ஆன்லைனில் வீட்டுப் பலகாரம்
பண்டிகைகள் என்றாலே நினைவுக்கு வருவது விதவிதமான, நினைத்தாலே நாவில் எச்சில் ஊற வைக்கும் இனிப்புகளும், கார வகைகளும்தான்.

பண்டிகைகள் என்றாலே நினைவுக்கு வருவது விதவிதமான, நினைத்தாலே நாவில் எச்சில் ஊற வைக்கும் இனிப்புகளும், கார வகைகளும்தான். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஹோட்டல்களிலும் பேக்கரிகளிலும் இனிப்புகள் வாங்குவது என்பது மிகவும் அரிதான நிகழ்வாகவே இருந்தது. வீடுகளில் செய்யும் பலகாரங்கள் மட்டுமே. சில நாள்களுக்குத்தான் வைத்திருப்பார்கள். ஆனால் இப்போது ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும். அடுத்த சில மணித்துளிகளில் வீடு தேடித் தேவையான, பிடித்த இனிப்புகளும் காரங்களும் வந்துவிடுகின்றன.
காலை 6 மணிக்கு டீ குடிப்பதில் தொடங்கி, இரவு உணவு வரை அனைத்தும் ஆன்லைனில் இப்போது எளிதாகக் கிடைத்து விடுகின்றன. நம் வீட்டுப் படியைத் தாண்டத் தேவையில்லாத நிலை இப்போது.
பண்டிகைகளின்போது, நமது பாரம்பரிய இனிப்பு வகைகளான ரவா லட்டு, எள் உருண்டை, வேர்க்கடலை உருண்டை, தேங்காய் பர்பி, லட்டு. மைசூர்பா, முந்திரி கேக், கோதுமை அல்வா, முந்திரி அல்வா, பூசணி அல்வா
Advertisement
Advertisement
ஆகியவையும்; கை முறுக்கு, அச்சு முறுக்கு என முறுக்கில் பல வகைகளும்; தேன் குழல், மிக்சரில் பல வகைகள்; ராகி வடை, ராகி பக்கோடா என கார வகைகளில் பலவும் கிடைக்கின்றன.
இதில் பெரும்பாலான இல்லத்தரசிகள் மிகுந்த சுவையுடன் பலகாரங்களைத் தயார் செய்து ஆன்லைனில் விற்பனை செய்து பொருளும் ஈட்டி வருகின்றனர். இப்போது பலரும் சொமாட்டோ, ஸ்விகி எனப் பல தளங்களிலும் தங்கள் பொருள்களை விற்பனை செய்கின்றனர்.
அவிநாசி அருகே உள்ள 15 வேலம்பாளையத்தில் ஆன்லைனில் பலகாரங்கள் மட்டுமில்லாது, வெண்ணெய், நெய் ஆகியவற்றையும் விற்பனை செய்து வரும் எஸ்.சியாமளா கூறியது:
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வகையான இனிப்புகளையும் கார வகைகளையும் விற்பனை செய்து வருகிறேன். தரமான பொருள்களைக் கொண்டு தயார் செய்கிறேன். தரத்தில் எப்போதும் சமரசம் செய்வது கிடையாது. ஆன்லைன் ஆர்டர் போக வீட்டுக்கும் வந்து தேவையான இனிப்பு,கார வகைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். பண்டிகைகளின் போது தேவையான ஆர்டர்களை முன்கூட்டியே தருகின்றனர். அதற்கேற்றாற்போல இனிப்பு, கார வகைகள் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யப்படுகின்றன.
திருப்பூர் கருவம்பாளையத்தில் இனிப்பு, கார வகைகள் மட்டுமின்றி உணவு வகைகளையும் தயாரித்து விற்பனை செய்யும் ஏ.நாகேஸ்வரி கூறியது:
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் விற்பனையைத் தொடங்கினேன். இப்போது தினமும் காலை டிபன், மதியம் சாப்பாடு, இரவு உணவு என 3 நேரத்துக்கும் தேவையான உணவுகளை வீட்டிலிருந்து சமைத்துக் கொடுக்கிறேன். இதுதவிர லட்டு, மைசூர்பா, முந்திரி கேக் ஆகியவற்றில் பல்வேறு வகைகளும், வட இந்திய இனிப்பு மற்றும் கார வகைகளையும் தேவைக்கேற்ப தயாரித்துக் கொடுக்கிறேன். கடைகளை விட விலை குறைவு என்பதால் பொதுமக்கள் நன்கு ஆதரவு தருகின்றனர். உணவு வகைகள் மற்றும் பலகாரங்களை வீடுகளுக்கே சப்ளை செய்கிறோம். விலை குறைத்துக் கொடுப்பதால் தரத்தில் சமரசம் செய்து கொள்வதில்லை.
-ஆர்.வேல்முருகன்