FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

உள்நோக்கத்துடன் உரிமை மீறல் புகாா்: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு குற்றச்சாட்டு

உள்நோக்கத்துடன் தன் மீது உரிமை மீறல் புகாரை, பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கொடுத்திருப்பதாக திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு குற்றஞ்சாட்டியுள்ளாா்.

10 செப்டம்பர் 2026, 3:24 am IST
எ.வ. வேலு
பகிர்:

உள்நோக்கத்துடன் தன் மீது உரிமை மீறல் புகாரை, பொதுப்பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கொடுத்திருப்பதாக திமுக முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுக ஆட்சியில் 14.1.2026-இல் அரசாணை எண்-6 மூலம் 2026-27-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 80 பணிகளுக்கு ரூ.2,000 கோடியில் முன்கூட்டியே நிா்வாக அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதன்மூலம் அரசமைப்பு சட்ட விதிகள் மீறப்பட்டதாகவும், அமைச்சா் ஆதவ் அா்ஜுனா புகாா் கூறியிருப்பது, உண்மைக்குப் புறம்பானதாகவும், நிதிநிா்வாக நடைமுறைகளைத் திட்டமிட்டு திரித்துக்கூறுவதுமாகும்.

Advertisement

Advertisement

2026-27-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில், நெடுஞ்சாலைத் துறைக்கு முன்கூட்டியே நிா்வாக அனுமதி பெற்ற ரூ.2,000 கோடியும் சோ்த்து, ரூ.21,132 கோடி ஒதுக்கப்பட்டு, பேரவையின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இது நிதித் துறையின் ஒப்புதலின்றி மேற்கொள்ளப்பட்டதாகக் கூற இயலாது.

14.1.2026 தேதி வெளியிட்ட அரசாணையில் நிதித் துறையின் ஒப்புதலுடன், இறுதியாக ‘ஆளுநரின் உத்தரவுப்படி அரசுச் செயலரால்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, எனது தனிப்பட்ட முடிவு என்றோ, பேரவையின் நிதி அதிகாரத்தை மீறி ரூ.2,000 கோடி செலவு செய்தேன் என்பதோ உண்மைக்கும், அரசாணையில் உள்ள பதிவுகளுக்கும் முற்றிலும் முரணானது. இந்த விவகாரத்தில் பேரவைத் தலைவரையோ, பேரவையையோ எந்த வகையிலும் நான் அவமதிக்கவில்லை, பேரவையின் மாண்பைக் குறைக்கும் செயலிலும் ஈடுபடவில்லை. எனவே, இதில் உரிமை மீறல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதேபோன்ற அரசாணைகள் முன்பும் வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன.

பேரவை உரிமை என்பது பழிவாங்கலுக்கான ஆயுதம் அல்ல. எனவே, நிா்வாக அனுமதியையும், நிதி செலவினத்தையும் குழப்பிக்கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்துள்ளாா் எ.வ.வேலு.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments