ஆசிரியப்பாவின் சிறப்பு!
மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன.
முனைவர் சொ. ஏழுமலை
மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது. சங்க இலக்கியங்களில் சிறிய அளவாக மூன்று அடிகளில் ஐங்குறுநூறும், பெரிய அளவாக 782 அடிகளில் மதுரைக்காஞ்சியும் எழுதப்பட்டுள்ளன.
ஆசிரியப்பாவில் ஈர் அசைச்சீர்களும், மூவசைச் சீர்களில் கூவிளங்கனியும் கருவிளங்கனியும் தவிர்த்த பிற சீர்களும் வரப்பெறும். எனினும், ஈர் அசைச் சீர்கள் வருவதே சிறப்பு. ஈற்று அடியின் ஈற்றுச் சொல் ஈற்றசை ஏ, ஓ, ஆய், ஐ, என் ஆகிய ஏதாவதொன்றில் முடிய வேண்டும்.
Advertisement
Advertisement
தனிக்குறில், தனிக்குறில் ஒற்று, தனி நெடில், தனிநெடில் ஒற்று நேரசைகளாகவும், இருகுறில் தனித்து, இருகுறில் ஒற்று, குறில் நெடில் தனித்து, குறில் நெடில் ஒற்று நிரையசைகளாகவும் கணக்கிடப் பெற்றுள்ளன.
நேர் நேர் - தேமா என்றும், நிரை நேர் - புளிமா என்றும் அமைத்து மாச்சீர் என்பர். நேர் நிரை - கூவிளம் என்றும், நிரை நிரை - கருவிளம் என்றும் அமைத்து விளச்சீர் என்பர். இத்தகைய ஈரசைச் சீர்கள் வருவதே சிறந்த ஆசிரியப்பா.
நேர் நேர் நேர் - தேமாங்காய் என்றும், நிரை நேர் நேர் - புளிமாங்காய் என்றும், நிரை நிரை நேர் - கருவிளங்காய் என்றும், நேர் நிரை நேர் - கூவிளங்காய் என்றும் அமைத்துக் காய்ச்சீர் என்பர். நேர் நேர் நிரை - தேமாங்கனி என்றும், நிரை நேர் நிரை - புளிமாங்கனி என்றும், நேர் நிரை நிரை - கூவிளங்கனி என்றும், நிரை நிரை நிரை - கருவிளங்கனி என்றும் அமைத்துக் கனிச்சீர் என்பர். இவற்றில் கருவிளங்கனியும் கூவிளங்கனியும் ஆசிரியப்பாவில் வரவே கூடாது. பிற மூவசைச் சீர்கள் வரலாம். ஆனால் சிறப்பன்று.
இரண்டசைச் சொற்கள் வரும்போது மாச்சீர் முன் நேர் அசை வருவது நேரொன்றாசிரியத் தளையாகவும், விளச்சீர் முன் நிரை அசை வருவது நிரையொன்றாசிரியத் தளையாகவும் கொள்ளப்பெறும். இவ்விரண்டு தளைகளே ஆசிரியப்பாவுக்குரிய தளைகள். பிற தளைகளும் விரவி வரும். ஆனால் சிறப்பன்று.
இவ்வகையில் அமையும் போது ஆசியப்பாவானது அகவல் ஓசையில் ஒலிக்கும். மயில் அகவும் என்பது போன்ற ஓசை. அகவல் ஓசை மூன்று வகைப்படும். முதல் வகை ஏந்திசை அகவல். இது பா முழுக்க ஈரசை கொண்டு
மா முன் நேர் வருவது ஆகும்.
போது சாந்தம் பொற்ப ஏந்தி
ஆதி நாதற் சேர்வோர்
சோதி வானம் துன்னு வாதே
இரண்டாம் வகை தூங்கிசை அகவல். இது பா முழுக்க ஈரசை கொண்டு விள முன் நிரை வருவது ஆகும்.
அணிநிழல் அசோகமர்ந் தருள்நெறி நடாத்திய
மணிதிகழ் அவிரொளி வரதனைப்
பணிபவர் பவம்நனி பரிசறுப் பவரே
மூன்றாம் வகை ஒழுகிசை அகவல். இது பா முழுக்க இரண்டு தளையும் கலந்து வருவது ஆகும்.
நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்தநங் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே (குறு. 4)
இப்பாடலில் நேர்ரொன்றாசிரியத் தளையும் நிரையொன்றாசிரியத் தளையும் விரவி வந்து ஒழுகிசை அகவல் ஓசையைத் தருகின்றன.
இதுவல்லாது பிற தளைகள் வந்தாலும்
ஒழுகிசையாகவே கொள்ளப் பெறுகின்றன.
சங்க இலக்கியங்களில் (பரிபாடல், கலித்தொகை) முழுக்க ஒழுகிசை ஆசிரியப்பாக்களே காணப்படுகின்றன. பட்டினப்பாலை ஆசிரியப்பாவால் அமைந்து வஞ்சி அடிகளையும் பெற்றுள்ளது. எனவே, இப்பாடலை வடிவமைப்பது எளிது. அதோடு, ஆசிரியப்பா எழுத நெகிழ்ச்சியாக நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறிமண்டில ஆசிரியப்பா என்ற வகைகளும் உள்ளன.
இத்தகைய வசதிகள் இருக்கும்போது இவ்வடிவத்தை எழுதாமல் விருத்தப் பாவை ஏற்படுத்தினர். எனினும், அது கருத்தை அடுக்குவதற்கு எளிதாக நாலடியில் அமைக்கப்பட்டது. இப்போது பலர் ஆசிரியப்பாவையும் விருத்தப்பாவையும் எழுதாது, சந்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சந்தப்பாவை எழுதுகின்றனர். கால மாற்றத்தில் சந்தப்பா வரவேற்பைப் பெற்றதாகினும் அதில் வடசொற்கள் மிகுந்தன. இதனால் கலப்புத் தமிழ் உருவாயிற்று. எனவே, சந்தப்பாவில் வடசொற்கள் புகாமல் அல்லது மிகாமல் ஆசிரியப்பாவுக்குரிய அமைப்பையும் கருத்தில் கொண்டு எழுதினால் தமிழ் சிறக்க வாய்ப்புண்டு.