FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் கலாரசிகன் - 09-08-2026

தில்லிக் கம்பன் விழாவில் இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் முழுமையாகக் கலந்துகொண்டதில் மனநிறைவு கிடைத்தது.

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 6:00 pm IST
இந்த வாரம் கலாரசிகன்
பகிர்:

தில்லிக் கம்பன் விழாவில் இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் முழுமையாகக் கலந்துகொண்டதில் மனநிறைவு கிடைத்தது. சென்ற வாரம் சனி, ஞாயிறு இரண்டு நாள்களுமே கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் என்று கம்ப காதை குறித்த செய்திகளைக் கேட்டும், ரசித்தும் கழித்த பொழுதுகளை வாழ்நாள் முழுவதும் அசை போடலாம்.

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், கம்பனைப் பாமரர்களிடம் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் நடிகர் சிவகுமார் இருவரும் இரண்டு நாள்களும் தில்லியில் தங்கியிருந்தது மட்டுமல்லாமல் கம்பன் விழா நிகழ்வுகள் அனைத்திலும் பார்வையாளர்களாகவும் அமர்ந்து ரசித்ததைத் தில்லித் தமிழர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். இலங்கை ஜெயராஜை நடுவராகக் கொண்ட ராஜாவும், பாரதி பாஸ்கரும் கலந்துகொண்ட பட்டிமன்றத்தின்போது, தில்லித் தமிழ்ச் சங்க அரங்கம் நிரம்பி வழிந்த காட்சி வரலாற்று நிகழ்வு.

உச்சநீதிமன்ற நீதியரசர் எம்.எம். சுந்தரேஷ் இந்த ஆண்டு தில்லிக் கம்பன் விழாவைத் தொடங்கி வைத்து ஆற்றிய உரை, கம்பனில் அவருக்கு இருக்கும் ஆழமான புரிதலையும் ஈர்ப்பையும், தனித்த பார்வையையும் வெளிப்படுத்தியது. விரைவிலேயே ஈரோட்டில் கம்பன் கழகம் நிறுவப்பட இருக்கிறது என்பது தலைநகரில் இருந்து நீதியரசர் எம்.எம். சுந்தரேஷ் தாய்த் தமிழகத்துக்கு விடுத்திருக்கும் தகவல்.

Advertisement

Advertisement

இரண்டாம் நாள் நிகழ்வில் கம்பன் அடிப்பொடி சா. கணேசனின் படத்தைத் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார் உச்சநீதிமன்ற நீதியரசர் விஸ்வநாதன். நடிகர் சிவகுமாரின் கம்பராமாயணம் உரை நூலை வெளியிட்டு உச்சநீதிமன்ற நீதியரசர் அரங்க. மகாதேவன் ஆற்றிய உரை, அவரது ஆகச் சிறந்த உரைகளில் ஒன்று.

தில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனர் தலைவர் நண்பர், கவிஞர் கே.வி.கே. பெருமாள் ஒவ்வொரு கம்பன் விழாவிலும் ஏதாவது புதுமையான நிகழ்ச்சியை அமைத்து விடுகிறார். மதுரை இந்திரா விஜயலட்சுமியின் இசை நிகழ்ச்சி, இந்த ஆண்டு கம்பன் விழாவின் புது வெளிச்சம். கவியரசர் கண்ணதாசனின் பிறந்த நூற்றாண்டை சிறப்பிப்பது போல, அவர் தனது திரைப்படப் பாடல்களில் கையாண்ட கம்பனின் கவிதைகளைப் பாடிக் காட்டி இந்திரா விஜயலட்சுமி அஞ்சலி மாலை தொடுத்ததை எத்துணை பாராட்டினாலும் தகும். என்னவொரு வளமான குரல்; அதைப் போலவே தொகுத்து வழங்கும் லாகவம்.

தொடக்க விழா முன்னுரையில் நான் பேசும்போது, அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் கம்பராமாயணத்தைத் தீயிட்டுக் கொளுத்தும் "தீ பரவட்டும்' இயக்கத்தை முன்னெடுத்தது குறித்தும், அதன் விளைவாக எழுந்த கம்பன் கழகங்கள், கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்த்ததையும் குறிப்பிட்டேன். "தீ அணைந்துவிட்டது, ஆனால், கம்பன் நிலைத்துவிட்டார்' என்றும் குறிப்பிட்டேன்.

இரண்டாம் நாள் "சொல்லரங்கம்' நிகழ்ச்சியில் "கம்பன் ஒரு பார்வை' என்கிற தலைப்பில் பேசும்போது, முனைவர் பர்வீன் சுல்தானா, எனது கருத்தை மறுதலித்து, அண்ணாவும் மற்றவர்களும் எரிக்க விழைந்தது வால்மீகி ராமாயணத்தை என்றும், கம்பனுக்கு எதிராக "தீ பரவட்டும்' முன்னெடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

அண்ணா "கம்பரசம்' எழுதியவர் என்பதும், "தீ பரவட்டும்' போராட்டத்தை அவர் முன்னெடுத்தபோது, "நல்ல தமிழ்க் கவிஞர் ஒருவரின் கவிதையை தீக்கிரையாக்கச் சொல்கிறீர்களே, இது என்ன தமிழ்ப் பற்று?' என்று பேராசிரியர் இலக்குவனார் விமர்சித்துக் கடிதம் எழுதியதும், "கம்பனை எரித்து விடுவோம்; அப்புறம் அந்த இடத்தில் வேறு யார்?' என்று பாவேந்தர் பாரதிதாசனார் கேள்வி எழுப்பியதும் முனைவர் பர்வீன் சுல்தானாவுக்குத் தெரியாமல் இருந்திருக்காது. வரலாற்றைத் திருத்தி எழுத முயற்சிப்பது தவறு என்பதை சகோதரி பர்வீன் சுல்தானாவுக்குத் தெரிவித்துக் கொள்ள விழைகிறேன்.

தினமணியின் "கொண்டாட்டம்' இணைப்பில் தொடர்ந்து 34 வாரங்கள் வெளிவந்த தொடர்தான் சா.கந்தசாமியின் "என்றும் இருப்பவர்கள்'. அவர் மறைந்து ஆறாண்டுகள் பறந்து விட்டன. ஆனால், நாம் இப்போதும் அவரது "சாயாவனம்' நாவல் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

தனது வாழ்க்கையில் சந்தித்த, இன்றுவரை மறைந்தும் வாழும் பல ஆளுமைகள் குறித்து வாரம் ஒருவர் என்று அவர் எழுதிய தொடர் இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. ஒளிவு மறைவு இல்லாமல், தனது மனதில் பட்டதை அப்படியே பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் சா. கந்தசாமி, அவரது அடி மனதின் ஆழத்தில் பதிந்துவிட்ட இலக்கிய ஆளுமைகளின் நிறை, குறைகளை மறைக்காமல் பதிவு செய்திருக்கிறார்.

""ஒவ்வொரு மனிதரும் தனக்குள் இருக்கும் ஒரு அறுபது பேர் குறித்து சுலபமாக எழுதி விடலாம். என்னுள் இருப்பவர்கள் சிலரை ஆசையுற்று எழுதி இருக்கிறேன். இதனைப் படிப்பவர்கள் தங்களுக்குள் "என்றும் இருப்பவர்கள்' பற்றி நினைவுகூரவும், பேசவும், எழுதவும் எண்ணம் தோன்றினால் போதும்' என்று தனது என்னுரையில் சா. கந்தசாமி குறிப்பிட்டிருப்பது நிஜமான வார்த்தைகள்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனில் தொடங்கி இயக்குநர் பாலு மகேந்திரா வரையில் 34 ஆளுமைகள் சா.கந்தசாமியின் பேனாவால் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, ஏ.கே.செட்டியார், வெ.சாமிநாத சர்மா, ஓவியர் ஏ.பி. சந்தானராஜ், எம்.கோவிந்தன் குறித்த அவரது பதிவுகள், அதிகம் பேசப்படாவிட்டாலும் அவர்கள் என்றும் இருப்பவர்கள் என்பதை உணர்த்துகின்றன.

தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், தி.ஜ.ர., லா.ச.ரா., அகிலன், நா.பா., அசோகமித்திரன், விந்தன், நகுலன், சுந்தர ராமசாமி குறித்துப் பதிவு செய்திருக்கும் சா. கந்தசாமியிடம் கல்கி, கண்ணதாசன், சுஜாதா உள்ளிட்ட அவரது சமகால இலக்கிய ஆளுமைகள் குறித்து ஏன் எழுதி வாங்காமல் தவற விட்டோம் என்று இப்போது வருத்தம் மேலெழுகிறது.

வெகுஜன இதழ்களில் வரும் கவிதைகளை ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள்? ஏற்கெனவே பிரபலமான கவிஞர்களின் கவிதைகள் மீண்டும் மீண்டும் இடம்பெறுவதைத் தவிர்க்கலாகாதா? இந்த இரண்டு கேள்விகளும் என்னிடம் ஒரு சிலரால் கேட்கப்படுகின்றன. அதில் நியாயம் இருப்பதை என்னால் உணர முடிகிறது. புதியவர்களுக்கு வாய்ப்பு நழுவுகிறது என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

அதே நேரத்தில் நல்லதொரு கவிதை பார்வையில் படும்போது அதைப் பகிர்ந்து கொள்ளாமல் நகர்ந்து போவது தவறு என்று உள் மனது சுட்டிக் காட்டுகிறது.

முடிந்தவரை பிரசுரமான கவிதைகளையும், பிரபலங்களின் கவிதைகளையும் தவிர்த்து, புதியவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதைத்தான் நானும் விரும்புகிறேன். அதற்காகத்தான் இந்த பத்தியே தொடங்கப்பட்டது என்பதை மறந்து விடவில்லை.

குமுதம் பருவ இதழில் வெளிவந்திருக்கும் எஸ். மகேஷ் என்பவரின் கவிதை இது. கண்ணில் பட்டது; என்னைக் கவர்ந்தது. அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆழ்துளைக்கிணறு

துளையிடும்

எந்திரத்தின் இரைச்சலில்

வெளியில் கேட்பதில்லை

பூமியின் கதறல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments