FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்மணி

மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!

"கல்லாடம்' என்ற நூலை இயற்றிய கல்லாடரின் காலம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு என்றும், 13-ஆம் நூற்றாண்டு என்றும், 16-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட பகுதி என்றும், கல்லாடர் என்ற பெயரில் இருவர் இருந்துள்ளனர் என்ற

Updated On : 20 செப்டம்பர் 2012, 3:20 pm IST
பகிர்:

"கல்லாடம்' என்ற நூலை இயற்றிய கல்லாடரின் காலம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு என்றும், 13-ஆம் நூற்றாண்டு என்றும், 16-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட பகுதி என்றும், கல்லாடர் என்ற பெயரில் இருவர் இருந்துள்ளனர் என்றும் தமிழறிஞர்களால் கூறப்படுகிறது. கல்லாடரின் காலம் எது? கல்லாடர் என்ற பெயரில் இருவர் இருந்தது உண்மையா?

கல்லாடம் கி.பி.11-ஆம் நூற்றாண்டு!



கல்லாடர் இயற்றிய கல்லாடம், சொல்லால் சங்க இலக்கியம் போன்றிருந்தாலும், பொருளால் புராணக் கருத்துகள் நிறைந்த இடைக்கால இலக்கியமாக உள்ளது.

÷கல்லாடம் முதற்செய்யுள், "அமுதமும் தருவும்...' என மங்கல மொழியுடன் தொடங்கினாலும், பாயிரச் செய்யுள்கள் இரண்டு உள்ளன. இவ்விரண்டினுள் முதற் செய்யுள், வேழமுகத்தான் (விநாயகர்) வணக்கமாக 40 அடிகள் கொண்ட ஆசிரியப்பா உள்ளது. விநாயகர் வணக்கம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தோன்றிய இலக்கியங்களில்தான் இடம்பெற்றது. எனவே, கல்லாடம் இயற்றிய கல்லாடர் சங்க காலத்தவர் அல்லர். கி.பி. 7,8 நூற்றாண்டுக்குப் பின் வாழ்ந்தவர் என்பது தெளிவு.

÷இலக்கண உரையாசிரியர்களுள் ஒருவராகிய கல்லாடர், நச்சினார்க்கினியர் - வேற்றுமையியலில், ""பெயர்நிலைக் கிளவி...'' எனத் தொடங்கும் நூற்பாவிற்கு எழுதிய உரையை அப்படியே எடுத்தாள்வதால், இவர் நச்சினார்க்கினியருக்குப் பிற்பட்டவர் என்று அறியலாம்.

÷தி.வை.சதாசிவ பண்டாரத்தார் எழுதிய "தமிழ் இலக்கிய வரலாறு' (கி.பி. 13,14,15-ஆம் நூற்றாண்டுகள்) தான், "கல்லாடம்' பாடிய கல்லாடர் பற்றியும் அவருடைய காலம் பற்றியும் ஓரளவு அறிய உதவுகிறது. பரஞ்சோதி முனிவர் (16-ஆம் நூற்றாண்டு) இயற்றிய திருவிளையாடல் புராணத்துக்கு முன் தோன்றியது பெரும்பெற்றப்புலியூர் நம்பி இயற்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம்.

÷பெரும்பெற்றப்புலியூர் நம்பியின் காலம் கி.பி. 13-ஆம் நாற்றாண்டு என்று சதாசிவபண்டாரத்தார் குறிப்பிட்டுள்ளார். இதனால், 13-ஆம் நூற்றாண்டில் தோன்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணத்துக்கு முன்பே தோன்றியது கல்லாடம் என்பது தெளிவு. கி.பி. 1228-இல் இத்திருவிளையாடல் புராணம் பாடி, பாண்டியனிடம் இறையிலி நிலங்களும், பல்லக்கு முதலான வரிசைகளும் பெற்றவர் பெரும்பெற்றப்புலியூர் நம்பி.

÷கல்லாடத்தில், நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது, மதுரை ஆலவாய் அண்ணல் ஆனது முதலிய பல திருவிளையாடல்கள் வந்துள்ளன. பெரும்பெற்றப்புலியூர் நம்பியின் திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணத்துக்கு முன்னோடியாகக் கல்லாடத்தில் வரும் சோமசுந்தரக்கடவுள் திருவிளையாடல்கள் பல உள்ளதால், இதன் காலம் 11-ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். புராணக் கலப்புடைய இந்நூல் சங்க இலக்கிய நடையில் உள்ளதால், "கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே' என்ற பழமொழி வந்துள்ளது. தொல்காப்பியர் எழுதியது "தொல்காப்பியம்' எனப் பெயர் பெற்றாற்போல், கல்லாடர் இயற்றியது "கல்லாடம்' எனப்பட்டது.



இந்தமாத விவாதத்துக்குரிய கேள்வி!

""வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்'' என்று தொல்காப்பியர் தமிழகத்தின் நில எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். வடவேங்கடம் என்பது இன்றைய திருப்பதிதானா? தென்குமரி என்பது இன்றைய குமரிமுனையா அல்லது கடல்கோளால் அழிந்துபோன குமரிக்கண்டமா?

-இரா.சக்கரபாணி, மதுரை.










 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments