FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பள்ளியில் மாற்றம்... படிப்பில் முன்னேற்றம்!

பொள்ளாச்சிக்கு அருகேயுள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியை உள்ளூர் மக்கள் தவிர்த்துவிட்டு, அருகிலுள்ள பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்து வந்தனர்.

19 செப்டம்பர் 2026, 8:14 pm IST
பகிர்:

பொள்ளாச்சிக்கு அருகேயுள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியை உள்ளூர் மக்கள் தவிர்த்துவிட்டு, அருகிலுள்ள பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்து வந்தனர். இந்நிலையில், பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகளை நடுதல், நூலகம் அமைத்தல், பள்ளித் தோற்றத்தை மாற்றி அமைத்தல் போன்ற முயற்சிகளை தலைமை ஆசிரியர் பாலமுருகன் மேற்கொண்டார்.

கரோனா காலத்துக்குப் பின்னர், பள்ளி மீண்டும் திறக்கப்பட்டபோது, ரயில் பெட்டியைப் போலத் தோற்றமளிக்கும் வகையில் வர்ணம் பூசப்பட்டிருந்தன. சில ஆண்டுகளிலேயே மாணவர் சேர்க்கை மூன்று மடங்குக்கும் மேலாக அதிகரித்தது.

பள்ளியும் மாற்றம் அடைந்து, மாணவர் சேர்க்கையும் அதிகரித்தது எப்படி என்று பாலமுருகன் கூறியது:

Advertisement

Advertisement

தமிழ் ஆசிரியராக இந்தப் பள்ளியில் 2013-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். கரோனா காலத்துக்குப் பின்னர் மீண்டும் பள்ளிக்குத் திரும்பும் குழந்தைகளை உற்சாகத்துடன் வரவேற்க விரும்பினோம். இதற்காக துறைரீதியான அனுமதி பெற்று, சாதாரண வகுப்பறைகளுக்கு ரயில் பெட்டிகளைப் போன்ற தோற்றம் தரும்படி வர்ணப் பூச்சு செய்யப்பட்டது.

இதற்கு ரூ. 50 ஆயிரம் செலவானது. ரூ. 15 ஆயிரத்தை பெற்றோர் வழங்க, மீதமுள்ள செலவை நானே ஏற்றேன். அப்போது பள்ளியில் 70 மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர். பள்ளியின் உள்கட்டமைப்பு வசதியும் மிகவும் பின்தங்கியநிலையில் இருந்தது.

பள்ளி வசதிகள் மேம்பாடு

பின்னர், பள்ளிக் கல்வித் துறையும் ஸ்மார்ட்' வகுப்பறையை அமைத்தது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை வசதிகளும் மேம்படுத்தப்பட்டன. நூலகம் தொடங்கப்பட்டது. இந்த மாற்றங்கள் அடுத்தடுத்து நடந்ததால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இந்தப் பள்ளியில் சேர்க்க முன்வந்தனர். இதனால் மாணவர் சேர்க்கை மூன்று மடங்காக உயர்ந்தது. பள்ளி வசதிகளை மேம்படுத்தும் முயற்சியில், மற்ற ஆசிரியர்களும் இணைந்தனர்.

ஒன்றரை ஏக்கர் மைதானத்தில் ஒரே வாரத்தில் நாங்கள் 110 மரக்கன்றுகளை நட்டோம். இன்று அந்த மரங்கள் வளர்ந்து நிழல் தருகின்றன. மாணவர்களை உள்ளூர் தாவரங்களின் விதைகளைச் சேகரித்தல், விதைப்பந்துகளைத் தயாரித்தல், பல்லுயிர்ப் பெருக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க வைத்தோம். காலப்போக்கில் காடு வளர்ப்பு முயற்சிகளுக்காக மாணவர்கள் 45 ஆயிரம் விதைப் பந்துகளைத் தயாரித்து, அவர்களே விதைத்துள்ளனர். பள்ளி வளாகத்திலும், சுற்றுப்புறப் பகுதிகளிலும் 960-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் புதுமை

பசுமையான, தூய்மையான, நெகிழி இல்லாத சூழலைப் பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டு மாணவர்களும், பள்ளி நிர்வாகமும் செயல்படுகிறது. பிறந்த நாள் கொண்டாட்டங்களின்போது, நெகிழி உறையிடப்பட்ட சாக்லேட்டுகளைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக வெல்லம் அல்லது வீட்டில் செய்த இனிப்புகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

எழுத்தாளர்களாக மாணவர்கள்:

மாணவ, மாணவியரை புத்தகங்களை வாசிக்கவும், அவற்றை விவாதிக்கவும், படைப்புகளை எழுதவும் ஊக்குவித்து வருகிறோம். பள்ளி நூலகத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. வாசிப்புக் குழுக்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை அணுகி, நூற்றுக்கணக்கான நூல்களை நன்கொடையாகப் பெற்றோம். எனது பங்களிப்பாக சுமார் ரூ.24 ஆயிரம் செலவில் புத்தகங்களை வழங்கியுள்ளேன். மாநில அரசும் நூல்களை வழங்கி வருகிறது.

மாணவர்கள் எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் பதிப்பகங்களால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளன.

கலைப் பயிற்சி

மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், கும்மி, பறை இசை போன்ற பாரம்பரியக் கலை வடிவங்களில் மாணவர்கள் பயிற்சியைப் பெறுகின்றனர். வழக்கமான வகுப்புகள் முடிந்த பிறகு, மாணவர்கள் இரண்டு மணி நேரம் தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில் பயிற்சி பெறுகின்றனர்.

2015-ஆம் ஆண்டு முதல் இப்பள்ளி 10-ஆம் வகுப்புத் தேர்வில் 100% தேர்ச்சி விகிதத்தைத் தக்கவைத்துள்ளது. ஆசிரியரும் ஒரு மாணவர்தான். வயதானாலும் படிக்கலாம். படிக்க வேண்டும். கல்வி ஒருநாள் உயர்த்திவிடும் என்பதை மாணவர்களுக்குப் புரிய வைக்க நான் முனைவர் பட்டத்துக்கான தேர்வுகளை எழுதி முடித்துள்ளேன்'' என்கிறார் பாலமுருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments