முகப்பு

'என்கோ' என்பதன் இலக்கிய ஆட்சி

'என்கு' என்னும் சொல்லுக்கு 'என்று சொல்வேன்' என்பது பொருள் ஆகும். இதனைத் தொடர்ச்சொல் என்பர் பாவாணர்.

12 வினாடிகள் முன்பு
'என்கோ' என்பதன் இலக்கிய ஆட்சி
பகிர்:

முனைவர் ம.பெ. சீனிவாசன்

'என்கு' என்னும் சொல்லுக்கு 'என்று சொல்வேன்' என்பது பொருள் ஆகும். இதனைத் தொடர்ச்சொல் என்பர் பாவாணர்.

என்கிறீர், என்கின்றீர் என்பன இதனடியாகப் பிறக்கும் சொற்களே. 'என்கிலாத' என்பது 'என்று கூறாத' என்று எதிர்மறைப் பொருள் தரும்.

Advertisement

Advertisement

'அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மையே என்ன ஆண்மையே' என்பது கம்பரின் பாடல்.

'என்கு' என்பதோடு ஓகார இடைச்சொல் சேர்ந்து 'என்கோ' என்று ஆகும். அப்போது, 'என்பேனா' என்பது இதன்பொருள்.

நாடன் என்கோ? ஊரன் என்கோ?

பாடிமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என்கோ?

யாங்கன மொழிகோ ஓங்குவாட் கோதையைப்

புனவர் தட்டை புடைப்பின் அயலது

இறங்குகதிர் அலமரு கழனியும்

பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ஒருங்கு எழுமே!

(புறம். 49)

என்னும் புறநானூற்றுப் பாடலொன்றில் இத்தொடர் மும்முறை அடுக்கிவரக் காணலாம்.

குறிஞ்சியும் முல்லையுமாகிய தினைப்புனங்களைக் காப்பவர் பறவைகளை விரட்டுவதற்காகத் தட்டையை ஒலித்தால் பக்கத்தில் உள்ள மருத நிலத்திலும் நெய்தல் நிலத்திலும் உள்ள பறவைகள் எழுந்து பறந்தோடுமாம்.

எனவே, நானில வளமுடைய நாட்டுக்குரிய கோக்கோதையை நாடன் என்பேனா?, சேர்ப்பன் என்பேனோ? எனப் புகழ்கிறார் பொய்கையார்.

இங்ஙனம் சங்க நூலில் இடம்பெற்ற இத்தொடர்ச் சொல்லை, அடுத்துத் தமிழின் முதற்காப்பியமான சிலப்பதிகாரத்தில்தான் பார்க்கிறோம்.

'பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!

மலையிடைப் பிறவா மணியே என்கோ!

அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ!

யாழிடைப் பிறவா இசையே என்கோ!

என்று கோவலன் கண்ணகியின் இயற்கையழகைத் தேனூறு மொழிகளால் பாராட்டி மகிழ்கிறான். 'இதனை உலவாக் கட்டுரை பல பாராட்டி' என்கிறார் இளங்கோவடிகள்.

கோவலனுக்கும் கண்ணகிக்கும் நாடறி நன்மணம் முடிந்து அவனும் அவளும் நிலா முற்றத்தில் தனித்திருந்தபோது வேட்கைவயப்பட்ட கோவலன் வாயிலிருந்து பிறந்த விருப்பமொழிகள் இவை. ஆம்! 'விடுதலறியா விருப்பு' அது.

மலையிடைப் பிறக்கும் மணிக்கு உன்னைப்போல் குழைவில்லை யாதலின் மலையிடைப் பிறவா மணியே என்பேனா? அலையிடைப் பிறக்கும் அமிழ்தத்திற்கு உன்னைப் போன்றதொரு வடிவு இல்லை. ஆதலின், அதிற் பிறக்காத அமுதே என்பேனா? யாழிடைப் பிறக்கும் இசைக்கு உன் பேச்சைப் போன்றதொரு இனிமை இல்லை. எனவே, அதனிடைப் பிறவாத இசையே என்பேனா? என்பது கோவலன் கூற்றிற்கான விளக்கமாகும்;. இங்ஙனம் விளக்கியருளியவர் அடியார்க்குநல்லாரென்னும் உரையாசிரியர் ஆவர்.

என்கோ என்னும் தொடரினை மீண்டும் பக்தி இலக்கியத்தில் அதுவும் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில்தான் பார்க்கிறோம்.

புகழுநல் ஒருவன் என்கோ!

பொருவில்சீர்ப் பூமி என்கோ!

திகழும் தண்; பரவை என்கோ!!

தீயென்கோ! வாயு என்கோ!

நிகழும் ஆகாசம் என்கோ!!

நீள்சுடர் இரண்டும் என்கோ!!

இகழ்வில் இவ்வனைத்தும் என்கோ!

கண்ணனைக் கூறுமாறே!

கூறுமாறு அறிய மாட்டேன்

குன்றங்கள் அனைத்தும் என்கோ!!

மேவுசீர் மாரி என்கோ!

விளங்கு தாரகைகள் என்கோ!

நாவியல் கலைகள் என்கோ!

ஞானநல் ஆவி என்கோ!

பாவுசீர்க் கண்ணன் எம்மான்

பங்கயக் கண்ணனையே!

எல்லாப் பொருள்கட்கும் உள்ளுயிராய் நிற்கும் கண்ணபிரானைப் புகழப்படுகின்ற குணங்களையுடைய ஒப்பற்றவன் என்பேனா? ஒப்பில்லாத சிறப்பையுடைய பூமி என்பேனா? விளங்குகின்ற குளிர்ந்த கடல் என்பேனா? உளதாகின்ற ஆகாசம் என்பேனா? மிக்க ஒளியையுடைய இரண்டு சூரிய சந்திரர்கள் என்பேனோ? கொள்ளத்தக்கதாக இருக்கின்ற இப்பொருள்கள் என்பேனா? என்பது முதல் பாடலின் பொருளாகும்.

இரண்டாம் பாடலின் பொருள் வருமாறு: பரந்த புகழையுடைய கண்ணனாய், எனக்குத் தலைவனாய், தாமரை போன்ற கண்களையுடைய வனாயிருக்கிற இறைவனைச் சொல்லும்வகை அறியமாட்டேன்.

எல்லா மலைகளும் என்பேனா? பொருந்திய சிறப்பையுடைய மழை என்பேனா? விளங்குகின்ற விண்மீன்கள் என்பேனா? நாவால் இயற்றப்பட்ட அறுபத்து நான்கு கலைகள் என்பேனா? அனைத்திற்குக் காரணமான ஒலி என்பேனா? யாது என்பேன்?

இங்ஙனம் பலன் கூறும் பாடல் நீங்கலாகப் பத்துப் பாசுரங்கள்கொண்ட இத்திருவாய் மொழியில் எட்டுப் பாசுரங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் என்கோ என்னும் ஒரு சொல்லையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தியிருக்கிறார் நம்மாழ்வார்.

ஒளிமணி வண்ணன் என்கோ?

ஒருவன் என்று ஏத்த நின்ற

நளிர்மதிச் சடையன் என்கோ?

நான்முகக் கடவுள் என்கோ?

அளிமகிழ்ந்து உலக மெல்லாம்

படைத்து அவை ஏத்த நின்ற

களிமலர்த் துளவன் எம்மான்

கண்ணனை மாயனையே!

இப்பதிகத்தின் எட்டாவது பாகரம் இது.

பிரமன், சிவன் முதலானவர்களுக்கு விபூதியாகயுடையவன் மாயோன் என்னும் கருத்தினை இதில் முன்னிறுத்துகின்றார் ஆழ்வார்.

இங்ஙனம் ஆழ்வார் பதிகம் முழுக்க

பால் என்கோ நான்கு வேதப்

பயன் என்கோ?

என்று மாறிமாறித் தடுமாறி நின்றதற்கு ஈட்டுரைகாரர் ஓர் உவமை சொல்லி விளக்குகிறார்.

பெருங்காற்று அடிக்கையில் மரங்களிலிருந்து கீழேவிழுந்து சிதறிக்கிடக்கும் பழங்களை எடுப்பவர்கள், 'இதனை எடுப்போமா? அதனை எடுப்போமா' என்று மனம் சுழன்று அலைவது போன்றதாம் ஆழ்வாரின் நிலையும் என்கிறார் அவர். இதைக்காட்டிலும் பொருந்திய உவமைகூற ஈட்டின் உரைகாரரான நம்பிள்ளை தவிர வேறு யாரால் இயலும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.