மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!: "சிலம்பு கழீஇ'
கண்ணகி தனது காற்சிலம்பில் உள்ளது மாணிக்கப் பரல்கள் என்றும் அதையே பாண்டியன் சபையில் ஆதாரமாகவும் காட்டுகிறாள். அரசியின் சிலம்பில் முத்துப் பரல்கள்தான் இருக்கிறது மாணிக்கப் பரல்கள் இருக்காது என்று, எந்த
கண்ணகி தனது காற்சிலம்பில் உள்ளது மாணிக்கப் பரல்கள் என்றும் அதையே பாண்டியன் சபையில் ஆதாரமாகவும் காட்டுகிறாள். அரசியின் சிலம்பில் முத்துப் பரல்கள்தான் இருக்கிறது மாணிக்கப் பரல்கள் இருக்காது என்று, எந்த நம்பிக்கையில் கண்ணகி வாதாடினாள்? அதற்கு என்னதான் ஆதாரம்?
ற்றிறம் படராக் கொற்கை வேந்தால், தன் கணவன் கொலையுண்டதை அறிந்த கண்ணகி, வாயில் காட்டக் கோவில் புகுந்து, தன் கணவன் கள்வன் அல்லன் எனக் கூறினாள். அத்துடன் அமையாது, ""என்காற் சிலம்பு மணியுடை யரியே'' என்றாள். அது கேட்ட பாண்டியன், ""யாமுடைச் சிலம்பு முத்துடை யரியே'' எனக் கூறினான்.
கோப்பெருந்தேவியின் சிலம்பின் பரல்கள் மாணிக்கமாக இருக்காது எனக் கண்ணகி கருதியமைக்குப் பின்வரும் காரணங்களைச் சுட்டலாம்.
Advertisement
Advertisement
பண்டை நாளைத் தமிழ் வேந்தர்கள், திருமணத்திற்குப் பெண் கொள்ளும்பொழுது, தன்னாட்சிப் பரப்பையும், புகழையும் பரப்பும் வண்ணம், பிற நாட்டு மன்னர்களிடமிருந்தோ, தகுதியமைந்த குறுநிலமன்னர்கள், வேளிர்களிடமிருந்தோ மகட்கொடை பெறுதல் மரபு. பல நேரங்களில் போர் செய்து வெற்றிகொண்டும், மணப்பெண் கொள்ளுவர். இங்ஙனம் மணவிழா செய்யும் காலத்தில், மணமகள் தன் தாய் வீட்டிலிருந்து அணிந்து வந்த சிலம்புகளை நீக்கிவிட்டு, தங்கள் வீட்டுப் (குடிப்பெருமை கூறும்) புதிய சிலம்புகளை அணிவிப்பர். இந்நிகழ்ச்சியைச் சங்க இலக்கியங்கள் ""சிலம்பு கழீஇ'' விழா எனக் கூறுகின்றன.
அங்ஙனம் சிலம்பு அணிவிப்போர், தம் குடிப்பெருமைக் கேற்ப உயர்ந்த சிலம்புகளை அணிவிப்பர். கொற்கை வேந்தனும், சிறந்த கல்வியாளனுமாகிய பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தன் பாண்டிய நாட்டுப் பெருமையும் மரபும் கெடாதவாறு, பாண்டி நாட்டுக்கே சிறப்பினை நல்கும் கொற்கை முத்துகளை உள்ளிடு பரல்களாகக் கொண்ட சிலம்புகளையே, கோப்பெருந்தேவிக்கு மணவிழாவில் அணிவித்திருப்பான். முத்தினும் மேலான, விலையுயர்ந்த வைரம், மாணிக்கம் போன்ற கற்கள் கிடைப்பினும் தன்குடிப் பெருமையையும், நாட்டுச் சிறப்பினையும் விடாது போற்றுதலே மன்னர்தம் மாண்பு.
இத்தகைய பண்டை மரபுகளைப் பேரறிவுமிக்க இளையோளாகிய-சிறுமுதுக்குறைவி கண்ணகி நன்கு அறிந்திருப்பது இயல்பே. மேலும், மாநாய்கன் குலக் கொம்பராகவும், பெருநிலமுழுதாளும் பெருமகன் தலைவைத்த உயர்ந்தோங்கு செல்வத்தனாகிய மாசாத்துவான் மருமகளுமாகிய கண்ணகி, அரச மரபுகளை அறிந்திருப்பது புதுமையுமன்று; வியப்புமன்று. அதனால், கோப்பெருந்தேவியின் காற் சிலம்பின் பரல்கள் மாணிக்கம் இல்லை எனத் துணிந்தாள்.
மேலும், "சிலம்பு கழீஇய செல்வம்' (நற்றிணை: 279, 9-11), "ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழீஇய' (அகம்: 369-25), "சிறுவன் கண்ணி சிலம்பு கழீஇய' (அகம்: 385-17), "நும்மனைச் சிலம்பு கழீஇயயரினும்' (ஐங்குறு: 399-1) என சிலம்பு அணி விழாக்களைச் "சிலம்பு கழீஇ' விழாவெனச் சங்க இலக்கியங்கள் சுட்டும் சான்றுகளால் அறியலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.