வெப்பத்தைச் சமாளிக்க...
சுட்டெரிக்கும் கோடை வெயில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கவில்லை. நாம்தான் வெயிலைவிட்டு விலகி நிற்கிறோம்.
சுட்டெரிக்கும் கோடை வெயில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கவில்லை. நாம்தான் வெயிலைவிட்டு விலகி நிற்கிறோம். ஓலை வீடுகள், ஓட்டு வீடுகள் மாறி, காங்கிரீட் வீடுகளாகிவிட்டன.
இயற்கையான முறையில் இருந்த வசதிகளை மறந்து, வாகனங்களிலும், அலுவலகங்களிலும், வீடுகளிலும் குளிர்சாதன வசதிகளைப் புகுத்திவிட்டோம். இதனால் இப்போது வெயில் என்றால் எதிரியாகிவிட்டது. அது சரி! இப்போது சுட்டெரிக்கும் கோடை வெயிலைச் சமாளிப்பது எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவர்களிடம் பேசினோம்.
ஆர்.மேனகா, சித்த மருத்துவர்
Advertisement
கோடை என்றாலே விடுமுறையும் குதூகலமும் போய் தற்போது கோடை வெப்பமும், அதனால் ஏற்படும் வெப்பு நோய்களின் அச்சுறுத்தலுமே அதிகமாகிறது. கோடையில் அதிகரித்த வெப்பத்தை எதிர்கொள்ள எளிய வழிமுறைகள் சிலவற்றைக் கடைப்பிடித்தாலே போதும்.
வேர்க்குரு, வேனற்கட்டி, நிணநீர் கோள வீக்கம், வயிற்றுப்புண், உடலில் நீர்ச்சத்து குறைபாடுகள், உடல்சோர்வு, கெண்டைக்கால் சதை வலி, மலச்சிக்கல், செரிமானக் கோளாறுகள், வயிற்றுப்போக்கு, ஆசன வெடிப்புகள், மூல நோய்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் குறைதல், அம்மை நோய்கள், அம்மைக் கொப்புளங்கள் போன்றவை ஏற்படும். முக்கியமாக, கண் நோய்கள், கண்ணில் கட்டி, சிவந்து போதல், கண் எரிச்சல் உள்ளிட்டவை ஏற்படுகின்றன.
நீர்ச்சத்து குறைவதால் சிறுநீர்த் தொற்றுகள், சிறுநீர் எரிச்சல், சிறுநீரகத்தில் கற்கள் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. உடலில் நோய் எதிர்ப்பாற்றலைப் பெருக்கவும், வெப்பத்தைத் தணிக்கவும் நீர், மோர், இளநீர், பானகம், பழச்சாறு அருந்துவதால் நீர்த்துவம் பெருகும்.
'வாரத்தில் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால் சூழல் (வெப்பம்) தணியும்' என்று சித்தர் பிணி அணுகாவிதி. அனைவருக்கும் நல்லெண்ணெய் குளியல் சிறந்தது. ரத்த அழுத்த நோயாளிகள் சீரக தைலமும், பித்த தேகிகள் பொன்னாங்கன்னி தைலம், கரிசாலை தைலம், அருகின் தைலங்களைக் கொண்டும், வாத, கப தேகிகள் நொச்சித் தைலம், செம்முள்ளி தைலங்களைக் கொண்டும், மனோவிகாரம் உள்ளவர்கள் சம்பீர தைலமும் கொண்டு குளியலுக்குப் பயன்படுத்தலாம்.
நீரில் வெட்டிவேர், தேற்றான் கொட்டையை ஊற வைத்து அருந்தலாம்.
சீரக குடிநீர், மல்லி தேநீர் பயன்படுத்தலாம். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் நன்னாரி குடிநீர், பிறர் நன்னாரி மணப்பாகு, மாதுளை மணப்பாகு, துறிஞ்சி மணப்பாகு ஆகியவற்றை நீருடன் கலந்து அருந்தலாம்.
வெகு நேரம் கண் விழிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆறு முதல் ஏழு மணி நேர தூக்கம் கண்டிப்பாக இருந்தால், உடலில் பித்தம் சமப்படும். இரவில் தூங்கும் முன் உள்ளங்கால்களுக்கு நெய் தடவி , தவிட்டினை ஒற்றி வைத்து உறங்குவதால் கண் நோய்களைத் தடுக்கலாம். பார்வையும் மேம்படும்.
ரசாயனம் கலந்த உணவுகள், மாமிச உணவுகள், துரித உணவுகள், மசாலா சேர்ந்த உணவுகளைத் தவிர்க்கவும். பாரம்பரிய உணவுகள், பழைய நீராகாரம், மண்பானை குடிநீர் ஆகியன சிறந்தவையாகும். தேவையில்லாமல் வெயிலில் சுற்றுவதைத் தவிர்க்கவும். காலணி, தலைக்கவசம் அணிந்தே வெளியில் செல்லவும். மதிய உறக்கமும், போதிய ஓய்வும் தேவை. பிரச்னைகள் ஏற்பட்டால், சுய மருத்துவததைத் தவிர்க்கவும். மருத்துவரை அணுகி நலம் பெறவும்.
கே.எல்.சிவகுமார், பாரம்பரிய சித்த மருத்துவர்
நீர்ச்சத்து குறைவதாலும், கடும் வெயிலைச் சமாளிக்க முடியாமலும் 'ஹீட் ஸ்ட்ரோக்' பலருக்கு வருகிறது. அதிக வெயிலின்போது, ஈரம் சேர்வதே 'ஹீட்ஸ்ட்ரோக்' வருவதற்குக் காரணம்.
வெயிலில் அதிக அளவு வியர்வை வெளியேறினால், சர்க்கரை அளவு குறையும். அதிக வியர்வை வெளியேறினால், பெண்களுக்கு தைராய்டு பிரச்னைகள் ஏற்படும். நீர்ச் சத்து இழப்பால், வாய், முகம், கண் வறண்டு போகும். சிறுநீர் வெளிர்மஞ்சளில் வெளியேறுவது இதன் அறிகுறியாகும். தலைச்சுற்றல், லேசான மயக்கம் உள்ளிட்டவை இருந்தால், அதிக அளவு நீர் குடிக்க வேண்டும்.
தர்பூசணி, சாத்துக்குடி உள்ளிட்ட நீர்ச் சார்ந்த பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடுவது நல்லது. இளநீர், மோர், குளிர்பானங்களையும் அருந்தலாம். அத்திப்பழம் சாப்பிடுவது நல்லது.
பித்த வெடிப்பு, கால் எரிச்சல், முழங்காலில் பசை இழப்பு போன்றவை ஏற்பட்டால், மிதமான சூட்டில் நல்லெண்ணெய்யை பாதம், முழங்கால் வரை தேய்க்க வேண்டும். வாரத்தில் ஒன்றிரண்டு முறையாவது மண் குளியல் அல்லது எண்ணெய்க் குளியல் மேற்கொள்வது நல்லது.
படங்கள் : சு. ஆனந்த்