்கூடியவர்களாகத் தயாராகிறார்கள்.
வேதவள்ளி வித்யாலயா பள்ளி முதல்வர் என்.பானு
ஒவ்வொரு கோடையிலும் கடும் வெப்பத்தால் ஏற்படும் சோர்வையும் பதற்றத்தையும் ஆசிரியர்கள் காண்கின்றனர். காலநிலை மாற்றம் பற்றிய பாடத்தை வெறும் புத்தகங்களில் கற்பிக்க முடியாது. நாட்டார் கலைவடிவங்கள் மூலம் தங்கள் தாய்மொழியில் அறியும்போது, மாணவர்கள் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதைத் தங்கள் பொறுப்பாக உணர்கின்றனர்.
அசார் நிறுவனத்தைச் சேர்ந்த பல்லவி ஃபடக்
கட்டைக்கூத்துச் சுற்றுப்பயணம், வெறும் கலை நிகழ்ச்சியாக மட்டுமன்றி, எளிய மக்களுக்கும் உள்ளூர் மொழியில் காலநிலை குறித்த விழிப்புணர்வைக் கொண்டு செல்லும் ஒரு மகத்தான கல்விப் பயணமாக அமைந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.