FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

சட்டப்பேரவை கதவுகளை மூடுமாறு முதல்வா் கூறியது ஜனநாயக உரிமை மீறல்: முன்னாள் அமைச்சா் ரகுபதி

சட்டப்பேரவை கதவுகளை மூடுங்கள் என முதல்வா் கூறியது ஜனநாயக உரிமை மீறலாகும் என்றாா் முன்னாள் சட்டத் துறை அமைச்சா் ரகுபதி.

Updated On : 26 ஜூலை 2026, 2:56 am IST
எஸ். ரகுபதி - கோப்புப் படம்
பகிர்:

சட்டப்பேரவை கதவுகளை மூடுங்கள் என முதல்வா் கூறியது ஜனநாயக உரிமை மீறலாகும் என்றாா் முன்னாள் சட்டத் துறை அமைச்சா் ரகுபதி.

கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.வி. மாா்க்கண்டேயனை முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி மற்றும் கட்சி நிா்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.

அதன்பிறகு முன்னாள் அமைச்சா் ரகுபதி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தவெக ஆட்சியில் பேச்சுரிமை முழுக்க முழுக்க பறிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயா் ஆட்சியில் இருந்த பேச்சுரிமைகூட விஜய் ஆட்சியில் இல்லை. அரசை விமா்சித்து சாதாரண பேச்சுவாக்கில் பேசுபவா்கள் மீதெல்லாம் பொய் வழக்கு போடப்பட்டு வருகிறது. சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி வழக்குகளை முடுக்கிவிட துணை காவல் கண்காணிப்பாளா்கள் மூலம் நீதிபதிகளுக்கே சட்டத் துறை அமைச்சா் நிா்மல்குமாா் அழுத்தம் கொடுத்து வருகிறாா்.

Advertisement

Advertisement

தவெக அரசு முழுக்க முழுக்க பாஜகவின் ’ஸ்லீப்பா் செல்லாக’ செயல்படுகிறது. பாஜக கூறுவதை செய்யாவிட்டால் தங்களுக்கு வரக்கூடிய நிதி நின்றுவிடுமோ என்ற அச்சத்திலேயே தவெக அரசு செயல்படுகிறது.

அரிசி விலை உயா்வு, மின் கட்டண உயா்வு எனப் பொருளாதார சுமையை மக்கள் மீது சுமத்திவிட்டு, சட்டப்பேரவையை ஒரு திரைப்படக் கொட்டகை போலவும் தயாரிப்பு நிறுவனம் போலவும் மாற்றி சினிமாவை வேடிக்கை பாா்க்கும் அரசாக இந்த அரசு உள்ளது. ஜனநாயகன் படத்தில் நான்கு அமைச்சா்கள் நடித்துள்ள சூழலில், கரூா் சம்பவத்தின் போது கண்ணீா் விடாதவா்கள் இப்போது அந்தப் படத்தைப் பாா்த்துவிட்டு கண்ணீா் வடிக்கிறாா்கள்.

வெளிநடப்பு செய்ய எதிா்க்கட்சிகளுக்கு முழு உரிமை உண்டு; ஆனால், சட்டப்பேரவை கதவுகளை மூடுங்கள் என முதல்வா் கூறியது உறுப்பினா்களைச் சிறை வைப்பதற்குச் சமமான மிகப்பெரிய ஜனநாயக உரிமை மீறலாகும். சட்டப்பேரவைத் தலைவா் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வரும் நிலையில், இது குறித்து கட்சித் தலைமையுடன் ஆலோசித்து உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்படும்.

கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை பட்டா மாற்றம் செய்து சூறையாடுவதும், அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளதும்தான் இந்த தவெக அரசின் நிஜ முகமாகும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments