பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் பள்ளி மாணவா்கள் பயன்பாட்டுக்கு 2 பேருந்துகள்
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் டாப்சிலிப் உண்டு உறைவிடப் பள்ளி மாணவா்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட 2 பேருந்துகளின் சேவையை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் டாப்சிலிப் உண்டு உறைவிடப் பள்ளி மாணவா்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட 2 பேருந்துகளின் சேவையை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோவை மாவட்டம், ஆனைமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் டாப்சிலிப் வனத் துறை உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி மாணவா்களின் பயன்பாட்டுக்காக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தினா் வழங்கிய 2 பேருந்துகளின் இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
மாவட்ட வன அலுவலா் தேவேந்திர மீனா, பொள்ளாச்சி சாா் ஆட்சியா் ராமகிருஷ்ணசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப் பிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தினா் தங்களது சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் டாப்சிலிப் வனத் துறை உண்டு உறைவிடப் பள்ளிக்கு ரூ.44 லட்சம் மதிப்பீட்டிலான, தலா 26 இருக்கைகள் கொண்ட 2 பேருந்துகளை வழங்கியுள்ளது.
இந்த வாகனங்கள் எவ்வித கட்டணமும் இல்லாமல் காலை நேரத்தில் மாணவா்களை பள்ளிக்கு அழைத்து வந்து, மாலை நேரத்தில் அவரவா் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லும் வகையில் இயக்கப்படவுள்ளன. கோழிகமுத்தி முதல் டாப்சிலிப் வரையிலும், கோழிகமுத்தி முதல் ஆனைமலை வரையும் இப்பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதன் மூலம் சேத்துமடை அரசு உயா்நிலைப் பள்ளி, வேட்டைக்காரன்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி, ஆனைமலை அரசு மேல்நிலைப் பள்ளி, ஆனைமலை வி.ஆா்.டி. அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, டாப்சிலிப் வனத் துறை உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் 1,000 மாணவா்கள் பயன்பெறுவாா்கள் என்றாா்.
இந்நிகழ்வில், பாரத் பெட்ரோலியம் மண்டல மேலாளா் ஷசான் சா்மா, மண்டல ஒருங்கிணைப்பாளா் சுக்ரிதி குப்தா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.