FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்மணி

ஆனந்தம் விளையாடும் வீடு!

ஐங்குறுநூற்றில் முல்லைத்திணை பாடல்கள் ஒவ்வொன்றும் அழகான குடும்பப் புகைப்படத் தொகுப்பைப் போல காட்சிகளைக் கண்முன் காட்டும் இயல்புடையன.

Updated On : 12 ஜூலை 2026, 10:36 pm IST
கோப்புப் படம்
பகிர்:

ஐங்குறுநூற்றில் முல்லைத்திணை பாடல்கள் ஒவ்வொன்றும் அழகான குடும்பப் புகைப்படத் தொகுப்பைப் போல காட்சிகளைக் கண்முன் காட்டும் இயல்புடையன.

ஆண் மானும், பெண் மானும் இடையில் தங்கள் குட்டி மானை வைத்துக் கொண்டிருப்பதைப்போல படுக்கையில் குழந்தையை நடுவில் கிடத்தி தாய் மகனை அணைத்துக் கொண்டு படுத்திருக்கிறாள். தலைவன் அந்த அழகை ரசித்த வண்ணம் அருகில் இருக்கிறான். வானுலகில் உறையும் தேவர்களும்கூட இவர்கள் காணும்

இன்பத்தைப் பெறுதல் அரிது என்று செவிலித்

Advertisement

Advertisement

தாய் இந்தக் காட்சியை வர்ணிக்கிறாள்.

அடுத்த பாடல்,

புணர்ந்த காதலியிற் புதல்வன் தலையும்

அமர்ந்த உள்ளம் பெரிதா கின்றோ-

அகன்பெருஞ் சிறப்பின் தந்தை பெயரான்

முறுவலின் இன்னகை பயிற்றிச்

சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே! (3)

மனைவியுடன் கூடி இருந்தபோது அடைந்த இன்பத்தை விடவும் குழந்தையின் மகனின் விளையாடலைக் காணும் போது இன்னும் இன்பம் அதிகமாகி உள்ளம் பூரிக்கிறது தந்தைக்கு. இந்த நான்கு வரிகளுக்குள் எத்தனை உணர்வுகளும் செய்திகளும் இடம் பெறுகின்றன பாருங்கள்!

மகன் சிறுதேர் உருட்டி விளையாடுகிறான், இன்றைக்கும் ஆண் குழந்தைகள் இதே விளையாட்டைத் தான் விளையாடுகின்றனர். அதே நேரம் மகனை இந்தப் பாடலில் தந்தையின் பெயரைக் கொண்டவன் என்று குறிப்பிடுகிறார் புலவர். அகன்

பெருஞ் சிறப்பின் தந்தை பெயரான்' என்ற தொடர், பேர் சொல்லப் பிள்ளை வேண்டும் என்று இன்றைக்கும் நம் மனதில் உணர்வுபூர்வமான விருப்பம் இருக்கிறதே அதை வெளிப்படுத்துகிறது.

ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல

மனைக்கு விளக்காயினள் மன்ற கனைப்

பெயல்

பூப்பல அணிந்த வைப்பின்

புறவணி நாடன் புதல்வன் தாயே'. (406)

இந்தப் பாடலில் பெண்ணின் அடையாளம் மாறுகிறது. மகனுக்குப் புதிய அடையாளம் பிறக்கிறது. ஒளி வீசும் சூரியன் போல மகனைப் பெற்ற தாய் மனைக்கு ஒளியாக விளங்குகிறாள். புதல்வன் தாயே' என்ற அடையாளம் பெறுகிறாளாம். இன்றைக்கு நாம் மகனின் பெயரைச் சொல்லி கந்தன் அம்மா', கோதை அம்மா' என்று பிள்ளைகளின் பெயரால் அம்மாக்கள் அடையாளம் காண்பதை சங்க இலக்கியம் பேசுகிறது.

அடுத்த பாடல், பிள்ளை மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கிறது. அதை மனைவியை அணைத்தபடி கணவன் வேடிக்கை பார்க்கிறான். இன்னொரு புகைப்படம் மடலில் சேர்ந்துவிட்டது. அடுத்ததாக, அந்தப் படத்தில் பாணர் முல்லை பாட' இசையின் கூறுகள் இணைகின்றன. இப்போது நிழற்படம் நிகழ்படமாகிறது.

மாலை வந்துவிட்டது. தாயானவள் முல்லை மலர்களை சூட்டிக் கொண்டு அழகுடன் இலங்குகிறாள். அமைதியான மனதுடன் அவன் மகனை மடியிருத்திக்கொண்டு அமர்ந்திருக்கிறான். மாலைநேரக் காட்சி தொடர்கிறது. மடியில் இருக்கும் மகனை தந்தை அணைத்துக் கொள்கிறான். அன்பின் மிகுதியால் தாயானவள் அவர்கள் இருவரையும் சேர்த்து அணைத்துக் கொள்கிறாள். மற்றுமொரு அற்புதமான குடும்பச் சித்திரம்.

புதல்வன் கவைஇயினன் தந்தை

மென்மொழிப்

..............................

நனியிரும் பரப்பின்இவ் உலகுடன் உறுமே'

(409)

இந்தக் காட்சியை சொல்லில் வடித்த புலவருக்கே அதன் அழகில் மனம் மகிழ்வில் நிறைந்து விட்டது. குடும்பத்தின் இந்தக் காட்சிக்கு உலகமே விலையாகக் கொடுத்தாலும் போதாது என்று சொல்லி விடுகிறார்.

இரவுப் பொழுதில் தந்தை குறுகிய கட்டிலை முற்றத்தில் இட்டுக் கொண்டு படுத்திருக்கிறான். அவன் மார்பில் மகன் தவழ்ந்து விளையாடுகிறான். பக்கத்தில் தாய் துணையாக அமர்ந்து அதை ரசிக்கிறாள். இப்படி முடியும் பத்துப் பாடல்களில் ஒரு சிறந்த புகைப்படத் தொகுப்பை வழங்கிவிட்டு இந்தக் குடும்பத்தின் இனிமை சிறந்த இசைக் கலைஞனின் இசையைக் காட்டிலும் இனிமை உடையதாக இருக்கிறது என்று முடிக்கிறார் புலவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments