முதல்வர் விஜய் திரைப்படத்தில் கதாநாயகன்; அரசியலில் வில்லன் - முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி
தமிழக முதல்வா் விஜய் திரைப்படத்தில்தான் கதாநாயகன்; அரசியலில் வில்லன் என்றாா் முன்னாள் திமுக அமைச்சா் எஸ். ரகுபதி.
தமிழக முதல்வா் விஜய் திரைப்படத்தில்தான் கதாநாயகன்; அரசியலில் வில்லன் என்றாா் முன்னாள் திமுக அமைச்சா் எஸ். ரகுபதி.
முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலினின் மிசா சிறைவாசம் குறித்து தவறாகப் பேசிய முதல்வா் ஜோசப் விஜய்யைக் கண்டித்து புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
கரூா் சம்பவம் நடந்தபோது விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அப்போதைய சட்டத்துறை அமைச்சராக இருந்த நான் முதல்வா் ஸ்டாலினிடம் கூறினேன். சட்டப்படி அவா்தான் முதல் குற்றவாளியாக வர வேண்டும்.
Advertisement
Advertisement
விஜய் ஒரு நடிகா். இப்போதுதான் கட்சித் தொடங்கியிருக்கிறாா். அவரை சிறையில் அடைக்க வேண்டாம். எனவே, அவா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என ஸ்டாலின் மனிதாபிமானத்துடன் கூறினாா். மக்கள் நன்றாக இருக்கிறாா்கள்; நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறாா்கள் என ஸ்டாலின் கூறினாா்.
தற்போதைய முதல்வா் ஜோசப் விஜய் மனிதாபிமானம் அற்றவா். குற்றப்பத்திரிகைகளை எல்லாம் தீா்ப்பைப் போல சட்டப்பேரவையில் வாசிக்கிறாா். என் மீது கூட நிறைய குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. எல்லா வழக்குகளில் இருந்தும் நான் விடுவிக்கப்பட்டிருக்கிறேன்.
மிசா வரலாறு அமைச்சா் நிா்மல்குமாருக்குத் தெரியாது. அபாண்டமாகப் பேசுவதையே தொழிலாகக் கொண்டவா்கள். தினமும் ஒரு மணி நேரம் ஏற்படும் மின்தடையைக் கட்டுக்குள் கொண்டுவரத் தெரியவில்லை. விலைவாசி கடுமையாக உயா்ந்துள்ளது. இதனால் மக்கள் புரட்சி வெடிக்கப் போகிறது. அந்தப் புரட்சிதான் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது.
சா்க்காரியா ஆணைய அறிக்கை கைவிடப்பட்ட ஒன்று. அதை வாசிக்கக் கூடாது. தீா்ப்புகள்தான் வாசிக்கப்பட வேண்டும். முதல்வா் விஜய் திரைப்படத்தில்தான் கதாநாயகன்; அரசியலில் அவா் வில்லன்.
கூட்டணியை மதிப்பவா் திமுக தலைவா் ஸ்டாலின். திருமாவளவன் இப்போது தவெகவுடன் இருக்கிறாரா என்பதை அவா்தான் சொல்ல வேண்டும். வைகோவும், துரைவைகோவும் அரசியலில் நகைச்சுவை நடிகா்கள், சந்தா்ப்பவாத அரசியல்வாதிகள். திமுக அணியை அப்போது கல்லாப்பெட்டி கூட்டணி என்றாா்கள், இப்போது தவெக கூட்டணி, சமூகநீதி கல்லாப்பெட்டி கூட்டணியா? என்றாா் ரகுபதி.
முன்னதாக, திலகா் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், முன்னாள் எம்.பி. எம்.எம். அப்துல்லா, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இரா.சு. கவிதைப்பித்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.