முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கலிங்கத்தின் கலங்கரை விளக்கம் தமிழகம்

கருங்கடலை வேலியாகக் கொண்ட கலிங்க நன்னாடு என்று கலிங்கத்துப் பரணியில் போற்றப்பட்ட அந்நாடுதான் இன்றைக்கு ஒடிஸா மாநிலமாக உருமாறியிருக்கிறது.

Updated On : 15 பிப்ரவரி 2026, 4:02 am IST
பகிர்:

கருங்கடலை வேலியாகக் கொண்ட கலிங்க நன்னாடு என்று கலிங்கத்துப் பரணியில் போற்றப்பட்ட அந்நாடுதான் இன்றைக்கு ஒடிஸா மாநிலமாக உருமாறியிருக்கிறது.

தமிழக மன்னன் முதலாம் குலோத்துங்க சோழன் அந்நாட்டின் மீது படையெடுத்து வாகை சூடினான் என்பது வரலாறு. அப்படியானால், தமிழகம் - கலிங்கம் இடையே பகை மட்டும்தான் சூழ்ந்திருக்கும் என நினைத்தால் அது தவறு.

அந்தக் காலகட்டத்தில் இரு பகுதிகளுக்கும் நடுவே கலாசாரப் பிணைப்பும், பொருளாதார ஒருங்கிணைப்பும் செழித்தோங்கி வளர்ந்திருக்கிறது.

Advertisement

Advertisement

கலிங்கத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பருத்தி துணிகளுக்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு இருந்திருக்கிறது. அதேபோன்று இங்கிருந்து பல வகையான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

சரித்திரத்தின் நீட்சியாக சமகாலத்திலும் ஒடிஸாவின் வளர்ச்சிக்கு தமிழகம் பக்கபலமாக உள்ளது என்பதுதான் குறிப்பிட வேண்டிய செய்தி.

மாநிலத்தின் தலைநகர் புவனேசுவரத்தில் ரூ.420 கோடி செலவில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்த ரயில் முனையத்தை மத்திய, மாநில அரசுகள் அமைத்து வருகின்றன. இதுதொடர்பாக கிழக்கு மண்டல ரயில்வே பொது மேலாளர் பரமேஸ்வர் ஃபங்க்வால் கூறுகையில், நாள்தோறும் 1.5 லட்சம் பேர் அதனைப் பயன்படுத்தும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள்தான் அதன் முக்கியப் பொறுப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, கடந்த ஆண்டு இந்தியாவிலேயே அதிக சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்த பாரதீப் துறைமுகத்தில் பல்வேறு நவீன வளர்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதில் முக்கியமானது அல்ட்ரா மாடர்ன் சிக்னல் ஸ்டேஷன் எனப்படும் அதி நவீன கட்டுப்பாட்டு நிலையம். அதில் தமிழகத்தின் பங்களிப்பு நிகரற்றது. ஏறத்தாழ 45 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் அந்தக் கட்டமைப்பு குறித்து பாரதீப் துறைமுகத் தலைவர் பி.எல்.ஹரநாத் கூறியதாவது:

'இந்தக் கட்டுப்பாட்டு அமைப்பானது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது. அதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியது சென்னை ஐஐடி கல்வி நிறுவனம்தான்.

'சாலிட் ஸ்டேட் ரேடார்' எனப்படும் தகவல் தொடர்பு நுட்பம் அதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் சிறு உயிரினங்கள் சென்றால் கூட அதனைக் கண்டறிய முடியும்.

அதேபோன்று, சரக்கு கப்பல்களில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டால் அதனை துல்லியமாகக் கண்காணிக்க இயலும். அதுமட்டுமல்லாது, வானிலை மாற்றங்களை முன்கூட்டியே மிகச் சரியாக கணிக்கலாம்.

இதைத் தவிர கப்பல்களின் வழித்தடத்தைக் கண்காணிக்கவும், மெய் நிகர் முறையில் துறைமுகத்துக்கு வழிகாட்டவும் அந்தக் கட்டமைப்பு உதவும். அடுத்த சில மாதங்களில் அந்தக் கட்டுப்பாட்டு அமைப்பு பயன்பாட்டுக்கு வர உள்ளது'' என்றார் அவர்.

சென்னை, ஒடிஸாவிலிருந்து ரஷியாவுக்கு கப்பல் போக்குவரத்து மேற்கொள்ள வேண்டுமானால் ஏறத்தாழ 40 நாள்கள் பயணம் செய்ய வேண்டும். அதனைக் குறைக்கும் வகையில் தற்போது புதிய வழித்தடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் பயணத் தொலைவு 40 சதவீதம் குறைகிறது. அதனை சென்னை பயன்படுத்தி வருவதாகவும், அதைப் பின்பற்றி ஒடிஸாவும் அந்த வழித்தடத்தை உபயோகிக்க உள்ளதாகவும் பி.எல்.ஹரநாத் கூறியுள்ளார்.

இவ்வாறாக இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பானது இந்தியாவைக் கடந்து தற்போது ரஷியா வரை நீண்டிருக்கிறது.

தமிழகத்தின் மின்தேவைக்காக கடந்த ஆண்டு மட்டும் பாரதீப் துறைமுகத்திலிருந்து 27.80 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரி அனுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்க நிகழ்வு.

இது ஒருபுறமிருக்க, மத்திய நன்னீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி மையம் ஒடிஸாவின் உத்தரா பகுதியில் இயங்கி வருகிறது. தமிழகத்தின் பிரதான மீன் உணவான கட்லா குறித்த ஆராய்ச்சி இங்குதான் நடைபெறுகிறது. அதிக லாபம் ஈட்டும் வகையில் அதனை வளர்க்கத் தேவையான அனைத்து வசதிகளையும், தொழில்நுட்பங்களையும், தமிழக மீன் வளத் துறைக்கு அவர்கள் வழங்குகின்றனர்.

தாமிரவருணி ஆற்றின் அடையாள மீன்களில் ஒன்றான 'தாமிரவருணி பார்ப்' என்ற வகை அலங்கார மீன் அழிவுக்குள்ளாகி வருகிறது. அதனை பாதுகாத்து மீட்டெடுப்பதும் ஒடிஸா மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம்தான்.

ஒடிஸாவின் கலிங்கா நகரில் செயல்படும் டாடா ஸ்டீல், ஜிண்டால் ஸ்டீல் போன்ற பெரு நிறுவனங்களிலும் தமிழர்களின் பங்களிப்பு அளப்பரிய வகையில் உள்ளன.

மனித வளம் மட்டுமல்ல... புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலிலும் காஞ்சிபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட நான்கு கர விநாயகர்தான் பல நூறு ஆண்டுகளாக நமக்கு அருள்பாலிக்கிறார். கலிங்கத்துக்கும், தமிழகத்துக்கும் இடையே படர்ந்திருப்பது தொப்புள் கொடி உறவு என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்...

தமிழ்நாட்டுடன் நல்லுறவு

ஒடிஸா ஆளுநர் கம்பம்பதி ஹரிபாபு கூறியதாவது:

'கனிம வளமிக்க ஒடிஸா மாநிலம், நிலைத்த பொருளாதார திறனைக் கொண்டுள்ளது. ஏறத்தாழ ரூ.50 ஆயிரம் கோடி நிதியை கனிம வள ஏலம் மூலமாக இந்த மாநிலம் ஈட்டுகிறது. மாவட்டங்

களுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. தமிழ்நாட்டுக்குத் தேவையான பல கனிமங்களை ஒடிஸா அனுப்புகிறது.'' என்கிறார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.