மண்டபம் - வழக்கொழிந்து "மன்றம்' ஆனது!
மண்டுதல் - என்றால் கூடுவது, கூடுதல் என்று பொருள். அரசர், அவர் சார்ந்தோர், பொது மக்கள் ஆகியோர் கூடுவதற்கு ஏற்ற வகையில் கட்டப்பட்டது "மண்டபம்'. அது திருவோலக்க மண்டபம், மணி மண்டபம், பட்டி மண்டபம், நூற்று
மண்டுதல் - என்றால் கூடுவது, கூடுதல் என்று பொருள். அரசர், அவர் சார்ந்தோர், பொது மக்கள் ஆகியோர் கூடுவதற்கு ஏற்ற வகையில் கட்டப்பட்டது "மண்டபம்'. அது திருவோலக்க மண்டபம், மணி மண்டபம், பட்டி மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் எனப் பலவகைப்படும்.
இவற்றுள் தூண்களின் கீழ், பட்டிகைக்கல் (பட்டியக்கல்) வைத்துக் கட்டப்பட்ட மண்டபம் "பட்டி மண்டபம்' ஆகும்.
சிலப்பதிகாரம் -இந்திரவிழவூரெடுத்த காதையில்,
Advertisement
Advertisement
""மகதநன் னாட்டு வாளவாய் வேந்தன்
பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும் (அடி:101-102)
என்று, போரில் வெற்றிபெற்ற கரிகாலனுக்கு மகதநாட்டு மன்னனின் "பட்டி மண்டபத்தை' அளித்த வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்றுதல் - என்றாலும் கூடுவது, கூடுதல் எனப் பொருள் உண்டு. அதாவது, மக்கள் கூடுகின்ற இடம் மன்று - மன்றம் ஆனது. "மன்றம்' என்பது, பொதுவிடம், மரத்தடி பொதுவிடம், வெளியிடம் சபை எனப் பொருள்படும். இதற்குச் சான்றுகள் சங்க இலக்கியங்களில் பல உள்ளன.
""மலர்தலை மன்றத்துப் பலரும் குழீஇ'' (பட்டினப்பாலை அடி: 69)
என்பதில் பொதுவிடத்தையும்,
""மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்'' (திருமுருகாற்றுப்படை அடி:226) என்பதில் ஊர்மக்கள் கூடும் மரத்தடி இடத்தையும், மன்றம் என்னும் சொல் குறிப்பிடுகிறது. "மன்றில் பழிப்பார்' (குறள்-820) இதில், சபையைக் குறிக்கிறது. எனவே, இத்தகைய சான்றுகளால் முற்காலத்தில் மண்டபம் என்பது கட்டப்பட்ட இடத்தையும், மன்றம் என்பது கட்டப்படாத பொதுவிடத்தையும் குறிப்பதை அறியலாம்.
மணிமேகலையில் (16:1) கூறியுள்ளதுபோல, பட்டி மண்டபத்தில் நிகழ்ந்த சொற்போர் (விவாதம்) நாளடைவில் இடப்பெயரை ஏற்றுச் "சொற்போரை'க் குறிக்கும் சொல்லாக வழங்கப்பட்டது.
பின்பு கல்வி, கலை, இலக்கியம் தொடர்பான சொற்போர்களுக்கும் "பட்டி மண்டபம்' என்ற சொல்லே தொடர்ந்தது. பலவகையான மண்டபங்கள் அமைத்துப் பலபெயரால் அழைக்கப்பட்ட போதும் "பட்டி மண்டபம்' என்றால் சொற்போரைக் குறிக்கும் சொல்லாகவே வழங்கப்பட்டது. இதைக் கம்பரின் பாடலால் (பால.நகர் படலம்: 62) அறியலாம்.
காலப்போக்கில் மண்டபங்களில் நடத்தப்பட்ட பட்டி மண்டப நிகழ்ச்சிகள், பல்வேறு பொதுவிடங்களில் அதாவது, மன்றங்களில் மேடை அமைத்தும், பந்தல் அமைத்தும் நடத்தப்பட்டன. பின்பு "பட்டி மண்டபம்' என்பது இடப்பெயரையே குறிப்பதாக மக்கள் கருதும் நிலை ஏற்பட்டது. சொற்போர் நிகழ்ச்சியைக் குறிக்க "பட்டி மன்றம்' என்பதே சரி எனக் கருதினர்.
இம்மன்றங்களின் சார்பாக நடத்தப்படும் சொற்போர் நிகழ்ச்சிகளைப் "பட்டி மன்றம்' என்றே அழைப்பது இன்று பெருவழக்காகிவிட்டது.
பட்டுதல் - தட்டுதல் - ஒருபொருளைக் குறிப்பன. தட்டிப் பேசுதல் போன்று பட்டிப் பேசுதலும் உண்டு. வெட்டிப் பேசுதல், ஒட்டிப் பேசுதல், தட்டிப் பேசுதல் போன்று பட்டிப் பேசுதலும் சரியானது! ÷""பட்டுதல் என்பது தட்டுதலைக் குறித்த ஒரு பண்டைய வினைச்சொல்'' என்பார் பாவாணர் (முதற்றாய் மொழி பக்-117). பட்டி என்பதற்கு வகைப்படுத்தல், அட்டவணைப்படுத்தல் என்னும் பொருளும் உண்டு.
பட்டி என்பதற்கு, எதிரணியில் பேசுபவரின் கருத்தைத் தட்டி (மறுத்து)ப் பேசுதலும், கருத்துகளை வகைப்படுத்தி - அட்டவணைப்படுத்தல் போன்று முறைப்படுத்திப் பேசுதலும் பொருள் எனக்கொண்டு, அதற்கு இடம் தரும் மன்றம் என்பதைச் சேர்த்துப் பார்த்தால் "பட்டி மன்றம்' என்பது சரியானது.
சிறந்த தமிழறிஞரான பெருஞ்சித்திரனாரும் ""பட்டி மன்றம் வைப்பதிலும் பாட்டரங்கம் கேட்பதிலும்'' (கனிச்சாறு, முதல் தொகுதி பாடல்: 15) எனப் பட்டி மன்றம் என்றே குறிப்பிட்டுள்ளார். ÷எனவே, "பட்டி மன்றம்' என்று வழங்குவது இன்றைய நிலையில் சரியானதே எனக்கொண்டால், அவ்வாறு வழங்குவதில் தவறில்லை!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.