FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்மணி

இரு பெரும் புலவரின் ஒரு திறப்பார்வை

சங்கப் புலவரில் கபிலருக்கும் நக்கீரருக்கும் தனிச் சிறப்பு உண்டு.

கோப்புப் படம்
பகிர்:

சங்கப் புலவரில் கபிலருக்கும் நக்கீரருக்கும் தனிச் சிறப்பு உண்டு. நற்றிணையில் 'செறிப்பறிவுறீயது' (வீட்டுக்காவலில் இருப்பதை அறிவுறுத்துவது) எனும் ஒரு துறைக்கீழ் அமைந்த அவர்தம் இரு பாடல்கள் (கபிலர் 222, நக்கீரர் 258) அப்புலவர்களின் புலமைத் திறத்தை எடுத்துரைப்பனவாய் அமைவது சிறப்பாகும்.

தலைவன், தலைவி காதலைத், தாய், தலைவியின் 'வளைகழறல்' போன்ற உடல்நிலை மாற்றத்தால் அறிந்து கொள்வாள். ஊராரின் பழிக்கஞ்சியும் தலைவியின் உடல் வருந்துவது கண்டும் தாய், அவளை வீட்டுக் காவலில் வைத்திருப்பாள். இதை அகப்பொருளில் 'இற்செறிப்பு' என்பர்.

இதனால் தலைவன், பகலிலோ இரவிலோ தலைவியைச் சந்திக்க இயலாது வருந்துவான். ஒருநாள், அவன் தலைவியை வழக்கமாக சந்திக்கும் இடத்துக்கு வருகிறான். அவன் வருகையை

Advertisement

Advertisement

எதிர்நோக்கியிருக்கும் தோழி, அவன் சிறைப் புறத்தானாக நிற்கக் கண்டும் காணாதது போல், தலைவி இற்செறிக்கப்பட்டாள்; அவளைக் காண வேண்டுமாயின் அவளை மணந்து கொள் வேறு வழியில்லை என்று தலைவனுக்கு அறிவுறுத்துவது 'செறிப்பறிவுறீயது' ஆகும்.

கபிலர் குறிஞ்சித் திணையிலும் நக்கீரர் நெய்தல் திணையிலும் தோழி கூற்றாக அமைத்து இந்தப் பாடல்களைப் பாடியுள்ளனர்.

கபிலர், தலைவன் சிறைப்புறத்தே நிற்க அவனைக் காணாதது போல் தலைவியிடம் தோழி,

கூறுவதாக

கருங்கால் வேங்கை செவ்வி வாங்கு சினை

வடுக்கொளப் பிணித்த விடுமுரி முரற்சிக்

கைபுனை சிறுநெறி வாங்கிப் பையென

விசும்பாடு ஆய்மயில் கடுப்பயான் இன்று

பசுங்கா ழல்குல் பற்றுவன் ஊக்கிச்

செலவுடன் விடுகோ தோழி பலவுடன்

வாழை ஓங்கிய வழையமை சிலம்பில்

துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு படக் காணாது

பெருங்களிறு பிளிறுஞ் சோலையவர்

சேணெடுங் குன்றம் காணிய நீயே

(நற்றிணை 222)

என்ற பாடலை அமைக்கிறார்.

இப்பாடலின் பொருளாவது, மலைவாழை தோப்பும் சுரபுன்னை மரங்களும் நிறைந்த மலையில் துயிலும் பெண்யானையை (பிடி) மேகக்கூட்டங்கள் திடீரென மறைக்கவே தன் இணையைக் காணப் பெறாத களிறு துயரத்தில் பிளிறுகிறது.

'தலைவியே! தலைவனைக் காணப் பெறாது போயினும் அவனது மலையைப் பார்த்தேனும் ஆறுதல் கொள்ளும்படி, உன்னை உயர்ந்த வேங்கை மரக் கிளையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் அமர்த்தி வேகமாக ஆட்டுவேன்; அது உயரே செல்லும் போது தலைவன் மலையைக் காண்பாயாக. அப்போது வானத்தில் ஆடும் மயில் போல நீ காட்சியளிப்பாய். நீ அவன் மலையைக் காணும் போது அவனைக் கண்டது போன்ற உணர்வைப் பெற்று ஆறுதல் கொள்வாய்' எனப்பாடற் பொருள் அமைகிறது.

தலைவனைக் காண இயலா விட்டாலும் அவன் மலையைக் காண்பது அவனையே காண்பதாகப் பாடுவது, தலைவன் மீதுள்ள காதலைக் குறிப்பாக உணர்த்துகிறது. மேலும், பிரிவு இருவருக்குமே துயரத்தைத் தருகிறது என்பதால் உடனே திருமணத்துக்கு ஏற்பாடு செய் என்று தோழி குறிப்பாக வலியுறுத்துவதும் குறிக்கத்தக்கது.

மலையில் மேகக்கூட்டங்களால் மறைக்கப்பட்ட தன் பிடியைக் காணாது பிளிறும் யானையைத் தாய் இற்செறித்தலால் காண முடியாது வருந்தும் தலைவனுக்கு உவமைப்படுத்துவது புலவரின் புலமைத் திறத்திற்குச் சான்றாகும்.

தலைவியின் செல்வச் செழிப்பை அல்குலில் அணிந்த பொன்னாலாகிய வடத்தை (பசுங்காழ்அல்குல்), அணிந்தவள் என்பதிலும் தலைவன் செல்வச்செழிப்பை 'வாழைஓங்கிய வழையமைசிலம்பு' என்பதிலும் குறிப்பாக உணர்த்தும் புலவர் புலமைத் திறத்தை இங்கே எண்ணிப் பார்க்கலாம்.

நக்கீரர் பாடலும் கபிலர் பாடலைப் போன்றே தலைவன் சிறைப்புறத்தானாக நிற்க, தோழி தலைவனுக்கு அறிவுறுத்துவது போல் அமைகிறது.

பல் பூங்கானல் பகற்குறி மரீஇச்

செல்வல் கொண்க!} செறித்தனள் யாயே;

கதிர்கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத்

திருவுடை வியனகர் வருவிருந்து அயர்மார்

பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த

கொக்குகிர் நிமிரல் மாந்தி, எல் பட

அகலங் காடி அசைநிழற் குவித்த

பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை

தூங்கல் வங்கத்து கூம்பிற் சேக்கும்

மருங்கூர்ப் பட்டினத்து அன்னவிவள்

நெருங்கோ எல்வளை ஓடுவ கண்டே.

(நற்றிணை 258)

என்பதே அந்தப் பாடல்.

ஞாயிறானது தன் வெவ்விய கதிர்வீச்சால், மக்கள் முதலானோர் கால்கள் வேகும்படி, கீழ்த்திசையில் தோன்றுகிறது. பொற்றொடி அணிந்த மகளிர் விருந்தினர்க்குச் சமைத்த, கொக்கின் நகம் போன்ற சோற்றைக் காக்கைக்குப் பலியிட அதை உண்ட காக்கை பொழுது மறையும் வேளையில், அங்காடியில் காய வைக்கப்பட்ட இறா மீனையும் உண்டு, கடலில், காற்றால் அசையும் பாய்மரக் கப்பலின் உச்சிக்குச் சென்று தங்குகிறது. அத்தகு நெய்தல் நிலத்தலைவனே! 'மருங்கூர் பட்டினம்' போன்று அழகு

மிக்க தலைவியின் கைவளை நெகிழ்வதைக் கண்ட தாய் அவளின் வேறுபாட்டை உணர்ந்து வீட்டுக்காவலில் வைக்கிறாள். இதை உனக்குக் கூறவே இப்பகற்பொழுதில் குறியிடத்து (சந்திக்கும்இடம்) வந்து போகின்றேன்' என்கிறாள்.

கொக்கின் நகத்திற்குச் சோற்றையும் தலைவியின் அழகுக்கு ஒரு நகரத்தையே (மருங்கூர்பட்டினம்) உவமிப்பதும் சிறப்பு.

கபிலர் பாடலில் இற்செறித்தலால் தலைவன் தவிக்கும் தவிப்புக்கு, மலையில் தன் பிடியை மேகங்கள் மறைத்ததால் அதைக் காண முடியாது தவித்து பிளிறும் களிறுக்கு, உள்ளுறை உவமம் அமைகிறது தலைவன் தவிப்பும் யானையின் தவிப்பும் ஒருங்கு நோக்கி எண்ணப்படுகிறது நக்கீரர் பாடலில் மகளிர் படைத்த நிவே

தனத்தை (பலிச்சோறு) உண்ட காக்கை திருப்திப் படாமல் அங்காடியில் காயவைத்த கருவாட்டையும் உண்டு கவலை இன்றி கடலில் பாய்மரக்கப்பலில் உச்சிக்குச் சென்று இளைப்பாறுவதாக உள்ளுறை உவமம் அமைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments