வில்லிபுத்தூர் விளக்கின் விண்ணியல் ஞானம்
ஆதிகாலந் தொட்டே மனிதன் இயற்கையோடு இயைந்த வாழ்வை நடத்தினான்.
ஆதிகாலந் தொட்டே மனிதன் இயற்கையோடு இயைந்த வாழ்வை நடத்தினான். சங்க காலத் தமிழர் நிலம், நீர், தீ, வளி, விசும்பு ஆகிய இயற்கைத் தன்மையில் இறைத்தன்மையைக் கண்டு மகிழ்ந்தனர். சங்க நூலான பரிபாடலே இதற்குச் சான்று. இயற்கையைப் போற்றும் அறக்கோட்பாடாக சங்க காலத்தில் ஐந்திணைக் கோட்பாடு உருவானது. சங்ககால மக்கள் விண்ணியல் ஞானம் நிரம்பப் பெற்றவர்களாக விளங்கினர்.
டசெஞ்ஞாயிற்றின் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
Advertisement
பரிப்பு சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய ஆகாயமும் என்று இவை
சென்று அளந்து அறிந்தார் போல.. (புறம் 30)
டடசூரியனுடைய பாதையும் அதன் இயக்கமும், அந்த இயக்கத்தால் சூழப்பட்ட பார்வட்டமும், காற்று இயங்கும் திசையும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் (அந்தரத்தில்) தானே நிற்கும் ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை அங்கேயே சென்று பார்த்து அறிந்து கொண்டவர் போல'' என்று சங்ககால மக்களின் விண்ணியல் அறிவை வியக்கிறது இந்தச் சங்கப் பாடல்.
இத்தகைய ஞானம் உள்ள சமுதாயத்தில் அக்காலத்தில் மாதத் தொடக்கக் கணக்கீடு முழு நிலவு நாளில் தொடங்கியிருக்கலாம். புறநானூற்றில், தம் தந்தையைப் பறிகொடுத்து விட்டு, ஒரு மாதம் கழிந்து விட்டதே எனும் (கையறு நிலைத் துறை) பாடலில், பாரி மகளிர் மாதத் தொடக்கமாக முழுநிலவை இணைத்துப் பாடுவது இக்கருத்துக்கு அரண் சேர்க்கிறது.
தம் தந்தையை இழந்து பரிதவிக்கும் பாரி மகளிர் இப்பாடலில்; தம் துன்பத்தை வெளிப்படுத்துகின்றனர். ஒரு முழுமதி நாளில் (பெüர்ணமி) பாரி மகளிர், கடந்த பெüர்ணமி நாளை நினைத்துப் பார்க்கின்றனர். முப்பது நாள்களுக்கு முன்பு பறம்பு மலையில் பாரி ஆட்சி புரிந்து வந்தான். பாரியை முடியுடை மூவேந்தர்களும் ஒன்று சேர்ந்து வஞ்சனையால் கொன்று விட்டனர். கபிலர், பாரி மகளிரை பாதுகாப்பாக வேற்று நாட்டுக்கு அழைத்துச் சென்றார். ஒரு மாதம் கழிந்தது. வேற்று நாட்டில் இருந்த பாரி மகளிர் அடுத்த முழுமதி நாளில் தம் மனக்குமுறலை வெளிப்படுத்துகின்றனர்.
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்
எந்தையும் உடையேம், எம்குன்றும்
பிறர் கொள்ளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்
வென்று எறிமுரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார் யாம் எந்தையும்
இலமே (புறம் 112)
இங்கு, முழுமதி நாளில் மாதக் கணக்கீடு நடைமுறையில் இருந்தது என்பதை இச்சங்கப் பாடல் தெற்றெனப் புலப்படுத்துகிறது. எனவே, சங்க காலத்தில் முழுமதி நாளே மாதத் தொடக்கமாக கணக்கிடப்பட்டிருக்கலாம்.
சிலப்பதிகாரம் மங்கல வாழ்த்துப் பாடலில் டதிங்களைப் போற்றுதும்' என்று தொடங்குகிறது. திருப்பாவை முப்பதும் மார்கழி மாதம் முழுவதும் பாராயணம் செய்யப்படுகிறது.
ஆண்டாள் மார்கழி மாதம் முதல் நாளில் அதுவும் முழுநிலவு நாளில் தொடங்குவதாகப் பாசுரம் அமைத்துள்ளார்.
டதையொரு திங்களும் தரை விளக்கித் தண்மண்டலமிட்டு மாசி முன்னாள்' என்று நாச்சியார் திருமொழி தொடங்குகிறது. மாதத் தொடக்கமும் முழு நிலவும் இணைந்து வருவதைப் பெரியாழ்வார் பாசுரத்திலும் காண முடிகிறது.
ஆயர்குல மக்களில் ஆண் குழந்தைகள் எல்லாரும் காது குத்திக் கொண்டு காதைத் தாழப் பெருக்கிக் கொள்ளுதல் (புத்த தேவனின் காதுபோல) அக்கால வழக்கம். ஆண் குழந்தைக்கு காது குத்தப்பட்ட மாதத்திலேயே, அவனுடைய காதுத் துளையில் சிறிய பஞ்சால் ஆகிய மெல்லிய திரியை நுழைத்து கொஞ்சங் கொஞ்சமாக காதுத் துளையைப் பெருக்கிவிடுவர்.
இதைச் சொல்ல வந்த பெரியாழ்வார், டதலைநிலாப் போதே உன் காதைப் பெருக்காது விட்டிட்டேன்' என்று தன் கவனக் குறைவைப் பற்றி நொந்து கொள்வார்.
டஈண்டு தலை நிலா' எனும் சொல்லை சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். தலைச் சங்கம், தலைக் காவேரி, தலை தீபாவளி எனும் சொற்களில் டதலை' எனும் சொல் டதொடக்கம்' அல்லது டமுதல்' என்ற பொருளைக் குறிக்கிறது. முதல் மாதத்திலேயே என்று சொல்ல வந்த பெரியாழ்வார், டதலைநிலாப் போதே' என்று நிலவை (நிலா) காலக் கணக்கீட்டுக்கு பயன்படுத்துகிறார். திருப்பாவையின் முதல் பாசுரத்தில் வரும் டமதி நிறைந்த நன்னாள்' எனும் சொல்லுக்கு டஅண்டை கொண்ட பலமாக' பெரியாழ்வாரின் இச்சொல்லாட்சி துணை நிற்கிறது.
ஆகவே ஆண்டாள், பெரியாழ்வார் வாழ்ந்த தென்பாண்டி நாட்டில் (பல்லவர் காலம்) மாதத் தொடக்கம் முழு மதி நாளிலிருந்து கணக்கிடப்பட்டிருக்கலாம்.