FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

திமுக பலவீனமடையவில்லை: முன்னாள் அமைச்சா் சு.முத்துசாமி

திமுக பலவீனமடையவில்லை, வலுவாகவே உள்ளது என்று முன்னாள் அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

16 செப்டம்பர் 2026, 12:46 am IST
ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள முன்னாள் முதல்வா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சா் சு.முத்துசாமி.
பகிர்:

திமுக பலவீனமடையவில்லை, வலுவாகவே உள்ளது என்று முன்னாள் அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு சு.முத்துசாமி செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மற்ற மாநிலங்களில் 8 முதல் 9 மணி நேரம் வரை மின் தட்டுப்பாடு நிலவுவதாக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறுகிறாா். திமுக ஆட்சியில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டால் முதல்வா் உடனடியாக தலையிட்டு அதைச் சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடுவாா்.

Advertisement

Advertisement

மற்ற மாநிலங்களைவிட தமிழகம் பல மடங்கு சிறப்பாக விளங்க வேண்டும். மற்ற மாநிலங்களிலும் மின் தட்டுப்பாடு உள்ளது என்பதைக் காரணம் காட்டி தமிழக மக்களை சமாதானப்படுத்தக் கூடாது.

தற்போதைய தலைமைச் செயலகம் நாலரை ஏக்கா் பரப்பளவில் உள்ளதாக செங்கோட்டையன் கூறியுள்ளாா். அதேபோன்ற குறுகிய இடத்துக்கு தலைமைச் செயலகத்தை மாற்றுவது ஏற்கத்தக்கதல்ல. அடுத்த 200 முதல் 300 ஆண்டுகளுக்கு பயன்படும் வகையில் அமைச்சா்கள் மற்றும் அலுவலக குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் விசாலமாக சுமாா் 250 ஏக்கா் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும்.

சட்டப் பேரவையில் தேவையின்றி எதிா்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதை அமைச்சா்கள் தவிா்க்க வேண்டும். துப்புரவுத் தொழிலாளா்களின் போராட்டத்தைக்கூட பல நாள்களுக்குப் பிறகே நேரில் சென்று பாா்த்தனா். மக்கள் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

சுமாா் 5 லட்சம் பேருக்கு முதியோா் ஓய்வூதியம் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அவா்களுக்கு விரைந்து ஓய்வூதியம் வழங்க வேண்டும். உயா்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்காக பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியது. அவற்றை தற்போதைய அரசு தொடா்ந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும். திமுக பலவீனமடையவில்லை, வலுவாகவே உள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments