FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்மணி

தலைமகளே! புறப்படு நீ...

காற்றுக்குக் 'கால்' என்றும் ஒரு பெயர் உண்டு. கால் இல்லாது அது நான்கு திசையிலும் உலவும்.

Updated On : 19 ஜூலை 2026, 5:38 pm IST
கோப்புப் படம்
பகிர்:

காற்றுக்குக் 'கால்' என்றும் ஒரு பெயர் உண்டு. கால் இல்லாது அது நான்கு திசையிலும் உலவும்.

கிழக்குக் காற்றைக் கொண்டல் என்பர்; மேற்குக் காற்றைக் கோடை என்பர்; தெற்குக் காற்றைத் தென்றல் என்பர்; வடக்குக் காற்றை வாடை என்பர். கோடைக் காற்று வீசும் காலத்தைக் கோடைக்காலம் என்று சொல்லுவது மரபு.

இது கோடைக்காலம் மட்டுமன்று, தலைவிக்குக் களவுக் காலமும் ஆயிற்று. அவளுக்கும் அவனுக்கும் காதல் அரும்பிப் போதாகி, மொட்டாகி மலரும் பருவமும் வந்தது. இனி அதன் மணம் ஊரெங்கும் பரவவும் செய்யும்.

Advertisement

Advertisement

தலைவியின் பெற்றோர் இந்தக் காதலை ஏற்க மாட்டார் என்பது தெரிந்து விட்டது. இந்நிலையில், தலைவன் தன்னூர் நோக்கிச் செல்வதாக முடிவு செய்கிறான். தலைவி துன்புறுகிறாள்.

தோழி, தலைவனிடம் 'தலைவியையும் நீ உடனழைத்துக் கொண்டு போ' என்கிறாள். அவன் தயங்குகிறான். ஏனெனில் அது கோடைக்காலம். செல்லும் வழி பாலை நிலம், நீரற்று வெயில் கொளுத்தும். வழியெங்கும் பாலை நிலத்துக்குரிய வாகை மரங்கள் ஓங்கி உயர்ந்து நிற்கும். அவற்றில் காய்ந்து உலர்ந்த வாகை நெற்றுக்களில் உள்ளே இருக்கும் அரிசி காற்றில் குலுங்கும். 'கல கல' என அவற்றின் ஒலி மிகும். அந்த ஒலி மகளிர் அணிந்த காற்சிலம்பின் பரல் ஒலிபோலக் கேட்கும். மேல் காற்றின் வெப்பம் எங்கும் பரவும். இப்படிப்பட்ட நிலத்தின் வழியே மென்மையான சாயலும் இயல்பும் உடைய தலைவியை எப்படி அழைத்துப் போவது என்பதே அவன் எண்ணமாக இருந்தது.

இந்நிலையில் தோழி, தலைவனிடம் தலைவியையும் உடனழைத்துப் போக வேண்டிய நிலையை எடுத்து மொழிகிறாள். தலைவன் ஒப்புக்கொள்கிறான்.

தலைவன் உடன்போக்குக்கு இசைந்த நிலையைத் தோழி தலைவியிடம் கூறுகிறாள். இந்நிகழ்ச்சியைக் குடவாயிற் கீரத்தனார் அழகாகச் சித்திரம் செய்கிறார்.

அத்த வாகை அமலை வால்நெற்று

அரியார் சிலம்பின் அரிசி ஆர்ப்பக்

கோடை தூக்கும் கானம்

செல்வாம் தோழி! நல்கினர் நமரே.

(குறுந்தொகை 369)

இவர்கள் உடன்போகிய பின் தலைவன் ஊரகத்தே மணம் கொள்வர். அதையே தொல்காப்பியர், 'கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலையான' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments